வசமா மாட்டிக்கிருச்சு

 


வசமா மாட்டிக்கிருச்சு


கடல் போல விரிஞ்சிருந்த கம்மா , தண்ணி வத்தி குட்டைபோல குட்டையாகிவிட்டது.தூண்டில் போட்டு மீன் பிடிச்சவுக , இப்ப நேரடியாக கம்மாயிக்குள் இறங்கிட்டாக.


ஊர் வெறிச்சோடிக் கெடக்கு.ஒன்றிரண்டடு கெழடு கெட்டக , நண்டு நத்தயத் தவிர எல்லாரும் கம்மாயிலதான் கெடக்காக. கரயில கொஞ்சமும் , கம்மாயில மொத்தமும் என மனுசத் தலைகளால் ரொம்பிக் கெடக்குது கம்மா.மொளப்பாரி சமயத்தில இப்டி ஒரு கூட்டத்தப் பாக்கலாம்.


கைவலையும். பெரியவலையும் , வேட்டியும் , சேலயும் , தாவணியும் வச்சு ஆளாளுக்குப் போட்டி போட்டு பிடிக்காக.தண்ணி நல்லா கலங்கி மண்டியாகி விட்டது. அடியில் கெடந்த பரும்பரும் மீன்கள் வேற வழியின்றி வெளி வரத் தொடங்கின.


ஏலே ... யாரு மகன்டா நீ ?


கனகு மகன் மாமா.


சகதிகுள்ள என்னடா பண்ற ?


அயிர புடிக்கிறேன் மாமா.


அயிர புடிக்கிறேன் ... மயிர புடிக்கிறேன்.மாமா கூட வலயப் புடிடா மாப்ள. பெரிய பெரிய கெண்டயாப் புடிச்சுத் தாரேன்.


ஒன்னும் வேணாம் மாமா. ஒங்க சோலி எதோ அதப் பாருங்க. நாங்களே பிடிச்சுக்கிருவோம்.


ரொம்ப தலப்பிரட்ட புடிச்ச பயலா இருப்பானோ ?! சரி... சரி என்றபடியே கம்மாயுக்குள் இறங்கினான் நல்லையா.


என்ன வேலு மாமா ? நல்லாருக்கிகளா ? மீனு சிக்குதா ?  


எங்க ஊர்ல லங்கோடு கட்டக்கூடிய ரெண்டு பேர்ல வேலு ஒருத்தர். மத்தவர் சீனி.


ஏதோ இருக்கம்யா. என்ன ஒத்தயா வந்திட்டீரு.தொண ஆள இல்லாம ?


அட ஆமா மாமா. இன்னொருத்தனக் கூட்டிவந்தா அவனுக்குப் பாதி மீன் தரணும்.அதான் ஒத்தயா எறங்கிட்டேன். கைவல இருக்கு. ஊண்டு கம்பு இருக்கு. இது போதாதா மாமா ?

 

ஒன்ன மாதிரி எந்தூர்லயும் எவனாலயும் மீன் புடிக்க முடியாது மாப்ள. சரி சரி பிடிங்க.


மாமா தள்ளிக்கோங்க ... விலாங்கு துள்ளிக் குதிக்குது ...


என்னயா சொல்ற ... இதுவரக்கி ஏன் கண்ணுக்குத் தட்டுப்படல ...


மாமா துள்ளிக் குதிச்சு உள்ள போயிருச்சு.


எங்ஙினக்குள்ள ? 


ஒங்க லங்கோடுக்குள்ள. சரியான மீனு மாமா.


யார்ரா இவன் ஒக்காளி ? கிசும்புப் பண்ணிக்கிட்டு ? 

கிண்டலும் கேலியுமாய் சத்தமாய் கெடந்தது கம்மா.


மீசய ஆட்டிக்கொண்டே கெழுத்தி நீந்தி வந்தது.வலயில்லாம கெழுத்திய பிடிக்க மாட்டாக.கழுத்துக்கு ரெண்டு பக்கத்திலும் முள்ளு.ஒரு அடி அடிச்சா வலியில உசிரு போயிரும்.


மண்டிய கலக்கிக்கொண்டே விலாங்கு போற தடம்பாத்தான் நல்லையா. தன் கையிலிருந்த ஊண்டுகம்பால் ஒரு சாத்துச் சாத்த மல்லாந்தது விலாங்கு. முகம் பூரா சந்தோசம். தான் கொண்டு வந்த சருவச் சட்டிக்குள் போட்டு கல்வச்சு மூடினான்.


கெண்ட , உளுவ , குறவ , பன்னிச்செத்த , கெழுத்தி , அயிர  என மீன்கள பிடித்தபடி இருந்தது கூட்டம்.

பெரும்பாலும் உளுவ , குறவ மீன்கள் பொந்துக்குள்தான் அதிகமாக இருக்கும்.


நல்லையா ஒவ்வொரு நண்டுப் பொந்தாக தடவி தடவிப் பார்த்து உள்ளிருந்து கவ்விப் பிடித்து கரயில போட்டான்.


ஒரு பொந்துக்குள் கைய விட்டவனுக்கு சந்தோசம் இன்னவிதந்தானு  இல்ல. எலே ., தள்ளிக்கோங்கல வசமா மாட்டிக்கிருச்சு எனசசொல்லி கையத் தூக்க , வந்தது ஒரு தண்ணிப் பாம்பு. அட ச்சீ...செறுக்கிவில்ல பாம்பா எனச்சொல்ல ., ஊர் அம்புட்டும் கைகொட்டிச் சிரிக்குது. இருந்தாலும் நம்ம நல்லயா மாதிரி பாம்பப் பிடிக்க முடியாதுப்பா.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments