வில்லுப்பாட்டு - நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்பபோம் ! - விழிப்புணர்வு வில்லுப்பாட்டு - முமகேந்திர பாபு / VILLUPPAATTU - PLASTIC AWARNESS PROGRAME

 


வில்லலுப்பாட்டு -  நெகிழிப் பயன்பாடு தவிர்த்தல் 


தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட

ஆமா ! வில்லினில் பாட

வந்தருள்வாய் கலை மகளே ! 


கல்விக் கடவுளாம்  கலைமகளைக் கரம் குவித்து வணங்கி , நம் முன்னே அமர்ந்திருக்கும் அத்துணை சான்றோர்களுக்கும் நம் பள்ளியின் சார்பில் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.


சிறகு விரிக்கும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியைப் போல இதோ இரண்டாண்டுகள் பொது முடக்கத்திற்குப் பின்பு எல்லையில்லா மகிழ்வோடு எல்லாரும் நம் புத்தகத் திருவிழாவில் ஒன்று கூடியுள்ளோம்.


ஆமாண்ணே ! மதுரையில் ஆரவாரம் சித்திரைத் திருவிழா என்றால் , நம் சிவகங்கையில்  அறிவுக்கு  அஸ்திவாரம் இப்போ நடக்கும் புத்தகத் திருவிழாதான்.


ஆமா பா ! நல்லா சொன்ன . அதனால் நம் முன்னோர்கள் ' புத்தகங்கள் பொக்கிஷங்கள் ' என்று சொன்னார்கள் . ' ஏடுகள் வாங்கின் கேடுகள் நீங்கும் ' என்றும் சொன்னார்கள்.


அருமையாகச் சொன்னீர்கள். புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும் போதெல்லாம் அது நம் உள்ளத்தில் நல்ல உணர்வுகளைப் புரட்டுகிறது  . சிந்தனையைத் திரட்டுகிறது.


ஆமா !  அதனாலதான் கோவில் திருவிழா போல இந்தப் புத்தகத் திருவிழாவிற்குக் குடும்பம் குடும்பமாக நம் நண்பர்கள் வர்ராங்க.


புத்தகத்திற்கு இன்னொரு அருமையான பெயர் இருக்கு தெரியுமா ?


அப்படியா ? அது என்ன பேரு ? சொல்லுங்க கேட்போம் .


சொல்றேன் தம்பி . நல்லா கேளுங்க. புத்தகத்திற்கு ' நூல் ' னு ஒரு பெயர் இருக்கு. அதாவது நூலாடை . ஆடை ஒருவரது மானத்தைக் காப்பது போல , நூல் அதாவது புத்தகம் நம் மனதைக் காக்கும்.


ஆகா ! அருமையாகச் சொன்னிங்க. இந்த இனிமையான நாள்ல எதைப்பத்தி நம்ம குழு வில்லிசையில பாடலைத் தரப்போகுதுனு சொல்லுங்க அண்ணே ! 


நிச்சயமாக ! இன்றைய அறிவியல் உலகத்தில் , நவநாகரிக உலகத்தில் , உலகம் எப்படி ஓடிக்கொண்டிருக்கிறது ? இயற்கை எப்படி இருக்கிறது ? அப்படினு ...


அண்ணே ! அது என்னண்ணே ! இயற்கைனு சொல்றிங்களே ! எனக்கு இரண்டு கை இருக்கு. அது என்ன இயற் கை ? 


அதுவா ? பாடுறேன் கேட்டுக்கோ ...


ஆதி மனுசன் வாழ்ந்ததெல்லாம் காட்டுக்குள்ளதான் !

அவன் தங்குனது பெரிய பெரிய மரப்பொந்து வீட்டுக்குள்ளதான் !

இலைதழைதான் ஆடையாக அன்று இருந்தது !

பறவைகளும் விலங்குகளும் சுதந்திரமாச் சுற்றித் திரிந்தது !

மரமும் செடியும் மலையும் ஆறும் இயற்கை தந்தது !

மனுசன் இதில் நுழைந்த பின்தான் துன்பம் வந்தது !

இப்போ துன்பம் வந்தது.


அண்ணே ! அண்ணே ! என்னண்ணே ! துன்பம் வந்ததுனு சொல்றிங்க ? கொஞ்சம் புரியறமாதிரி சொல்லுங்க.


அதுவா ? அந்தக் காலத்து மனுசங்க எல்லாம் இயற்கையோடு அதாவது காடு , மேடுல வாழ்ந்தாங்க. கிடைத்தது உண்டு , இன்பம் கண்டு இருந்தாங்க. நவநாகரீக காலமான இன்று நம்ம மனுச இனம் அறிவியல் கண்டுபிடிப்புனு கொஞ்சம் கொஞ்சமா இயற்கையை மறந்து செயற்கைக்குள்ள சிக்கிக்கிட்டு திண்டாடிக்கிட்டு இருக்கு. 


என்னண்ணே சொல்றிங்க ? புத்தகத் திருவிழாவுல கொண்டாட்டமா இருக்குற நேரத்தில திண்டாட்டம்னு  சொல்றிங்களே ! 


ஆமா தம்பி. இன்று கொண்டாட்டம்தான். இந்தக் கொண்டாட்டம் தொடர்ந்து இருக்கனும்னா நாம இந்த மண்ணைச் சுத்தமா வச்சிருக்கனும்ல. 


ஆமா ! ஆமா ! அதான முக்கியம். மண்ணுதான நம்ம கண்ணு. கண்ணக் கெடுப்போமா நாம ?


கெடுப்போமா நாமனு கேள்விக்கு , கெடுத்துக்கிட்டு இருக்கோம் அப்படிங்கிறதுதான் தம்பி கசப்பான உண்மை.


அப்படியா சொல்றிங்க அண்ணே ! எப்படிக் கெடுக்கறம்னு சொல்றிங்க ? கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லுங்களேன்.


சொல்றேன் தம்பி. கேளுங்க. ஒரு இருபது , முப்பது வருசத்திற்கு முன்னாடி , நம்ம வீட்டுக்குச் சொந்தக்காரங்க வந்தா பலகாரம் எதில வாங்கி வருவாங்க ?


எதில வாங்கி வருவாங்க ?


என்னடா எதிர்கேள்வி கேட்குற ?


என்னண்ணே நீங்க ? இருபது வருசத்துக்கு முன்ன நடந்தது என்னன்னு எனக்குத் தெரியாதே ! அதான் எதிர் கேள்வி கேட்டேன். 


அதுவும் சரிதான். அப்பல்லாம் நம்ம சொந்தக் காரங்க வீட்டுக்கு வரும்போது தின்பண்டங்களை எதில் வாங்கி வருவாங்கன்னா ... இதோ பாடுறேன் கேளு 


இயற்கை தந்த கொடை தானே பனை மரம் ! 

நம்ம தமிழகத்து மக்களின்

மாநில மரம் !

ஓலை முதல் வேர் வரை மண்ணைக் காத்திடும் !

ஓங்கி வளர்ந்து ஊருக்கெல்லாம் பசியைப் போக்கிடும் !


உன்னதமான அந்தப் பனைமரம் நமக்குத் தந்தது அதன் ஓலை . அந்த ஓலையிலதான் அன்று கொட்டான் முடைவாங்க. அந்தக் கொட்டான்லதான் இருபது , முப்பது வருசத்துக்கு முன்பு தின்பண்டம் வாங்கி வருவாங்க . சொந்தக் காரங்களுக்குத் தருவாங்க. 


அப்படியா அண்ணே ! 


அது மட்டுமில்ல தம்பி . ஓலக்கொட்டான்ல வைக்கப்பட்ட பண்டங்களும் சுவையா மொறுமொறுனு இருக்கும் . 


அப்படியாண்ணே !


அது மட்டுமில்ல தம்பி. தின்பண்டம் காலியானதும் அந்தக்கொட்டான கடைக்குப் பொருள் வாங்கவும் , விவசாயத்திற்கு விதைப்பெட்டியாகவும் , கொஞ்ச நாளாகி அது சேதமானா அதையே அடுப்பு எரிக்கவும் பயன்படுத்துவாங்க. மண்ணுக்கு எந்தக் கெடுதலும் இல்ல.


ஆகா ! அருமை அருமை அண்ணா. மண்ணில் உருவான பொருள் மண்ணோடு மண்ணா , மண்ணுக்கே உரமாப் போச்சுனு சொல்லுங்க .


அருமை. சரியாச் சொன்னபா. தமிழ்ப்புத்தாண்டுக்கு உங்க வீட்டுக்கு சொந்தக் காரங்க யாரு வந்தாங்க ?


எங்க மாமா வந்தாங்க . எனக்கு நிறையப் பொருள் வாங்கி வந்தாங்களே !


அப்படியா ? என்னல்லாம் வாங்கி வந்தாரு ?


தின்பண்டம் , துணிகள் , விளையாட்டுப் பொருட்கள் னு நிறைய பாலித்தின் பையில வாங்கி வந்தாரு.


எதுல வாங்கி வந்தாரு ?


பாலிதீன் பையில.


இந்தப் பாலித்தீன் பைதான் பா இன்று நம் மண்ணையும் , மக்களையும் கெடுக்குது.


என்னண்ணே சொல்றிங்க ? மண்ணையும் மக்களையும் கெடுக்குதா ? எப்படி ?


விளக்கமாச் சொல்றேன் கேட்டுக்கோ. முன்பெல்லாம் கடைக்குப் போனா மஞ்சப்பைய எடுத்துக்கிட்டுப் போவோம். பொருள அதுலதான் வாங்குவோம். இப்ப அஞ்சு ரூவாய்க்கு கருவேப்பில , மல்லித்தழ வாங்குனாலும் அதை வைக்க ஒரு பாலித்தின் பை கேட்குறோம். அதனால இப்ப என்னாச்சு தெரியுமா?


என்னண்ணே ஆச்சு ?


    இப்படி நாம வீட்டுக்குக் கொண்டு போற பாலித்தீன் பைகள் அதிகபட்சம் அஞ்சு நிமிசம் நம்ம வீட்ல இருக்கும். பிறகு தூக்கி குப்பையில போட்டுவிடுவோம். அல்லது கழிவு நீர் போகும் வாய்க்காலில் போட்டுவிடுவோம். இப்படியே போட்டுப்போட்டு இந்தக் குப்பைகளே மலையளவு உருவாகிவிட்டது. மணற்குவியல் , நெற்குவியல் போல பாலித்தின் பை குவியல் வந்துவிட்டது.


உண்மைதான் அண்ணே ! எங்க ஊர்லயும் குவியல் குவியலா இருக்கு.


இந்தப் பாலித்தின் பைகள் மண்ணில் இருக்கும் வளத்தையும் குறைத்துவிடும். பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்கவும் செய்யாது. இலை , தழைகளைச் சாப்பிட்ட மாடுகள் இன்று பாலித்தின் பைகளைத் தின்று இறந்தும் போயிருக்கின்றன.


அடடா ! இவ்வளவு தீமைகள் இருக்கின்றனவா இந்த நெகிழிப் பைக்குள் ? நெகிழிப் பயன்பாடை முற்றிலும் ஒழிக்க முடியாதா அண்ணே ?


மக்களாகிய நாம் மனசு வைத்தால் எல்லாம் முடியும்.

முன்பெல்லாம் வீட்டில் சுபகாரியங்கள் என்றால் வாழை இலைச்சாப்பாடு போட்டோம். உணவகங்களில் வாழை இலை பயன்படுத்தினார்கள். தண்ணீர் டம்ளர் பயன்படுத்தினோம். இப்போ , பாலித்தின் பைகளும் , நெகிழி தண்ணீர் பாட்டில்களையும்  பயன்படுத்துகிறோம். இதைத் தவிரத்தால் மண் நன்றாக இருக்குமே !


சரியாகச் சொன்னிங்க ஐயா.


ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பே உணவகங்களில் தூக்குவாளி அல்லது பாத்திரங்கள் கொண்டுவந்தால்தான் உணவுப் பொருட்கள் தந்தார்கள். இதனால் பாலித்தின் பைகளின் பயன்பாடு குறைக்கப்பட்டது.


அருமையான யோசனை அண்ணா. இனிமேல் கடைக்கோ , உணவகத்திற்கோ சென்றால் மஞ்சள் பையும் , பாத்திரங்களையும் எடுத்துச்செல்வேன்.


நன்றாகச்சொன்னாய் தம்பி. மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். அது நம்மை ஏற்றத்திற்கு அழைத்துச் செல்லும். நமது அரசாங்கம் ' மீண்டும் மஞ்சப்பை ' என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.மஞ்சப்பை தூக்குவது நமக்குப் பெருமை என்று நாம் நினைக்க வேண்டும் தம்பி.


ஆம் அண்ணா. இன்று இங்கு கூட நிறைய புத்தக விற்பனையாளர்கள் தங்கள் பதிப்பகத்தின் பெயரைப்போட்டு துணிப்பைகளில் நாம் வாங்கும் புத்தகம் தருகிறார்கள். நல்ல முயற்சி இது.


ஆமா தம்பி. நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முயல்வோம். கூடுமானவரை தனி மனிதர் ஒவ்வொருவரும் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்து , மஞ்சள் தூக்கினாலே இந்ம மண் மங்களகரமாக இருக்கும்.


நெகிழிப்பைகளைக் குவித்து தீயிட்டு கொளுத்தும் போது அதில் இருந்து வரும் நச்சுக்காற்று நம் உடம்பிற்குத் தீங்கு தரும். வாழும்போதே நாம் நோயுடன் வாழ வேண்டுமா ? 


வேணாம்ணே ! வேணாம்ணே !  வாழும்வரை இம்மணைப் பசுமையாக ஆள்வோம். ஆளுக்கொரு மரம் வைத்து மண்வளம் காப்போம் ! மக்கள் நலம் காப்போம் ! 


நிம்மதியான வாழ்விற்கு நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்ப்போம் ! 

துணிப்பையைத் தூக்குவோம் !

நெகிழிப்பையை நீக்குவோம் !


ஆக்கம்.


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410

Post a Comment

0 Comments