கல்வி வளர்ச்சி நாள் !
தமிழர் நெகிழ்ச்சி நாள்!
15 • 07 • 2022
ஒன்பதாண்டு கால ஆட்சியே ஆயினும்
ஓங்கிப் புகழ் கொண்டு திகழ்கின்றதே- எதனால்
கல்வியெனும் கடலின் ஆழம் கண்டதனால்
அகிலமெங்கும் புகழ்ச்சி - தமிழர்
மனமெங்கும் மகிழ்ச்சி ! - எவ்வாறு
பாரதியின் எண்ணமாக எழுச்சிமிக்க
செயலாலே ஏற்றம் பல காண்கின்றோம் !
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் ,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- மகா கவி --
என்னும் முதன்மைக் கவிஞரின் முத்தான வரிகளுக்கு சத்து
மிகுந்த சாசனமாக தமது கருத்தை நிலை நாட்டினார் ஒர் தமிழனர் .பாரதமே அதிசயத்து, ஆர்வம் கொண்டு , உற்று நோக்கி தலைவணங்கிய மிகப்பெரிய சாதனை , கல்வியைப் போற்றி , அறியாமையை அகற்ற அகல்விளக்காம் கல்விக் கண்ணை ஒளி பெறச் செய்த, அறிவின் தூண்டு கோல், அரிய பொக்கிஷம், எளிமையின் விளக்கம் ,கர்மவீரர் காமராசரின் கல்வி வழங்கும், கடமையின் முதன்மைச் செயலைக் கண்டு மகிழ்ந்து வையம் வாழ்த்தியது.!
கல்வி தந்த கருணைமிக்க வள்ளலின் பெருமை மிக்க செயலான கல்வி வளர்ச்சியின் கன்னல் சேவையைப் போற்றும் விதமாக அவரின் பிறந்த தினமான ஜுலை 15 - ஆம் நாளை ஆண்டுதோறும் "கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2006 - ஆம் ஆண்டு முதல் காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த வளம் மிகுந்த வரலாற்றை வானுயர்த்தும் வண்ணம் தமிழக மாணவ , மாணவியர் எடுக்கும் புண்ணிய விழாவாக கல்வி வளர்ச்சி நாள் பள்ளிகள்தோறும் மகிழ்ந்து சிறப்பிக்கப் படுகிறது.
நிதி பற்றாக்குறையிலும் நீதி காத்தவர்:
நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி இராஜாஜியால் மூடப்பட்ட ஆறாயிரம் பள்ளிகளையும் திறந்து கல்விக்கு கண் கொடுத்த வள்ளல் காமராசர் . கல்வியை ஒரு பிள்ளைக்கு அளிப்பதன் மூலம் நாடு முன்னேற்றப் பாதையில் பயணித்து சிறக்கும் என்பதில் மிகுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். "கல்வியில் சிறந்த தமிழ்நாடு " என்ற பாரதியாரின் திரு வாக்கை , தன் உழைப்பால் உருவாக்கி மகிழ்ந்து , கல்லாதவர் என்னும் நிலைதனைக் காண இராஜாஜியின் குலக்கல்வி முறையை விடுத்து அனைவருக்கும் சமமான , பாமரனும் படிப்பைப் பெற கட்டாய இலவசக் கல்வியை வழங்கினார். ஆம்...தன் ஆட்சியில் கல்விக்கே முதலிடம் அளித்தார் . 1957 - ஆம் ஆண்டு 15800 ஆக இருந்த பள்ளிகள் 1962 - ல் 29000- ம் ஆக உயர்ந்தது .
தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 16 - இலட்சத்திலிருந்து நாற்பத்தெட்டு இலட்சமாக உயர்ந்தது.அதில் பதினாறு இலட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் மூன்று இலட்சம் உயர்நிலப் பள்ளிகள் 13 - இலட்சமாக உயர்ந்தன.
தமிழ் வளர்ச்சியில் தளர்வில்லா பணி :
தமிழ் மொழியைத் தன் முழு மூச்சாகக் கொண்டு அதன் வளர்ச்சிக்கென பல்வேறு பாதைகளை வகுத்தவர் காமராசர்.பல்வேறுபட்ட வளர்ச்சிகளைத் தமிழன் அடைய , ஆழமாக ஊன்றப்பட்ட வித்தாகவும், தமிழர் சொத்தாகவும் மிளிர்ந்தார் காமராசர். இவரது முயற்சியாக 1956 - ம் ஆண்டு சட்டசபையின் சார்பாகத் தமிழை ஆட்சி மொழியாக்கும் மசோதாவைத் தமிழன்னையின் மடியில் சமர்ப்பிக்கிறேன்என பெருமையுடன் நிதியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அறிமுகம் செய்ய , அவற்றை நிறைவேற்றினார் காமராசர். அது நாள் வரை ஆங்கிலத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டு வந்த வரவு -- செலவு அறிக்கை முதன் முறையாக காமராசர் ஆட்சியில் 1958 - ஆம் ஆண்டில் தமிழ்ப் படுத்தி சமர்ப்பிக்கப்பட்டது.
* பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருக்குறள் கட்டாயம் இல்லை என்ற நிலைதனை நீக்கி , திருக்குறளை முதன்மைப் படுத்திக் கட்டாயமாக இடம்பெறச் செய்தார் காமராசர்.
* இந்திய மொழிகளில் முதல் முறையாக தமிழ் மொழியில் "கலைக்களஞ்சியம் "உருவாக்கி பெருமைப் படுத்தியது காமராசர் அரசே ஆகும்.
கருத்தால் வேறுபட்டாலும்
செய்யும் காரியத்தால் ஈர்க்கப்பட்டவர் :
காமராசரும், தந்தைப் பெரியாரும் அரசியலில் எதிர் எதிர் துருவங்கள். இருந்த போதும் காமராசர் செயலால் கவரப்பட்டு , வெளிப்படையாகப் அவரைப் பாராட்டி தன்மகிழ்ச்சியை மனம் திறந்து பதிவுசெய்தார் என்றால் எத்தகைய ஆட்சியின் வலிமை அது. ஆம்... 1962 - ம் ஆண்டு நடைபெற்றக் கூட்டத்தில் இவ்வாறாக கூறுகிறார்.
" எனக்கு 82 - வயது ஆகிவிட்டது.எப்பொழுது வேண்டுமா மரணம் நேரலாம் ,எனவே இதை எனது மரண சாசனமாகவே சமர்ப்பிக்கிறேன். இதற்கு முன்னர் நாட்டைப் பல மன்னர்கள் ஆண்ட போதும் கல்விக்கான வழிவகைகளை செய்யவில்லை.இந்த நாடு சிறந்திட கல்விக் கண் கொடுத்த பச்சைத் தமிழன் காமராசர். அவரை இன்னும் பத்து ஆண்டுடளாவது பத்திரமாக பார்த்து கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவரை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை எனக் கூறி மனமுருகினார். அவ்வாறே நாம் அனைவரும் மூத்த தலைவனின் செயலை எண்ணி மகிழ்ந்து அவர் பணியைப் போற்றுவோம்!
காமராசரது புகழினை அவரது பிறந்த தினத்தில் மட்டுமல்லாது எப்போதும் கொண்டாடி மகிழவேண்டிய திருநாளிது.
கல்வி வளர்ச்சி நாளை காலம் உள்ள வரைப் போற்றுவோம்.
0 Comments