சாணம் மொழுகப்பட்ட தரை


 

சாணம் மொழுகப் பட்ட தரை - சமைக்கவும்

படுக்கவும் ஒரேயொரு அறை

வீட்டின் முன்பு விரிந்திருக்கும் முற்றம் - அதில்

ஓயாமல் கலகலத்துக் கொண்டிருக்கும் சுற்றம்


ஒட்டிய  இரட்டை மண் அடுப்பு - கிராமத்துப்

பெண்களுக்கு உக்கார்ந்து நிமிர கடுக்கவில்லை இடுப்பு

காடு வயல் சென்று வரும்போது விறகு - தினம்

வீடு கொண்டு வருமே பெண்ணெனும் உறவு.


பூமுள்ளப் போட்டுத் தீமூட்டத் தழல் - பின்

கங்காகிப் போனதென்றால் எரிக்க ஊது குழல்

வீடெங்கும் உலா வருமே புகை - வெளியே

போகாத அளவிற்கு வீடொரு சிறு குகை


வடிச்சு வச்ச மண்பானைச் சோறு - இரவு

ஆனாலும் கெடலையே பாரு

புளிச்ச தண்ணி கைங்கர்யம் தானே ! - வெயிலுக்குக் 

குடிச்சுப் புட்டா தித்திக்கும் தேனே !


அடுக்கு மாடி வீடெனவே அடுக்கப்பட்ட பானை - அத

உரிமையோடு உருட்டுதையா கருப்புப் பூனை

கிராமத்து வீடொன்றும் நாகரீகம் நுழையா சொர்க்கம்  - இது

மோகமெனும் தீயினில் விழுந்து விடாத வர்க்கம்.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments