பாரதி
இளசையில்
கவிதையால்
கவர்ந்தான் ஒருவன்.
அவன் பாரதி எனும்
பதின் வயதிலுள்ள சிறுவன்.
தமிழாசிரியர்களுக்கு
பாரதிதான் முன்னோடி.
அவன்
சுதந்திரப் போராட்ட
காலத்தை எடுத்துக்காட்டும்
கண்ணாடி.
கற்றது பன்மொழி.
ஆயினும்
அனைத்திலும் சிறந்ததென
பாரதி நவின்றது நம்மொழி.
பாரதியால்
பெருமை பெற்றது
எட்டயபுரம்.
அவன் பாடல்களால்
வளம்பெற்றது
இக்கவிதை மரம்.
நானும் சுவாசித்தேன்
பாரதி விட்டுச்சென்ற மூச்சுக்காற்றினை
அவன் இல்லத்தில்.
உலகம் உள்ளவரை
உலவுவான் நம் உள்ளத்தில்.
பாரதி
மருதநில மக்களின்
பள்ளுப்பாடுவதில் வல்லவன்.
சாதிபாராது பாடிய நல்லவன்.
பேனா முனை கண்டு
பயந்தது
வெள்ளையனின் பீரங்கிமுனை.
இதயம் தொட
இதம் தந்த பாடல்களைத் தந்தவன்.
மக்கள் எழுச்சிபெற
எரிமலைப் பாடல்களைத் தந்தான்.
அக்னிப் பிழம்புகளாய்
பாடல்களை
அள்ளிவீசிய போது
ஆங்கிலேயன் புலம்பித்தான் போனான்.
பாரதி பாட்டுக்கொரு
புலவன் ஆனான்.
கம்பீரமான
முறுக்கு மீசை.
உள்ளே கிடந்தது
சுதந்திர ஆசை.
முண்டாசுக்குள்
முடித்துவைத்திருந்தான்
செல்லம்மாவுக்கு முட்டாசுக்கவிதையும் ,
வெள்ளையனுக்கு
பட்டாசுக் கவிதையும்.
மதுரை
சேதுபதி பள்ளி
ஆசிரியப் பணிக்காகப்
பாரதியை
அழைத்துக் கொண்டது துள்ளி.
தமிழனின்
அச்ச விலங்குகளை உடைத்தான்.
தமிழின்
உச்ச இலக்கியங்களைப் படைத்தான்.
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறாய் பாரதி
உன் பாடல்களால்.
வாழ்த்திக் கொண்டுதான்
இருக்கிறோம் எங்கள்
தமிழ்த் தேடல்களால்.
மு.மகேந்திர பாபு.
( இன்று பாரதி நினைவு தினம் )
0 Comments