ஓலைக் கொட்டானும்,ஓசோன் ஓட்டையும்

 

ஓலைக் கொட்டானும்,ஓசோன் ஓட்டையும்

ஊருக்கு மாமா
வருகிறார்
என்றாலே மகிழ்ச்சிதான்
காரணம் ,
மாமாவின் இரண்டு கைகளிலும்
ஐந்தடுக்கு டிபன் கேரியரைப்போல்
ஓலை கொட்டானில்
தின்பண்டங்கள் வாங்கி வருவதால் .
கீழ் அடுக்கிலிருந்து
சேவு ,மிச்சர் ,சீவல் ,
கருப்பட்டி மிட்டாய் ,
சீனி மிட்டாய் என
ஒவ்வொரு அடுக்கும் நிறைந்திருக்கும்
மாமாவின் மனசைப்போல் .
பல நாள் கொட்டனுக்குள்
இருந்தாலும்
நமத்துப் போகாமல்
முருமொருப்பாகவே இருக்கும் .
தின்று முடிக்கப்பட்டபின்
கொட்டான்கள்
கடைக்குச் சென்று பொருள் வாங்கவும்
விதைப்பு நேரத்தில்
விதைப் பெட்டியாகவும் ,
வீட்டில் பொருள் போட்டு வைக்கவும்
பல நாட்கள் கழிந்த பின் ,
ஓட்டையாகி விட்டால் ,
அடுப்பெரிக்கவும் ,
என பல அவதாரங்கள் எடுக்கும் .
இன்றெல்லாம் கொட்டங்களை
காண்பதே
அரிதாகி விட்டது .
ஒரு ரூபாய்க்கு
மல்லிதழை வாங்கினாலும் ,
பாலித்தின் கவர் கொடுங்க
எனக் கேட்கும் மனநிலை .
மஞ்சள் பை
தூக்கிச் செல்வது
கௌரவ குறைச்சளாகி விட்டது .
இயற்கையோடு
நம்மையும் தின்று கொண்டிருக்கிறது
பாலித்தின் தாள்கள் .
வாழ்வு தந்தது கொட்டான்,
மனிதன் அதை விட்டான் ,
மாசினால் கெட்டான்,
சாகும் வரை
துன்பப் பட்டான் .

Post a Comment

0 Comments