உலகச் சுற்றுச்சூழல் தினம் - ஜூன் 5 / WORLD ENVIRONMENT DAY - JUNE 5

 


உலக சுற்றுச் சூழல் தினம் 

            05 • 06 • 2022


மண்ணரசி தன் மடியில் 

தாலாட்டும்  'மா ' மரக்கூட்டம்...!

விண்ணரசி முகம் வியர்வைத் துடைக்க 

தன் கையை நீட்டும்..!

உண்ண உணவு தரும் 

உவகை மிகு தோட்டம் ..! -- நாம்

எண்ணியெண்ணி மகிழ்ந்திட

எங்கும் மரம் தலையாட்டும்..!

நிலம் நீர் காற்று தனை  தூய்மையாக்கி 

மனித குலம் நலம்பெற...

நல்வரமாய் வந்த மரங்களே...!

மண்ணுக்குள்ளும் உயிர் உண்டென 

மாமங்கமாய் சூழல் காக்கும் சேவகரோ நீங்கள்..!

இரக்கமில்லா மனிதன் தரும் 

துன்பமதை புறம் தள்ளி...

புது வாழ்வு தரும் இறைவனோ நீங்கள்..!

கவின்மிகு வாழ்வெல்லாம் 

கலைபட சிறப்பதற்கு... நீ

நிலைபெற வேண்டும் மரமே !

உயிர்வளியில் உலாவரும்..

நஞ்சு எனும் எச்சத்தை 

மிச்சமின்றி வடித்தெடுத்து வாழ்வுதரும் எங்கள் வரமே!

சூழல் போற்றும் பசுமையே புறம் நின்று 

மனிதனின் தரம் காக்கும் மரமே..

என்றுமுனை வணங்கிடும் எங்கள் சிரமே !

தூய்மைதரும் பசுமை நிறைந்த மரமோடு

நம் கரம் இணைத்து சுற்றுச் சூழல் காப்போம் !


           உலகச்  சுற்றுச் சூழல் தினம்.1972 -- ஆம் ஆண்டு சுவீடன் தலைநகர் ஸ்ரொக்ஹோம் என்னும் இடத்தில் நடைபெற்ற  மாநாட்டில் ஐ நா சபையால் சுற்றுச் சூழல் தினம் கடைபிடிக்கப் பட்டது. "மனித குடியிருப்பும் சுற்றுச் சுழலும் " என்ற அந்த மாநாட்டில் உலகச் சுற்றுச் சூழல் முக்கியத்துவம் பெற்றதன் விளைவே 1972 - ஆம் ஆண்டு ஜூன் 5 - ஆம் நாளை உலகச் சுற்றுச் சூழல் தினமாக அறிவித்துக் கொண்டாடப் பட்டது. இவற்றின் பயனாகவே காடுகளையும் ,இயற்கை வளங்களையும் உணர்ந்து பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திச் சூழல் காக்கும்  அழைப்பு விடுக்கப்படுகிது.சுவாசிக்க உயிர் வளியும் , வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்தவும் உதவும் அமுதசுரபிகளான மரங்களே சுற்றுச்சூழல் காக்கும் அரண்களாகின்றன. 

                      மனிதனுக்கும் , மரங்களுக்குமிடையே  தொடரும் பந்தம் மிகவும் இன்றியமையாததாகும். இன்றைய அவசர உலகின் பல இடங்களில் வறட்சியும் , பெருமழையும் ' வெள்ளமும் கொண்ட இயற்கைச் சீற்றங்களால்  பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றிலிருந்து மனித இனம் உயிர் வாழவும் , உலகைப் பாதுகாக்கவும் சுற்றுச் சூழலை பாதுகாப்பது மிக மிக அவசியமாகிறது. எனவே இவற்றைப் பாதுகாக்கும் விதமாகவும் , விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 - ம் நாளை உலகச் சுற்றுச் சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

                  சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது ஒரு குறிப்பிட்ட  மக்களை மட்டும் சார்ந்தது அன்று. இவற்றில் அனைவரும் நன்மை உணர்ந்து பங்குபெற வேண்டும்.இது தனியாள் கடமையும் கூட. இன்றைய நிலையில் ஆங்காங்கே சில பசுமை நேசர்கள் , பசுமை ஆர்வலர்கள் கடவுளென தோன்றி மண்ணையும் , மரத்தையும் வணங்கும் மாபெரும் பணிகளை பெருமையோடும், காக்கும் அருமையோடும் பசுமைக்கு குரல் கொடுத்து  பணியாற்றுகின்றனர் என்பது நெகிழ்வு தருவதாகவும் உள்ளது. இந்த எண்ணமே அனைவரது  உள்ளத்திலும் ஓர் உந்துதலையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 

          மேலும் மாணவர்களுக்கான கதை, கவிதை , கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப் பட்டு நல் வழிகாட்டப் படுகிறது. இது வருங்கால சந்ததியினருக்கு   சுற்றுச் சூழலின் அவசியத்தை உணர்த்துகின்றன. இவற்றின் விளைவே ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து சுற்றுச் சூழலை காக்க வழிகோலுகிறது. மேலும் குடும்ப விழாக்களில் மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கியும் , பெற்றும் மரம் நடுதல் மீதான செயலில் ஆர்வம் கொள்வது நன்மை தரும் பயனாக அமைகிறது.இவை மக்களின் உணர்திறனை வெளிகாட்டுகிறது. எனினும் இது தொடர்ந்து நிலைப்பெற இளைஞர்கள் சேவை மிகவும் இன்றியமையாததாகிறது.

எனவே சுற்றுச் சூழலினை செம்மைப்படுத்தி ,செயல்படும் சிறந்த நாளே நாம் எதிர்நோக்கும் சுற்றுச் சூழல் தினம் . அந்தத நாளை ஆவலுடன் எதிர்பார்த்து சுற்றுச் சூழல் போற்றுவோம்.!

Post a Comment

0 Comments