புளுவினிக் கருப்பன்
இப்போதெல்லாம் அவனது நெசப் பெயர் மறைந்து , புளுவினிக் கருப்பன் என்ற பட்டப்பெயரே நிலைத்து விட்டது . ஊர்ச்சாவடியில் , டீக்கடையில் , ஏதேனும் மரத்தடியில் நான்கைந்து பேர் இருந்தால் , அங்கே புளுவினிக் கருப்பன் இருக்கான் எனத் தெரிஞ்சுகுகலாம்.
எதைச் சொன்னாலும் உண்மை மாதிரியே பேசுவான். அவன் பேசும் போது , கேட்கிறோம்.என்பதற்கு அடையாளமாய் உம் கொட்ட வேண்டும்.இடயில , யாராவது சிரிச்சிட்டா , நா பொய் சொல்வனாயா என்பான்.
அன்று அப்படித்தான் கோவில் மரத்தடியில் எளந்தாரிகளாக நாலஞ்சு பேர் உக்காந்திருந்தனர். அப்போது புளுவினிக் கருப்பன் வந்தான்.
எலேய்... இன்னிக்கு என்ன அவுத்துவிடப் போறானோ தெரியலயே என்றான் கனகு.
ஏதோ ஒன்னுல ஆரம்பிச்சு எங்கயோ போயி முடிச்சிருதான். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்றானா இல்லையா ? கொஞ்சம் அமைதியா இருங்கடா என்றான் மூக்கன்.
என்னப்பா , எனக்காகவே காத்திட்ருக்கிறமாதிரியே இருக்கே என்றான் புளுவினிக் கருப்பன்.
இல்ல ... நாளக்கி வடகாட்ல நொங்கு வெட்டலாமானு யோசிக்கிறோம்.
யே ... நானும் வாரனப்பா. பாலருவா இருக்கா ?
இல்லபா ... அதான் ரோசன பண்ணிக்கிட்டு இருக்கோம்.
அட ... கவலய விடுங்க.நா வர்ரேன்ல . அப்புறம் என்ன ?
நீ என்னல பண்ணுவ ?
எலே ஒரு கதய கேளு. போன வருசம் இப்படித்தான். நல்லா உச்சி வெயிலு. நா வறண்டு போயி கெடக்கு.எச்சி கூட வரமாட்டிக்குது.நல்லா குட்டையா ஒரு வெடலப் பனை. கருக்கு மட்டையா மண்டிக் கெடக்கு . நொங்கு சரஞ்சரமா தொங்குது. எனக்குன்னா எச்சி ஊறுது.
சுத்துமுத்தும் பாக்கேன். ஒரு சுடுகுஞ்சி இல்ல.வட காடே மனுச வாட இல்லாம இருக்கு.
அது சரி.மதிய வெயில்ல வடகாட்ல ஒத்தையில ஒனக்கென்ன மயிருபுடுங்கற வேலயா ?
ஏ ... மாப்ள , என்னய்யா பொசுக்குனு இப்படிக் கேட்டுப்புட்ட ?
அவன் கெடக்கான்.நீரு சொல்லும் ஓய் !
சரி சரி. ஒங்களுக்காகச் சொல்லுதேன். கைலிய சடார்னு அவுத்துப் போட்டு , டவுசரோட விறுவிறுனு ஏறுனேன்.
ம்.அப்புறம். ..
நல்லா பன்னருவா மாதிரி இருக்கற ஒரு கருக்கு மட்டய ஒடிச்சு , கிருச்சு கிருச்சு அறுத்து , நொங்க கீழ போட்டு கால்டய மிதித்து பாத்துக்கோ ரெண்டா பிளந்திருச்சு. பெரிய நொங்க பால சீவுற மாதிரி கருக்கிட்ட அறுத்து நொங்க தின்னேன் அஞ்சு நிமிசத்தில பத்து நொங்க.
அப்ப நாளக்கி உறுதியா போயிருவோம்.
அது வந்து நாளக்கி எட்டயபுரம் சந்தைக்கு போலாம்னு இருக்கேன். கெடா குட்டி வாங்கனும் எனச் சொல்லி எழுந்தான்.
சிறுக்கிவில்ல என்னமா ஓட்டுதான் என்ற வார்த்தை காதில் விழுந்தும் , விழாதமாதிரி நடந்தான் புளுவினிக் கருப்பன்.
மு.மகேந்திர பாபு.்
0 Comments