எங்க ஊருச் சாலை (ஒலிபரப்பு -நெல்லை வானொலி )

 


எங்க ஊருச் சாலை (ஒலிபரப்பு -நெல்லை வானொலி )
@ எங்க ஊருச் சாலை
எப்போதும் இளமையாகவே
இருக்கும் .
அதன் இளமைக்கு காரணம்
எப்போதும் சரி செய்யப்படாமலே
இருப்பதுதான் .
@ மழைக் காலங்களில்
தன் மடியில்
மழைத் தண்ணீரை
ஏந்திக் கொள்வதால் ,
ஆறு போலவே இருக்கும் பார்ப்பதற்கு .
@ வேலைக்குச் சென்று ,
வீடு திரும்புபவர்கள்
வீட்டிற்குச் சென்றுதான்
கால் கை கழுவவேண்டும்
என்பதை சாலை
தடை செய்துவிடும் .
@ ஓயாமல் ஓடுகின்ற
ஒன்றிரண்டு பேருந்தும்
அடைமழை முடியும் வரை
அலுப்புத் தீர ஓய்வெடுக்கும் .
@ தேர்தல் காலங்களில்
எத்தனை வேட்பாளர்களுக்கு
தேர்தல் வாக்குறுதிகளுக்கு
சாலை பயன் பட்டிருக்கிறது தெரியுமா ?
@ எங்க ஊருச் சாலையில்
பேருந்தைச் செலுத்தும்
ஓட்டுனரும்,
பயணிகளும்
சில விசேசப் பயிற்சிகளை
பெற்றிருக்க வேண்டும் .
@ இல்லாவிடில் .....
பாவம் அவரை
அடுத்த நாள்
மருத்துவ மனையில் தான்
பார்க்க வேண்டும் .
@ குறைந்த தூரத்தை
நீண்ட நேரம்
பயணம் செய்ய விரும்பும் பயணிகள்
எங்கள் ஊர் பேருந்தில்
பயணம் செய்யலாம் .
@ தவளை மட்டுந்தான்
தாவித் தாவிச் செல்லுமா?
என இறுமாப்போடு கேட்கும் பேருந்து .
@ சில பிரசவங்கள்
பேருந்திலே நடந்து ,
பேருந்தின் பெயர்களைப்
பெற்ற குழந்தைகளும் உண்டு .
@ பேரு பெற்ற பேருந்து
என்பது இதுதானோ ?
@ புதுச் சாலை போடுவோம்
எனவந்த ஜல்லிக்கற்கள்
நாட்கள் பலநகர்ந்ததால் ,
மக்களின் வீடுகளுக்கு
அன்போடு கொண்டு செல்லப்பட்டன .
@ அதனால் ,
எப்போதும்
இளமையாகவே இருக்கிறது சாலை .
மு.மகேந்திர பாபு . - (நன்றி- நெல்லை வானொலி )

Post a Comment

0 Comments