எனது பள்ளி

 


" எம் பள்ளி நீடு வாழ்க " 


இப்பெரும் விழா

முப்பெரும் விழா.

மறந்து போன நாட்களை - மனம்

திறந்து தரும் விழா.

உள்ளம் உருக ,

கடந்த நாட்களைக்

கனிச்சாறாய்ப் பருக ,

சுதந்திர தினத்தில் வந்த விழா.

அனைவர்க்கும் இன்பமும்,

எழுச்சியும் தந்த விழா.

என் தந்தையின்

தலைமை ஆசிரியர்க்குச் 

சிலை திறப்பு.

இன்று அவர்க்கு

மீண்டுமோர் பிறப்பு.

பதினேழு ஆண்டுகட்குப்

பின்னான வாசம்.

ஆயினும் மாறவில்லை

என் பள்ளியின் மீதான பாசம்.

இந்த விதையை

விதைத்தது பொன்னையா புரம்.

செடியாக வளர்த்து

பள்ளி எனக்கிட்டது உரம்.

இன்றோ மதுரையில்

வளர்ந்துளளது இம்மரம்.

இந்த மரத்தின்

புகழ் பூக்களுக்குக் காரணம்

இந்த மண்.

எப்போதும் உண்டு

இம்மண்ணின் மேலொரு கண்.

முன்பு நான் தரிசு.

இங்கு படித்ததால் கிடைத்தது

ஆசிரியர் எனும்

பணிப் பரிசு.

இது வானம் பார்த்த

கரிசல் பூமி.

மழையும், பள்ளியும்தான்

நமக்குச் சாமி.

இங்கு ,

சுற்றித் திரிந்த காலம்.

வாழ்வின் நிறைவுவரை

நினைவில் வாழும்.

இளைப்பாறிய மரங்களின்

அடியில் மூச்சுக் காற்று

நிறைந்திருக்கிறது.

விளையாடிய களங்களின் அடியில்

பாதச் சுவடு மறைந்திருக்கிறது.

நம் பள்ளியெனும்

கோவிலில் உள்ள

ஆசிரியத் தெய்வங்களின்

பாதம் பணிகிறேன்.

இவர்களின் அருள் 

கிடைத்ததாலே எனக்குள்ளிருந்த

இருள் உடைந்து வெளியேறியது.

என் பள்ளி இல்லையென்றால்

உங்கள் முன் நானில்லை.

உயிர் தந்தது தந்தையும் தாயும்.

உயர்வு தந்தது

பள்ளியும் ஆசிரியர்களும்.

அரை டவுசர் போட்டுத்

திரிந்த காலத்தில்

நான் அடிவாங்கிய

ஆசிரியர்களை நன்றியோடு

நினைத்துப் பார்க்கிறேன்.

அன்று வாங்கிய அடிகள்தான்

இன்று மனநிறைவைத் 

தந்திருக்கிறது.

காயம்படாத மூங்கில்கள்

புல்லாங் குழலாக மாறாது

என்பதைப் பின்னாளில்

உணர்ந்தேன்.

இந்நிகழ்ச்சி

நெகிழ்ச்சியாக இருக்கிறது.

மகிழ்ச்சியாக இருக்கிறது.

புகழ்ச்சியாகவும் இருக்கிறது.

இன்று ,

எனக்கிது மறுபிறவி.

நான் பள்ளி வானத்தில்

பாடித்திரிந்த சிறுகுருவி.

மதிப்பெண்களைப் பெறமட்டுமல்ல,

சமூகத்தில் மதிப்புகளையும்

பெறச்செய்தது என் பள்ளி.

மீண்டும் இங்கே ஒரு

மாணவனாகவே நிற்கிறேன்.

வாழ்வின் நிறைவு வரை

என் பள்ளியில் கற்கிறேன்.

ஒரு பாவலனால்

பெருமை பெற்றது எட்டயபுரமும்,

தமிழகமும்.

ஒரு பள்ளியால் பெருமை பெற்றது

இந்த ஊரும் , எங்கள் பேரும்.

ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும்

எங்களின் சுவாசமும் ,

பள்ளியின் மீதான பாசமும்

கலந்திருக்கும்.

வண்ண வண்ணக் கனவுகள்

எண்ணமெங்கும் வளர்ந்தன.

நம் பள்ளியாலே கனவுகள்

நனவுகாளாக மலர்ந்தன.

பள்ளிக்கால வாழ்விற்கு

ஏது வேலி ?

இப்போது நினைத்தாலும்

செம ஜாலி.

நம் பள்ளி உருவாக்கிய

மாணவர்களோ ஆயிரம் ஆயிரம்.

என்றென்றும் பாடலாம்

பள்ளி நீடுவாழ பாயிரம் ஆயிரம்

தோன்றின் புகழொடு தோன்றுக

பள்ளி நமக்குச் சொன்ன வள்ளுவம்.

இதைக் கருத்திலேற்றி வெல்லுவோம்.

வாழ்க்கை தந்து

வாகை தந்த பள்ளி.

மீண்டும் மீண்டும் வருவோம்

மகிழ்வால் துள்ளி .

நன்றி . வணக்கம்.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments