விருந்தோம்பல்.

 

விருந்தோம்பல்.

அன்றும் இன்றும் என்றும்
இந்தச்சொல்லைச் சொல்கிறோம்
அன்போடு.
விருந்தோம்பல்தானே நமது
ஆதித்தமிழரின் பண்பாடு ?

இல்லம் தேடி வருவோரின்
உள்ளம் திறக்கும்
ஒற்றை வார்த்தை விருந்தோம்பல்.

காதலும் வீரமும் கலந்திட்ட
தமிழர்தம் வாழ்வோடு
கலந்திட்ட அறம் விருந்தோம்பல்.

ஓட்டு வீடாயினும்
ஓலை வீடாயினும்
காடு மேடாயினும்
மாடி வீடாயினும்
கனிவோடு
பணிவோடு தமிழரின்
உதடோடு உள்ளம் இணைந்து
உதிர்க்கும் வார்த்தை
சாப்டுப் போங்க !

பாலாயினும் - கம்மங்
கூழாயினும் ,
நீராயினும்  - பழைய
சோறாயினும்
முகமலர்ந்து இருப்பதைக் கொடுப்பான்.
எதார்த்தப் பேச்சினால் தமிழன்
இதயத்தில் பாசம் தொடுப்பான்.

உறவினராயினும் - தன்
ஊரல்லாதவராயினும் ,
பழையவராயினும் - நட்பில்
புதியவராயினும் ,
யாசகராயினும் - அன்பின்
வாசகராயினும் 
விருந்தோம்பலில் பேதமில்லை.
காலங்காலமாய்த் தொடரும்
இந்தப் பண்பாட்டில் சேதமில்லை.

வேளாளண் என்பான் விருந்திருக்க உண்ணாதான்.
தனக்கென எதையும் எண்ணாதான்.
இதுதானே நமது பண்பாடு.
அன்று முதல் இன்றும் நம்மோடு !

இளையான்குடி மாறநாயனார் புராணம்.
இறைவனுக்கே விருந்தோம்பல் செய்து இறைவனிடம் கலந்தானே !
விருந்தோம்பல்தானே அதற்குக் காரணம்

அடியார்க்கு அமுது படைத்து
அவர் அடி தொழுது
அண்டி வந்த உறவில்
இல்லை பழுது.

ஐயமிட்டு உண்.
இது தமிழ் மூதாட்டி
ஔவை வாழ்ந்த மண்.

பசிப்பிணி
நீக்குவதே நம் முதல்பணி
பகுத்துண்டு வாழச்சொன்னான்
வள்ளுவன் எனும்
குறள் தந்த வல்லவன்.

வாடிய பயிரைக்கண்டே
வாடிய வள்ளலார் பிறந்தமண்ணில்
நம்மைத் தேடிய
உயிரை வாடவிடுவோமோ ?

யாவர்க்குமாம் உண்ணும் போது
ஒருகைப்பிடி உணவு.
இது திருமூலன் கண்ட கனவு.

முன்பு -
நம் தமிழ் மண்ணை
உயர்த்திப் பிடித்திருந்தது
வீட்டின் முன் இருந்த திண்ணை.

யாத்ரீகர்கள் யாரும்
அதில் அமரலாம் - சற்றே
ஓய்வினை நுகரலாம்.

மதம் கடந்து ,
மனம் கடந்து ,
சாதி கடந்து ,
தமிழ் இனம் என்ற ஒன்றால்
அன்போடு நலம் விசாரித்து ,
உணவு கொடுத்தது தமிழ் இல்லம்.
அதை இன்று நினைத்தாலும்
மனம் துள்ளும்.

உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரல்லவா ?

பின்பு -
சுற்றுச்சுவர் எனும்
வெற்றுச்சுவர் எழுப்பி ,
நமக்கு நாமே
வைத்துக்கொண்டோம் சிறை.
ஆயினும் ,
விருந்தோம்பலில் இல்லை கறை.

தவிச்ச வாய்க்குத் தண்ணீரோடு
பசிச்ச வயிறுக்குப்
பதார்த்தமும்
பக்குவமாய்த் தந்தோம்.
தமிழனாய்த் தரணியில்
உலா வந்தோம்.

உடம்பை இயங்கச் செய்யும்
ஆற்றல் படைத்தது வயிறு.
வயிறு நிறைந்தால்
நலம்பெறும் உயிரு.

எட்டுச்சாண் உயரமுள்ள மனிதன்
பல சாதனைகளை எட்ட வேண்டும் என்றால்
ஒற்றைச்சாண் வயிறு நிறையனும்
உள்ளத்திலுள்ள கவலை மறையனும்.

சுக்கில் இருக்கும் சூட்சுமத்தைப் போல
விருந்தோம்பலில் இருக்கு
வெற்றியின் இரகசியம்.
காலங்காலமாய் அது
தமிழகத்தில் தொடர்கின்ற அதிசயம்.

காகம் கரைந்தால்
விருந்தினர் வருவர்
என்பது நமது எண்ணம்.
பசித்தாகம் தீர்த்து
மகிழ்ச்சி வார்த்து ,
மகிழ்வது திண்ணம்.

விருந்தோம்பலோடு மலரும்
விடியல்களில்
உறவுகளும் வளரும்.
உன்னதமாய் வாழ்க்கை ஒளிரும்.

சொல்லாமல் கொள்ளாமல்
திடீரென வரும் விருந்தினர்களை
முகம் மாறாமல் ,
வார்த்தை மீறாமல்
வரவேற்பதுதான் விருந்தோம்பல்.

தொலைபேசியும் , அலைபேசியும்
இல்லாத காலத்தில்
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அழைத்து ,
அன்பு குழைத்து ,
மகிழ்வில் திளைத்து நிற்பதுதான்
விருந்தோம்பல்.

அன்பெனும் கரண்டியால்
மகிழ்ச்சி எனும் உணவை
உறவு எனும் வாழை இலையில்
இட்டு , உளம் தொட்டு
மகிழ்வதுதான் விருந்தோம்பல்.

அறுசுவை உணவு என்றில்லை.
ஒரு சுவை உணவு என்றாலும்
உரிமையோடு உறவாடி ,
உபசரித்தல்தான் விருந்தோம்பல்.

விருந்து என்றால் புதியது.
முன்பின் பார்த்திராத முகங்களையும் ,
எங்க வீட்ல ஒரு வாய்ச்சோறு சாப்பிடுங்க கூச்சப்படாதிங்க ...
உங்க வீடு போல நெனச்சுக்கோங்க ...
அலுப்புத் தீர ஓய்வெடுங்க ...

இந்த அமுத மொழிகள்தான்
விருந்தோம்பலின் பண்பாடு.

விருந்தோம்பலைப் பாடாத
புலவன் இல்லை.
விருந்தோம்பல் செய்திடாத
உழவன் இல்லை.
உழவனாய்ப் ,
புலவனாய் மனதில் பட்டதைச்
சொன்னேன்.
அவனியார் அவர்களால்
கவியரங்கத்திலே உங்கள் முன்
நின்னேன் .

மனமே !
இருக்கும் வரையிலும்
விருந்தோம்பல் செய்திடு.
நல்ல நிலையை எய்திடு.

வாழ்த்துகளும் , வணக்கங்களும் , நன்றிகளும்.

மு.மகேந்திர பாபு.
பேசி - 97861 41410 .19, 2017,

Post a Comment

0 Comments