முதல் பயணம் - பெரியகுட்டி மடுவு

 

                   பெரியகுட்டிமடுவு


   சார் ... ரெண்டு பெரிய குட்டி மடுவு என்றேன் நடத்துனரிடம்.புன்னகைத்துக் கொண்டே பயணச்சீட்டுக் கொடுத்தவர் என் நண்பனிடம் பேசியதிலிருந்து , ஏங்கண்ணு திருநவேலியா என்றார்.ஆமா சார் என்றேன். எங்கே போனாலும் நம்வாய்  ( பேச்சு ) காட்டிக் கொடுத்துவிடுகிறது.

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதியம் இரண்டே முக்கால் மணிக்கு அருநூத்துமலை என்ற பெயர்ப்பலகையிட்ட பேருந்தில் ஏறி பயணித்தோம். இதுதான் முதல் பயணம் சேலத்தில்.கூட்டம் குறைவாகவே இருந்தது. பயணச்சீட்டுக் கொடுத்து முடித்த பின் மீண்டும் அருகில் வந்தார் நடத்துனர்.

பெரிய குட்டி மடுவுல யாரப்  பாக்கணும் ? என்றார். ஏதும் விசேசத்திற்குப் போறிங்களா ?  என்றார்.

பள்ளிக்கூடத்திற்கு சார்.

என்ன விசயம் ?

வாத்தியார் வேலைக்கு.

ஓ... அப்டியா ?  ரொம்ப சந்தோசம் என்றவரிடம்  ,  சார் ஊர் வந்தவுடனே சொல்லுங்க எனச்சொல்லி விட்டு ,  வந்துவிட்டதா என்றேன்.

இப்பதான்  அயோத்தியாப் பட்டணம் வந்துள்ளது.நானே சொல்கிறேன் என்றார். பல கனவுகளுடன் இருந்த எங்களை பேருந்து சுமந்து கொண்டு சென்றது வானத்தில் பறப்பதைப் போலெ  இருந்தது.

வாழப்பாடிலாம் இறங்குங்க என்றார். கூட்டம் குறைந்து , பின் கூடியது. ஆத்தூர் ,  துறையூர் என கைகாட்டி நடப்பட்டிருந்தது.நான் நடத்துனரைப் பார்க்க ,  அவர் தன் கண்ணாலே பொறுங்க எனச் சொல்வதைப் போல இருந்தது.

நெடுஞ்சாலையிலிருந்து இடதுபக்கச் சாலையில் பேருந்து திரும்பியது. 

தென்னை மரங்கள் ் எுஅடர்ந்து குளுமையான காற்று வந்தது. நார்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள் ஆண்களும் பெண்களும்.

பத்து நிமிடப் பயணத்திற்குப் பின் பேளூர் இறங்கு என்றார் நடத்துனர்.

சார் ,  பெரிய குட்டி மடுவு ...

சொல்றேன்  தம்பி.இன்னும் வரல.

பஸ்ல ஏறி முக்கால் மணி நேரமாச்சு.இன்னும் வரலையே என்றான்  என் நண்பன் கருப்பசாமி.

ஐந்து நிமிட ஓய்வில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு , மீண்டும் புறப்பட்டது பேருந்து.

பாக்கும் ,  தென்னையும் என பாக்கும் இடமெல்லாம் பசுமை.மீண்டும் ஓர் அரை  மணி நேரப் பயணம். நடத்துனர் சிரித்துக் கொண்டே தம்பி ,  ஊர் வந்து விட்டது.இந்தப் பஸ் மலைக்குப் போய் திரும்பி வரும். இங்கேயே  இருங்க என்றார். நன்றி சொல்லி இறங்கினோம்.

மணி  நாலு. சாலையை ஒட்டி  இருந்த பயணியர் நிழற்குடையில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார்.

அக்கா ,  இங்க பள்ளிக்கூடம் எங்ன இருக்கு ?  என்றேன்.

இங்க ஸ்கூலு இல்ல கண்ணு என்றார்.

இது  பெரிய குட்டி மடுவுதானே ?

இல்ல கண்ணு. இது கண்கட்டி ஆலா விலக்கு. அந்தா தெரியுது பாரு.அது சின்னக் குட்டி மடுவு. அப்பால  மூனு  கிலோ மீட்டர் நடந்தா பெரிய குட்டி மடுவு.

எங்களுக்கு கண்ணைக்கட்டி விட்டதைப்  போல் இருந்தது கண்கட்டி ஆலா விலக்கு.

எத்தனை கிலோ மீட்டர் இருக்கும் ?

பக்கந்தான் கண்ணு. அஞ்சாறு கிலோ மீட்டர்தான்.

என்னாது ?  அஞ்சாறு கிலோ  மீட்டர் பக்கமா  ?

சரிக்கா .  பஸ் எப்ப வரும் ?

இப்ப நீங்க வந்த பஸ்தான்.

பெரிய குட்டி  மடுவுக்கு ?

பஸ்லாம்  இல்ல கண்ணு.நடக்கத்தான் செய்யோணும்.

அப்ப  தினமும் பத்து ,  பனிரெண்டு கிலோமீட்டர் நடக்கனுமா ? என நண்பன் குட்டி போட்ட பூன போல முனங்கினான்.


ஊர்ப் பேர்ல குட்டிய வச்சிட்டு ,  கட்டி விட்டாங்கடா நம்ம கண்ண என நினைத்தோம்.  இது நடந்தது  06 - 07 - 2000.

பயணம் தொடரும் ...


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments