கரிசல் பூமி

 

கரிசல் பூமி
உலர்ந்த உதடுகள்
இவ்வார்த்தையை
உச்சரிக்கும்போது
உள்ளம் பருத்திப் பூவாய்ச் சிரிக்கும் .
கோடையில்
நிலத்தின் வயிறு
கிழிசல் விரிசல்களால்
வானம் பார்த்து
வாய் பிளக்கும் .
மஞ்சனத்திப் பூ
இங்கே மல்லிகைப்
பூவாய் மணக்கும் .
காலம் எல்லாவற்றையும்
மாற்றி விட்டதே !
திலா கிணறு
மண்ணோடு மண்ணாகி விட்டது.
கமலக் கிணறு காணாமல்
போய்விட்டது .
பம்பு செட் படுத்து விட்டது .
வீட்டருகே இருக்கும்
வயல் முட்புதராகி விட்டது .
அமைதிக்குப் பஞ்சமில்லை .
அவ்வப்போது வெட்டு குத்துக்களுக்கும்தான் .
கருத்திருக்கும்
மக்களின் முகம்
மேகங்கருக்கும் போது
பிரகாசமாகும் .
பரந்திருக்கும் மேகம் போல
மக்களின்
மனசும் இருக்கும் .
நல்ல தங்காள் காலத்தில்
இருந்த பஞ்சம்
இன்னும் இப்பூமியில்
மிச்ச மிருக்கிறது .
வானம் வசப்பட வில்லையெனில்;
பாலையாய் மாறும்
கரிசல் பூமி .
வெம்மை விழிகளில் பட்டு
கண்ணீருக்குப் பதில்
ரத்தமே வரும் .

Post a Comment

0 Comments