75 ஆம் ஆண்டு சுதந்திர தின அமுதப்பெருவிழா - சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாறு / 75 IYEAR NDIPENDANCE DAY - FREEDOM FIGHTERS HISTORY

 


            75 ஆம் ஆண்டு     சுதந்திர தின

               அமுதப் பெருவிழா 

                       15 • 08 •2022


ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுந்தரம் 

அடைந்துவிட்டோமென்று 

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு

நாம் எல்லோரும் சமமென்பது 

உறுதியாச்சு---

                       -- சுப்பிரமணிய பாரதியார் --


எங்கும் ஆனந்த பரவசம் பொங்கிக்கூடிக்களித்திடும்

 திருநாளாக சுதந்திர தினம் கொண்டாட்டம் !

அன்னியர் ஆட்சியிலிருந்து விடுபட்டு,விடுதலைப்பெற்று

வேற்றுமையில் ஒற்றுமைக்கண்டு கொண்டாடும் திருநாள்!

இந்தத் தியாகங்கள் நிறைந்த சுதந்திரமானது 

நாம் இன்று சுவாசக் காற்றை சுவாசித்து இன்புற்றிருக்க !

நம் முன்னொர் அன்றே துன்புற்றனர்!

கண்ணீரும் செந்நீரும் சிந்திய அவர்கள்

பண்ணிய தியாகங்கள் தான் எத்தனை எத்தனை !


தாளாத துயரங்களை தளராத மனத்துடன் 

உறுதி கொண்ட நெஞ்சினில் 

உரமேரிய உடலுடன் உழைத்து ஓய்ந்து!

சதிகாரர்கள் விரித்த வலையில் வீழ்ந்து மாய்ந்த!

அந்த ஒப்பற்ற உறவுகளின் உயர்ந்த 

தியாகத்தை எண்ணி ,எண்ணி நெகிழ்ந்து 

நாற்றிசையிலும் நன்றிப் பூக்களைப் பரப்பி

நனியுள்ளவரை இருகரம் கூப்பி -- அவர்கள்

தாழ்பணிந்து வணங்கிடுவோம்!

இந்தியச் சுதந்திர தினம்.2022- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 - ஆம்

இன்று இந்தியா தமது 75- வது சுதந்திர தினமாக கொண்டாடி மகிழ்கிறது. இந்த சிறப்புமிக்க தருணத்தை மேலும் சிறப்பாக்கும் விதமாக இந்திய அரசு ' தேசம் முதன்மை , எப்போதும் முதன்மை ' ' ஆசாதி கா அம்ரித் மோகத்சவ் 'என்ற கருப்பொருளில் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றது. இந்த  சிறப்புமிக்க நிகழ்ச்சியைக் குறிக்கும் விதமாக இருநூறு மில்லியன் மூவர்ணக் கொடிகளை ஏற்றுவதை இந்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த நாள் இந்தியர்கள் அனைவருக்கும் சிறப்புமிக்க நாளாக திகழ்கின்றது.சுதந்திர தின நாளில் இந்தியப் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றி மக்களுக்காக உரையாற்றுவார்.ஆகஸ்ட் - 15 - ம் நாள் என்பதுஓர் உன்னத நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிர் ஈந்து தியாகம் என்னும் ஒளி ஏற்றி, அடிமை இருள் அகற்றிய இனிய நாள்.பீரங்கிக் கொண்டு தாக்கியவர்களை தீரத்துடன் எதிர்க்கொண்டு சுதந்திர முழக்கத்தை வெளியிட்டு வெற்றிக்கண்ட நன்னாள்.

தன்னையும், தன் குடும்பத்தையும் நினையாது, முப்பொழுதும் நாட்டின் விடுதலை மற்றும் நலன் பற்றியே சிந்தித்து, செயலாற்றி விடுதலைக் கனல் மூட்டிய வீரம் கொண்டவரல்லவா   நம் எட்டையபுரத்து ஏந்தல். அவரதுதன்னிரற்ற ,தனியாத சுதந்திர வேட்கையைப் போற்றும் பொன்னாள். இது போன்றே எண்ணற்ற இந்தியத மக்கள் போராடிப் பெற்றத் திருநாள்.

ஆண்,பெண் என பேதமற்று அனைவரும் பங்குக்கொண்டு வெற்றிபெற்ற ஒரு நாள்.இப்போர் அறப்போராட்டமாக ஒரு புறம் தொடர்ந்த போதும் தீரத்துடன் எதிர்த்து போரடியவர்கள் மற்றொருப்புறம் .இவர்களில் ஆண்கள் மட்டுமல்லாது,   வீரமங்கையரும் விழுப்புண் பெற்று விடுதலைக்காகப் போராடினர். அவர்களின் வீரம் போற்றப்பட வேண்டியவை இன்று பேசப்பட்ட வேண்டியவை.பலரது விடுதலை வேட்ககையும்,  தியாகமும் தோண்டியெடுக்கப்பட்ட நீண்ட வரலாற்றில் இந்திப் பெண்களின் வீரமும்,வீரத்தமிழச்சி களின் தீரமும் ஆங்காங்கே காவியம் படைக்கும் கண்ணீர்க் கதைகள் எல்லாம் இன்றைய தலைமுறைக்காணா மறக்கப்பட்ட கதைகளாயின.....

இதுபோன்ற நன்னாளிலேனும் வருங்காலத் தலைமுறைகள்   அறிந்துக்கொள்ளும் பொருட்டு மறுக்கப்பட்ட வீரமங்கையரின் வீரதீர வரலாற்றைப் பேசவேண்டும். வீராங்கனைகளைப் பற்றி சொல்லும்போது ஜான்சி ராணி இலட்சுமி பாய்,வீரமங்கை வேலுநாச்சியார் அளவிற்கு ,அவர்களின் வெற்றிக்கும்   பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருந்த உதவி வீராங்கனைகள் பற்றிய செய்திகள் அறியப்பட்ட வில்லை.அவர்கள் தீரம் பற்றி பேசப்படவில்லை.மறக்கப்பட்டவர்களின் வரலாறும் திறக்கப்பட வேண்டும் நாளைய சமுதாயம் அறிந்து கொள்வதற்காக.. அவர்களின் பங்கு உயர்வானது, உன்னதமானது, உறையவைப்பது,உண்மையைக் கூறுவது,உறுதிக்கொண்டது. தான் இறுதியெனத் தெரிந்தும் உறுதியாகப் போராடிய உயர்ந்த தியாகிகள் அவர்கள்.அனைவருக்கும் தெரிந்த அளவில் அறியப்பட்ட வர்கள் ஜான்சி ராணி,சரோஜினி நாயுடு, விஜயலட்சுமி பண்டிட்,அன்னி பெசன்ட்,வேலுநாச்சியார் தில்லையாடி வள்ளியம்மை போன்றோர் ஆவர். இலட்சுமிகெளல், லீலாவதி அம்மையார், இராணி சென்னம்மா, ராணி அவந்திபாய், ஜல்காரி பாய்,ஜானகி ஆதிநாகப்பன், ருக்மணி  அம்மாள்,லட்சுமிபதி,சுசேத கிருபளானி, வடிவு நாச்சியார், குயிலி ..... இன்னும் பல வீரதீர மங்கையர்.


ஜல்காரிபாய் :

ஜல்காரி பாய் ஜான்சி அருகேயுள்ள ' போஜ்லோ' என்னும் கிராமத்தில் 1830- ஆம் ஆண்டுப் சடோபா சிங்-- ஜமுனா இணையரின் மகளாகப் பிறந்தார்.இளம் வயதிலேயே தாயை இழந்தார்.எனவே தந்தையால் ஒரு ஆண் போலவே வீரப்பெண்ணாக வளர்க்கப்பட்டார். ஆயுதங்களைக் கையாளவும், குதிரை யேற்றமும் திறம்பட கற்றுத் தேர்ந்தார்.ஒரு சமயம் காட்டில் புலியால் தாக்கப்பட்ட போது தனது கோடாரி  யால் அப்புலியை வெட்டிக் கொன்றார். அன்றிலிருந்து அவரது புகழ் மின்னலெனப் பரவியது.


" அச்சமில்லை அச்சமில்லை 

அச்சமென்பதில்லையே 

உச்சின்மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் 

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்பதில்லையே"

என்னும் மகாகவியின் வரிகளின் படி அச்சம் அற்றப் பெண்ணான ஜல்காரி பாய் செல்வந்தர் ஒருவர் வீட்டில் கொள்ளையிட வந்த கொள்ளையரிடம் சவால் விட்டு  அவர்களைப் பின்வாங்கச் செய்தார். இராணி லட்சுமி பாயின் பீரங்கிப் படையைச் சேர்ந்த பூரன் சிங் என்பவரை மணந்தார்.இதன் மூலம் இராணி லட்சுமி பாய் அறிமுகம் ஏற்பட்டது. இவரது வீரச்செயல்களைக் கேள்வியுற்ற அரசியார் ஜல்காரிபாயை பெண்கள் படையில் இணைத்துக் கொண்டார். துப்பாக்கி சுடுவதிலும், பீரங்கியை இயக்கவும் திறம்பட தனது திறமையை மேம்படுத்திக் கொண்டார்.இவர் உருவத்தில் ஜான்சி ராணி போலவே காணப்பட்டார்.இதனால் லட்சுமி பாய்க்கு  ஜல்காரி மீது தனிப்பற்று ஏற்பட்டது. ஆங்கிலேயரை எதிர்த்து 1857- ம் ஆண்டில் நடந்த இந்தியக் கிளர்ச்சியின் போது ஜான்சிப் போரில் பங்கு வகித்த முக்கிய போராட்ட வீராங்கனையாக வாளேந்திதியவர்   ஜல்காரிபாய்.வலிய குடும்பத்தில் பிறந்த போதும் வலிமையுடையவராகத் திகழ்ந்தார்.தன்னலமற்ற நற்செயல்களால் அரசியாரின் முக்கிய முடிவுகளை முதன்மையாக்கும் முயற்சியில் முன்னிலைப் பெறும் முக்கியமானவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.அரசியாரின் முக்கிய முடிவுகளில் பங்குபெறும் ,அறிவுரை வழங்கும் நிலைக்கு உயர்த்திருந்தார். இந்தியக் கிளர்ச்சி நடந்த போது ஜான்சிப் போரின் உச்சகட்டத்தில்,ஜான்சி ராணியைக் காப்பாற்றும் பொருட்டு ,ஜல்காரிபாய் ஆங்கிலேய அரசை ஏமாற்ற ஜான்சி ராணி லட்சுமி பாயைப் போல உடையணிந்த படைக்குத் தலைமைத் தாங்கி வழிநடத்தி, ஜான்சி ராணியை கோட்டையை விட்டுப் பாதுகாப்பாக வெளியேற உதவி செய்தார்.பின் படையை முன்நடத்தி மிகுந்த தீரத்துடன் போரிட்டார். இருப்பினும் இறுதியில் பிடிபட்டார். ஆங்கிலேயர்கள் ஜான்சி ராணியை பிடித்துவிட்டொமென எண்ணி என்ன செய்ய வேண்டும் எனக் கேட்க,தூக்கிலிடுங்கள் என துணிச்சலுடன் சொன்னார்.பின்பு இவர் ஜான்சி ராணி இல்லை என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் ,ஜல்காரி பாயின் வீரத்தையும், தலைவி விசுவாசத்தையும் உணர்ந்து ஜல்காரிபாய்க்கு மிகுந்த மரியாதை செய்து விடுதலை செய்தனர்.

வடிவு நாச்சியார் :

   வீரத்தின் விளைநிலமான வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கனாரின் மனைவியுமான  வடிவு என்னும் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆங்கிலேய அதிகாரத்தை எதிர்த்த முதல் தற்கொலைப் பெண் போராளி.தமிழக சுதந்திர போராட்ட வரலாற்றை ஒரு உச்சக்கட்ட மகத்தான பாதைக்கு கொண்டுச் சென்றவர்கள் இந்த் தம்பதியினர். இவர்கள் பெயர்கள் அறியப்படாததாகவே உள்ளது.இந்தியச் சுதந்திரப் போர் வரலாற்றில் பல ஆயுதப் போர்கள் அரங்கேறியுள்ளன.அவற்றில் முதல் தற்கொலை படை போர் நடத்திய இடம் தமிழ்நாடு என்பது வீரம் செறிந்த வரலாறு அல்லவா ? இந்து ஈடிணையற்ற தியாகம் அல்லவா ? வீரப்பாண்டியரின் தானியக்கிடங்கும், ஆயுதக் கிடங்கும் வீரன் தளபதி சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் இருந்தது. 1799- ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறி மீது படையெடுக்கும் காரணத்திற்காக ஆங்கிலேய படை பாஞ்சாலங் குறிச்சிக்கு வெளியே உள்ள கரிசல் காட்டில் முகாமிட்டிருந்தது .பீரங்கிகள்,வெடிமருந்துகள்,மற்றும் துப்பாக்கிகளுடன் ஆங்கிலேயப்படை குவிக்கப்பட்டிருந்தது. 1799- ம் ஆண்டு செப்டெம்பர் -8-ம் நாள் சுந்தரலிங்கம் தனது மாமன் மகளான வடிவுடன் ஆடு மேய்ப்பவர்கள் போல வேடமிட்டு,ஆங்கிலேயர்கள் வெடிமருந்து பகுதிக்குள் சென்றனர்.தீப்பந்தங்களைத் துணைக் கொண்டு சுர்தரலிங்கமும், வடிவம் ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்குக்கு ள் சென்று தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.அப்போது பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது.இதன்காரணமாக ஆயுதமற்ற ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை எட்ட முடியாமல் திணறினர். இதனையடுத்து ஆயுதங்களும் , படைவீரர்களும் பாஞ்சாலங்குறிச்சி வர நீண்ட நேரம் ஆகிறது.இதனா ல் ஆங்கிலேயர்களால் கோட்டையை நெருங்க காலதாமதம் ஆனது.இந்த இடைவெளியே கட்டபொம்மனும், படைகளும் தப்பிக்க துணைபுரிந்தன. 

வேலுநாச்சியார் - குயிலி:

சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை வெள்ளையர்கள் அதிகாரம் சுட்டுக் கொன்றதன் விளைவாக, வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார்.அப்போது ஆங்கிலேயர்களுக்கு உளவு பார்க்கச் சென்ற வெற்றிவேல் என்பவரை குயிலி என்றப் பெண் தனது வாளால் வெட்டிக் கொன்றாள். இதனைக் கேள்வியுற்ற வேலுநாச்சியார் தனது மெய்க்காப்பாளராக குயிலியை அமர்த்திக் கொண்டார். 1780- ஆம் ஆண்டு வேலுநாச்சியார் மானாமதுரை ,திருப்பூர்,காளையார் கோவில் திருப்புவனம் ஆகிய இடங்களை வெள்ளையர்களி டமிருந்து மீட்டார்.மருது சகோதரர்கள் மற்றும் ஹைதரலி போன்றோர் உதவியுடன் சிவகங்கையை மீட்டெடுக்க படையெடுத்தார் வேலுநாச்சியார். அப்போது சிவகங்கை அரண்மனை அருகேயுள்ள இராஜராஜேஸ்வரி கோவிலுக்கு அருகில் தான் ஆங்கிலேய படைக்கிடங்கு இருந்தது.எனவே பொதுமக்கள் அங்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.ஆனால் நவராத்திரி விழா அன்று பெண்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அப்பெண்களுடனே பெண்கள் படையினரும் ஆயுதங்ளை மறைத்துக் கொண்டு கோட்டைக்குள் சென்றனர். இதனைப்பயன் படுத்திக் கொண்ட குயிலி தன் உடல்முழுவதும்   எண்ணெயை ஊற்றிக் தீவைத்துக் கொண்டு ஆங்கிலேய  வெடிமருந்து கிடங்குக்குள் பாய்ந்து சென்று தற்கொலைத் தாக்குதலை நடத்தினாள். இத்தாக்குதலில் ஆங்கிலேய கிடங்டில் இருந்த வெடிமருந்தும்,ஆயுதங்களும் எரிந்து அழிந்தன.இந்த நிகழ்ச்சியே சிவகங்கையை மீட்க வேலுநாச்சியாருக்கு பேருதவியாக இருந்தது.என வரலாற்றின் பக்கங்கள் நீண்டுக் காணக்கூடியதாக உள்ளன. உண்மை வரலாறு உணரப்பட வேண்டும்.நமது தொன்மையை போற்றவும்,பாதுகாக்கவும் அதன் ஆணி வேர்களைப் பழுதுபடாமல் பாங்குடன் மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும்.ஜான்சி ராணி ,வேலுராச்தியார் மட்டுமில்லாமல், அவர்களின் உதவியாக, உண்மையாக, உறுதுணையாக இருந்து, தங்கள் தலைமையே இறையாக, தாய் நாட்டைக் காப்பதே கடமையாக எண்ணி ,மேலும் தங்களது இன்னுயிரை ஈந்துஇன்று முன்னேறிய நாடு களில் வரிசையில் இந்திய நாடும் நிமிர்ந்து நின்று அணி செய்ய, ஒளிர ஒளி தந்த உயர் தியாகிகளின் மறக்கப்பட்ட வரலாறுகளை இன்றைய தலைமுறையும், வருங்கால தலைமுறையும் அறிந்திட வகை செய்வோம்  நாட்டின் விடுதலைக்காக தங்கள் நலன்கெட பாடுபட்ட நல்லோர்களை நாளும் போற்றி வணங்குவோம்.!!

வெல்க பாரதம்!    வாழ்க மறவர் வீரம் !

கட்டுரை 

திருமதி.தமிழ் தென்றல் , தமிழாசிரியை , தருமபுரி.

Post a Comment

0 Comments