தாத்தா

 

தாத்தா 


கும்பாவில் கஞ்சி குடித்து

தெம்பாய் நடக்கும் தாத்தா

வம்பாய் வார்த்தைகளை

விட மாட்டார்.


அரைஞான் கயிறில்

பின்புறம் தொங்க விடப்பட்ட

வெட்டருவாள் 

நடைக்கேற்ப நடனமாடும்.


கத்திக் கம்பினால்

சீமைக் கருவேல மரத்தின்

தேவையற்ற சிறுகுச்சிகளை அகற்றி

வெட்டுவதற்கேற்ப இலாவகமாக்குவார்.


வலது கை அரிவாளால்

கொப்பினை வெட்டி

இடது கைக்கு மாற்றுவதே

ஒரு வித்தையாக இருக்கும்.


செருப்பை மீறி 

காலில் குத்தும்

முட்களை எடுக்க

முள்வாங்கி ஆயத்த

நிலையில் இருக்கும்.


தாத்தாவின் மறைவிற்குப் பின்

தொழுவத்தில்

தொங்க விடப்பட்டிருந்த

வெட்டருவாள் 

ஆடிக்காற்றிற்கு அசைந்தபடி

நினைவூட்டிக் கொண்டிருக்கிறது

மருத்துவ மனைக்கே போகாத

ஒரு மாபெரும் தலைமுறையின்

கம்பீரத்தை !


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments