நதிகளை இணைப்போம்
----------- ------------------
இந்தியத் தாயின்
உச்சி முதல் உள்ளங்கால் வரை
நரம்புகளாய் நதிகள்.
நாடு நலம்பெற
தீட்டப்பட வேண்டும் நதிகளை
இணைக்க நல் விதிகள்.
நதிகள் இணைந்தால்
பாலையும் சோலையாகும்.
நதிகளை இணைப்பதே
நம்மின் முதல் வேலையாகும்.
தண்ணீர்
தரணியின் பொதுச் சொத்து.
மனமும் வனமும்
வளம்பெற முதல் வித்து.
மாநிலம் கடந்து மக்களின்
உள்ளம் இணைந்தால்
மகிழ்ச்சியில்
தாய்நிலம் கடந்து வெள்ளம்
ஓடோடி வரும்.
ஒரு மாநிலத்தின்
அணையில் அடைபட்டுக் கிடப்பதைவிட ,
கால்வாய் வழி காலாற
கடந்து செல்லவே விரும்புகிறது தண்ணீர்.
பிற மாநிலத்திற்குச்
செல்லாத போது
கொட்டப் படுகிறது
மக்களின் கண்ணீர்.
முடியுமா எனக்கேட்டால்
முடியும் என்பதே விடை.
நதிகளை இணைக்கக்
காத்திருக்கிறது நல்ல படை.
ஒருசில மாநிலம் நதிகளால்
பசுமையில் இளமையாயிருக்க,
ஒருசில மாநிலம்
வறட்சியால் முதுமையிலிருப்பது
என்ன ஞாயம் ?
தொடருதே இந்த மாயம்.!
மண்ணிலிருந்து விண்ணைத்தொட்ட
நமது விஞ்ஞானம்,
மண்ணிலிருந்து பிற மாநில
மண்ணை இணைக்க,
நதிகளால் நிலங்களை நனைக்க
விரைவில் முடியும்.
அன்றுதான் இந்திய தேசம்
இனிமையாய் விடியும்.
வாருங்கள் நண்பர்களே !
கரம் கோர்ப்போம்.
வானம் தரும் அமிழ்தினை
நதிகளால்
அனைவர்க்கும் வார்ப்போம் !
மு.மகேந்திர பாபு.
படம் - நதி இணைப்புப் போராளி திரு.நதிகள் இணைப்பு சர்தார் .்
0 Comments