மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய
திருவாசகம் - பக்தி இலக்கியத் தொடர்
5 , திருச்சதகம்
பாடல்
பரந்துபல் லாய்மல ரிட்டுமுட்
டாதடி யேயிறைஞ்சி
யிரந்தவெல் லாமெமக் கேபெற
லாமென்னு மன்பருள்ளங்
கரந்துநில் லாக்கள்வ னேநின்றன்
வார்கழற் கன்பெனக்கு
நிரந்தர மாயரு ளாய்நின்னை
யேத்த முழுவதுமே. (6)
உரை:
பல்வேறு திருத்தலங்களிலும் பரந்து நிற்கும் நின்னை ஆய்ந்தெடுத்த பலவாகிய மலர்களால் அர்ச்சித்து இடைவிடாமல் வணங்கி தாம் விண்ணப்பிக்கும் அனைத்தையும் பெறுதல் அடியவர்களாகிய எங்களுக்கே தகும் என்று எண்ணுகின்ற அடியவர்களின் உள்ளத்தில் மறைந்து நில்லாது அருள்புரியும் கள்வனே! அடியேனின் வாழ்நாள் முழுவதும் நின்னைத் துதிக்கவும் உன்னுடைய நீண்ட கழலணிந்த நின் திருவடிக்கு அன்பு செய்ய நிரந்தரமாக எனக்கும் அருள்புரிய வேண்டும்.
பாடல்
முழுவதுங் கண்டவ னைப்படைத்
தான்முடி சாய்த்து முன்னாட்
செழுமலர் கொண்டெங்குந் தேடவப்
பாலனிப் பாலெம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடக
மாடிக் கதியிலியா
யுழுவையின் றோலுடுத் துன்மத்த
மேற்கொண் டுழிதருமே. (7)
உரை:
அனைத்தையும் படைத்த பிரமதேவனைத் தன் உந்திக் கமலத்திலிருந்து தோற்றுவித்தவனாகிய திருமால் முற்காலத்தில் செழுமலர் கொண்டு எங்கும் தேட அத்திருமாலுக்கு காணவியலாதவனாகித் தொலைவினனாக இருந்த எம்பிரான் இங்கே சுடுகாட்டில் பேய்களோடு நாடகம் ஆடி கதியில்லாதவனாக தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய புலியைக் கொன்று அதன் தோலை உடுத்திக் கொண்டு இவ்விடத்து உன்மத்தம் மேல் கொண்டு திரிதருகின்றான்.
0 Comments