பயன் தரும் பனை மரம் தினைத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவர். - என்று பனைக்கான தன் குரலை , குறள் வழி உயர்த்திப் பிடிக்கிறார் வள்ளுவப் பேராசான். பனை - தமிழகத்தின் அடையாளம். தமிழினத்தின் அடையாளம். ஆம்! பனை மரம்தான் நமது மாநில மரம். பனை என ஒரு மரம் இல்லாவிட்டால் நம் மண்ணின் பண்பாடு என்றோ அழிந்திருக்கும்.நம் முன்னோர்கள் தம் எண்ணங்களை எழுத்தாணியால் வைக்க , இறவா இலக்கியங்களாக அவற்றைச் சுமந்தவை பனையோலைகள் தானே ! பனை என ஒரு மரம் இல்லாவிட்டால் , நம் பண்பாட்டுக் கூறுகளோடு இன்று நாம் பயணம் செய்ய முடியாது. இரண்டாயிரம் ஆண்டுப் பழமையான இலக்கியங்கள் இன்று நம் இல்லத்திலும் , உள்ளத்திலும் உறவாடுகிறது , உரையாடுகிறது என்றால் அதற்குக் காரணம் பனைமரம்தான். ஒற்றைக்கால் மனிதனாக ஓங்கி உயர்ந்து நிற்கும் பனை தன் உடல் முழுவதையும் பயனாகத் தருகிறது. அன்று முதல் இன்று வரை தமிழர் வாழ்வியலோடு உடன் வருகிறது. இலக்கிய வரலாற்றில் தனக்கென தனி இடம் பெறுகிறது. தமிழ் சித்தர்கள் ' கற்பக விருட்சம் ' என்று போற்றிய அற்புத மரங்களில் பனைமரமும் ஒன்று. பனை மரங்கள் பரவலாக பல மாவட்டங்களில் காணப்பட்டாலும் தூத்துக்குடி , நெல்லை , கன்னியாகுமரி , இராமநாதபுரம் , விருதுநகர் மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன. பனையின் தோற்றம் : தமிழ் நாட்டில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே பனையின் பயன்பாடு அதிகமாக இருந்து வந்துள்ளது. சேரமன்னனது குடிப்பூ பனையின் பூவாகும். பனையின் பூக்கள் சூடிக்கொள்ளும் வாய்ப்பற்றவை. பனையின் இளங்குருத்து ஓலையைப் பிளந்து , அதன் கூரிய பகுதியைக் குடிப்பூச்சின்னமாகச் சூடிக் கொண்டனர். பண்டைக்காலம் தொட்டு , இன்றைய தாள் பயன்பாட்டிற்கு வந்தவரை பனை ஓலை தென்னிந்தியா , இலங்கை , தென்கிழக்கு நாடுகளில் முதன்மை எழுது பொருளாகப் பயன்பாட்டில் இருந்தது. பனைமரம் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழும். குறைந்த நீரை எடுத்துக் கொண்டு , மிகுந்த பயனைத் தரும். பனையில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. டி.வி.சாம்பசிவம்பிள்ளை அவர்களின் அகராதியில் ஏறக்குறைய முப்பது வகைகளைக் கூறுகின்றார். அதில் மிகவும் குறிப்பிடத் தக்கவை ' தாளிப்பனை ' எனப்படும் ' கூந்தற்பனை ' ,மற்றொன்று ' நாட்டுப்பனை ' எனப்படும் ' நுங்குப்பனை ' . இவ்விரண்டு பனைகளின் ஓலைகளும் எழுதுவதற்குப் பயன்படுத்தப் பட்டன. பனை தரும் பணம் : ஒரு பனை மரம் இன்றைய நிலையில் ஆண்டிற்கு 150 ரூபாய் வருமானம் தரும் எனக் கணக்கிட்டுள்ளார்கள் . இன்று , ஏறக்குறைய மூன்று கோடிப் பனைமரங்கள் உள்ளன. அதன் மூலம் ஆண்டிற்கு 500 கோடி வருவாய் கிடைக்கிறது. பதநீர் , தும்பு , ஈர்க்கு , ஓலை , நார் , கருப்பட்டி , கூடைகள் , தூரிகைகள் , கட்டில்கள் , இருக்கைகள் , சிறுசிறு தட்டுகள் , பெட்டிகள் , தொப்பிகள் போன்றவை பனைதரும் பொருட்களாகும். பனையோலை : ஏழைகளின் வீட்டுக்கூரைகளாக ஓலைகள்தான் அன்றும் இன்றும் இருந்து வருகிறது. விசிறி என்றவுடன் நம் நினைவிற்கு முதலில் வருவது பனையோலை விசிறிதான். சுபநிகழ்ச்சிகளில் குருத்தோலைகளை தோரணமாகக் கட்டித் தொங்கவிட்டிருப்பதை நாம் காணலாம். ' குருத்தோலை திருவிழா ' என்றே ஒரு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பனையோலை மூலம் பாய் , பெட்டி , கொட்டான் , அலங்காரப் பொருட்கள் , பனை நாரினால் செய்யப்பட்ட முறம் எனப் பலவகைப் பயன்பாடு கிடைக்கிறது. முன்பு , கிராமங்கள்தோறும் ஓலைக்கொட்டான்கள் உலா வந்தன. வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் , ஓலைக்கொட்டான்களிலே திண்பண்டங்கள் வாங்கி வருவார்கள். திண்பண்டங்கள் மொறுமொறுவென சுவை குன்றாமல் இருக்கும். அந்தக் கொட்டான்கள் விதைப்புக் காலத்தில் விதைக்கொட்டானாகவும் , பின்பு கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கவும் பயன்படும். கடைசியில் அது தீயெரிக்கவும் பயன்படும். சங்கப் பாடல்களில் ' பனையோலைக் குடைகள் ' பழக்கத்தில் இருந்தன என்பதைப் பாடல்கள் மூலம் அறிகிறோம். பனையோலையில் காத்தாடி செய்து பால்யத்தில் விளையாடியதை நாம் மறக்க முடியுமா ? பதநீர் : கோடையின் வெப்பம் தணித்து , இதம் தரும் நீராகிறது பதநீர். வருடத்தில் மூன்று முதல் ஐந்து மாதங்கள் மட்டுமே கிடைக்கும் அற்புத பானம் பதநீர். ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 90 முதல் 130 நாட்கள் பதநீர் கிடைக்கிறது. ஆண் பனைகளைவிட பெண் பனைகள் 33 முதல் 55 விழுக்காடு கூடுதல் பதநீரைத் தருகின்றன. பதநீரில் நிறைய ஊட்டச் சத்துகள் உள்ளன. வெயிலால் ஏற்படும் சோர்வினை நீக்குகிறது. பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமைப்படுத்தி , ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவினைத் தடுக்கிறது. இதிலுள்ள இரும்புச்சத்து உடலில் உள்ள பித்தத்தைக் குறைத்து , இரத்த சோகையை விரட்டும்.நரம்பு மணடலம் பலமாகும். கருப்பட்டி : ' உணவே மருந்து ' என்பதுதான் தமிழரின் உணவு முறை. பனையிலிருந்து கிடைக்கும் பனங்கற்கண்டு , பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையைத்தான் முன்பு நாம் பயன்படுத்தி வந்தோம். அப்போது உடல்பருமனோ , நீரிழிவு நோயோ இருந்ததாக யாரும் கேள்விப்பட்டதில்லை. இன்றோ ' வெள்ளைச் சக்கரை ' எனும் தொல்லைக்குள் தொலைந்து போய் நோய்களின் கூடாராமாக நம் உடல் மாறி வருகிறது. பதநீரைக் காய்ச்சினால் கிடைப்பது கருப்பட்டி . பனையிலிருந்து சேகரிக்கப்பட்ட பதநீரை வணிகட்டித் தூய்மைப் படுத்த வேண்டும். மண் அடுக்குகளை அமைத்து , அவற்றின் மேல் அலுமினிய கொப்பரைகளை வைத்து , அதில் பதநீர் ஊற்றப்பட்டு கொதிக்க வைக்கப் படுகிறது. கருப்பட்டியும் , பனங்கற்கண்டும் உடல் இயக்கத்தைச் சீரான சமநிலைக்குக் கொண்டு வருகிறது. இவற்றில் இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளன. இதிலுள்ள வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. பருவமடைந்த பெண்ணுக்கு கருப்பட்டியையும் , உளுந்தையும் சேர்த்து உளுந்தக்களி செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். கரும்புச் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும் , எலும்புகளும் உறுதியாகும். சுக்குக் கருப்பட்டி பெண்களின் கருப்பைக்கு மிகவும் நல்லது. சுக்கு , மிளகு கலந்த கருப்பட்டியைக் குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். காபியில் சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைச் சேர்த்துக் குடித்தால் நமது உடலுக்குச் சுண்ணாம்புச் சத்தும் , நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமாகக் கிடைக்கும். நுங்கு : நுங்கில் அதிகளவு வைட்டமின் பி , சி , இரும்புச்சத்து , கால்சியம் , துத்தநாகம் , சோடியம் , மக்னீசியம் , பொட்டாசியம் , அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி , உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம் . உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக்கட்டுப்பாட்டுடன் நுங்கை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே நுங்கு மருந்தாக இருக்கிறது. நுங்கைச் சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இரத்த சோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாவார்கள். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களைத் தடுத்து , உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. பனங்கிழங்கு : பனங்கிழங்கு என்றவுடன் பள்ளிக்காலத்தில் படித்த பாடலொன்று நமக்கு நினைவிற்கு வரும். நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் . நாரை எனும் பறவையின் நீண்ட கூரிய அலகு , இளம் மஞ்சள் நிறமான , நீண்ட கூம்பு வடிவம் கொண்ட பனங்கிழங்கு போலிருப்பதாக ' சத்திமுத்தப் புலவர் ' எனும் சங்கப் புலவர் நாரையின் அலகுக்கு உவமையாக பனங்கிழங்கைக் கூறுகிறார். பனம் விதைகள் முளைக்கும் போது , நிலத்துள் செல்லும் வேரில் மாவுப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்கு உருவாகிறது. இதுவே பனங்கிழங்கு. பனங்கிழங்கு குளிர்ச்சி தன்மையுடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. பனைத் தொழிலாளர் வாழ்வு மேம்பட : பனையிலிருந்து கிடைக்கக்கூடிய பதநீர் , நுங்கு குளுமை தருகிறது. பனங்கற்கண்டு , கருப்பட்டி இனிமை தருகிறது. ஆனால் பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கை வளமையின்றி , வறுமையாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் நாம் ? யாரோ ஒரு நடிகரும் , கிரிக்கெட் வீரரும் பல கோடிகளை வாங்கிக்கொண்டு , குடிப்பதாக நடிக்கும் பன்னாட்டு குளிர்பானங்களை புறக்கணித்து நமது இளநீர் , பதநீர் , நுங்கு இவற்றை நாம் வாங்கினால் பனைத் தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெறும். பதநீரும் , நுங்கும் விற்பவர்கள் நமது சொந்தங்கள். நமது பணம் நம்மவர்களுக்கே சென்று சேரட்டுமே ! யாரோ முகம் தெரியாத ஒரு நிறுவனத்தின் குளிர் பானத்தைக் குடித்து , உடலைக் கெடுப்பதை விட , நம் சொந்தங்கள் தரும் சத்தான பதநீரைக் குடித்து நோயின்றி நாம் வாழ்வோம் ! தமிழ் உலகை ஆள்வோம் ! கட்டுரை. மு.மகேந்திர பாபு , பட்டதாரி தமிழாசிரியர் , அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி , இளமனுர். பேசி - 97861 41410.
|
0 Comments