குழந்தை

 


குழந்தை
@ வண்டிச் சத்தம்
கேட்டவுடன்
ஆவலோடு வந்து
காத்திருக்கிறது
வாசலில் குழந்தை .
@ ''அப்பா என்னையும் நாளைக்கு
டூட்டிக்கு கூட்டிட்டுப் போ ''
செல்லப் பேச்சில்
கைதூக்கி நின்று
தூக்கச் சொல்கிறது .
@ அப்பா குளித்து வந்தவுடன்
தூக்குகிறேன் எனச் சொல்லி ,
பொம்மைகளோடு உறவாட
விட்டுச் செல்கிறேன் .
@ குளித்து வந்த உடன்
குழந்தை வருகையில் ,
தவிர்க்க முடியாத
அலைபேசி அழைப்புகள் .
@ தொடர் பேச்சில்
ஏக்கத்தோடு என்னைப்
பார்த்துக் கொண்டிருக்கிறது குழந்தை .
@ உறவினரின் அழைப்பு .
' 'உடனே வா ''
கடைக்குச் செல்ல வேண்டும் .
தவிர்க்க முடியாமல்
புறப்படும் போது,
என்னையும் கூட்டிட்டுப் போ
கெஞ்சுகிறது .
@ '' இருட்டில் பூச்சி
கண்ணில் பட்டு விடும் ''
அப்பா உடனே வந்திருவேன்
சமாதானம் சொல்லி புறப்பட்டு ,
@ நள்ளிரவில் வீடு வந்து சேர்கையில் ,
பொம்மையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ,
பொம்மையோடு
பொம்மையாக குழந்தை .
@ ஆழ்ந்து பெருமூச்சு விடுகையில்
தெறிக்கிறது
குழந்தையின் மீதான
என் ஏக்கப் பெருமூச்சு .

Post a Comment

0 Comments