10 ஆம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் திருப்புதல் தேர்வு - மதுரை - மார்ச் 2022 - மாதிரி வினா & விடை / 10th TAMIL - SECOND REVISION TEST - MADURAI - MARCH - 2022 - QUESTION & ANSWER

 


இரண்டாம் திருப்புதல் தேர்வு-மார்ச்சு 2022

பத்தாம் வகுப்பு - தமிழ்

கால அளவு:3.00 மணி.

மதிப்பெண்கள்: 100

குறிப்பு: தேர்வர் கடிதம்,படிவம் ஆகியவற்றை எழுதும்போது,
எ.கயல்விழி (அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
மதுரை- 01), த பெ.ம.எழில்முதல்வன், 1/23,எழுத்தாணிக்காரத் தெரு, தெற்கு மாசி வீதி,மதுரை-625001 எனும் முகவரியைத் தன்னுடையதாகக் கொள்க.

பகுதி-1(மதிப்பெண்கள்-15)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                      Greentamil.in

1.'உனதருளே பார்ப்பன் அடியேனே' யாரிடம் யார் கூறியது?

அ)குலசேகர ஆழ்வாரிடம் இறைவன் 

ஆ) இறைவனிடம் குலசேகர ஆழ்வார்

இ)மருத்துவரிடம் நோயாளி

 ஈ)நோயாளியிடம் மருத்துவர்

விடை : ஆ ) இறைவனிடம் குலசேகர ஆழ்வார்

2.ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு?

அ) தேவாரம். 

ஆ) பெருமாள் திருமொழி

இ)பரிபாடல்

ஈ)நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

விடை : ஈ ) நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்

3:அருகில் அமர்க' என்பதை எதிர்மறையாக மாற்றக் கிடைப்பது எது?

அ) அருகில் செல்க. 

ஆ) தொலைவில் அமர்க

இ) தொலைவில் செல்க. 

ஈ) அருகில் வருக

விடை : ஆ ) தொலைவில் அமர்க

4.'அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை"-என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

அ)தமிழ்                ஆ)கல்வி

இ) அறிவியல்   ஈ) இலக்கியம்

விடை : ஆ ) கல்வி

5.கீழ்க்காணும் நூல்களுள் கம்பருடன் தொடர்பற்ற நூல் எது?

அ) ஏரெழுபது      ஆ)சிலை எழுபது.

 இ)இராமாவதாரம். ஈ)அபிராமி அந்தாதி

விடை : ஈ ) அபிராமி அந்தாதி

6'கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்' என்று பெருமைப்படுபவர் யார்?

அ)பாரதிதாசன்     ஆ) பாரதியார்

 இ)கண்ணதாசன். ஈ)தமிழன்பன்

விடை : ஆ ) பாரதியார்

7.கீழ்க்காண்பனவற்றுள் திருக்குறள் அமைச்சருக்குரிய பண்பாகக் கூறாத ஒன்று?

அ).வன்கண்                ஆ)குடிகாத்தல்

 இ)நாநலமின்மை      ஈ)கற்றறிதல்

விடை : இ ) நாநலமின்மை

8 .உயர்திணைக்குரிய பால்பகுப்புகளில் அடங்காதது எது?

அ)ஆண்பால்              ஆ)பலர்பால்.

 இ)பலவின்பால். ஈ) பெண்பால்

விடை : இ ) பலவின்பால்

9.'நாளை இதே நேரத்தில் வீட்டில் இருப்பேன்" என்னும் தொடரில் இடம்பெற்றுள்ளது எது?

அ)காலவழு       ஆ) இடவழுவமைதி

 இ)காலவழுவமைதி      ஈ) இடவழு

விடை : இ ) காலவழுவமைதி 


10"மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் - இவை எத்திணைக்குரிய தொழில்கள்?

அ)முல்லை          ஆ)மருதம். 

இ)நெய்தல்        ஈ)பாலை

விடை : இ ) நெய்தல்

11.இளவேனிற்காலத்திற்கு உரிய மாதங்கள் எவை?

அ)ஆவணி, புரட்டாசி. 

ஆ)மாசி, பங்குனி.

 இ)சித்திரை, வைகாசி. 

ஈ)ஆனி,ஆடி

விடை :  இ ) சித்திரை , வைகாசி

பாடலைப் படித்து விடை தருக

"வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்"

12.கம்பராமாயணத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ள காண்டம் எது?

அ)பால காண்டம். 

ஆ)யுத்த காண்டம் 

இ)கிட்கிந்தா காண்டம். 

ஈ)அயோத்தியா காண்டம்

விடை : ஈ ) அயோத்தியாகாண்டம்

13."மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ'-இவ்வடிகளில் கூறப்படுவது
யாது?

அ)இராமனின் வடிவம் 

ஆ) இராமனின் நிறம் 

இ)இராமனின் புகழ் 

ஈ) இராமனின் படை

விடை : ஆ ) இராமனின் நிறம்

14.இப்பாடலில் கதிரவனைக் குறிக்கும் சொல்லை எடுத்தெழுதுக

அ)விரிசோதி. ஆ)வெய்யோன். 

இ) அழகுடையான். ஈ)இளையான்

விடை : ஆ ) வெய்யோன்

15.வெய்யோ
பொய்யோ-இதில் இடம்பெற்றுள்ள தொடை நயம்

அ)மோனை நயம்

ஆ) எதுகை நயம். 

இ) இயைபு நயம். 

ஈ)முரண் நயம்

விடை : ஆ ) எதுகைநயம்


         பகுதி-I (மதிப்பெண்கள்-18)

                                     பிரிவு-1
எவையேனும் நான்கனுக்கு மட்டும் விடையளிக்க.(21ஆவது வினா கட்டாய வினா)

16.மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பங்கினை எழுதுக.

                      (i) மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்கின்ற நோயாளி அம்மருத்துவரை நேசிக்கின்றார். அத்துடன் அம்மருத்துவர் நோயை குணமாக்கிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

(ii) இங்கு மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் நோயாளியைக் குணப்படுத்துகிறது.

17.விடைக்கேற்ற வினா அமைக்க.

அ)வினா எட்டு வகைப்படும்.

விடை : வினா எத்தனை வகைப்படும் ?

ஆ)கோசல நாட்டில் வறுமை இல்லாததால் கொடை இல்லை.

விடை : கோசல நாட்டில் ஏன்  கொடை இல்லை ?


18.செய்குதம்பி பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

அருளைப் பெருக்கிட கல்வி கற்போம் !

அறிவைத் திருத்திட கல்வி கற்போம் !

மயக்கம் அகன்றிட கல்வி கற்போம் !

அறிவிற் சிறந்திட கல்வி கற்போம் !

உயிர்த் துணையாம் கல்வி கற்போம் !

இன்பம் சேர்ந்திட கல்வி கற்போம் !

கல்வியை என்றும் போற்றிக் காப்போம் !


19.உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்'
காலதூதர் கையிலே 'உறங்குவாய் உறங்குவாய்'
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்?எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

* கும்பகருணனே ! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம்  இன்றிலிருந்து இறங்கத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய் என்று சொல்லி எழுப்பினார்கள்.

* வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.


20.'சுற்றமாச் சுற்றும் உலகு' -இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.

சுற்/றமாச் - நேர் நிரை - கூவிளம்

சுற்/றும் - நேர் நேர் - தேமா

உல/கு  - நிரைபு  - பிறப்பு 


21:'செயற்கை' எனத் தொடங்கும் குறளை அடிபிறழாமல் எழுதுக.

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

தியற்கை அறிந்து செயல்


                          பிரிவு - 2

வையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடை தருக.

22.கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

இயற்கை - செயற்கை

இயற்கை இன்பம் பெற செயற்கைப் பொருட்களின் பயன்பாடுகளை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும்.


23.தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.(கரு, சோறு,எழுத்து)

அ)குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து எழுத்து


ஆ)விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை கரு

24,தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

விடை : அறிவை வளர்க்கும் கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.


Greentamil.in


25.தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை   செய்க.

அ) பசுமையான காட்சியைக் காணுதல்  கண்ணுக்கு நல்லது.(காணுதல்,காட்சி)

ஆ)பொதுவாழ்வில் நடித்தல் கூடாது. நடிப்பில் இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது.

(நடித்தல், நடிப்பு)

26.கலவைத் தொடராக மாற்றுக.

கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

27.வண்ணச் சொற்களால் தொடரை நிரப்புக.

அ). வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

ஆ)அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் சிவந்தது.

28.கலைச்சொற்கள் தருக.

அ ) Myth - தொன்மம்

ஆ) Intellectual - அறிவாளர்

பகுதி -III (மதிப்பெண்கள்-18)

                    பிரிவு-1

எவையேனும் இரண்டு வினாக்களுக்குச் சுருக்கமான விடை தருக.

29'மாளாத காதல் நோயாளன் போல்'- என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

"மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தி :

                              (i) “மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.

(ii) அதுபோன்று, வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! “நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்” என்று குலசேகராழ்வார். தன்னுடைய மனநிலையை வெளிப்படுத்துகிறார்.

30.உரையாடலில் இடம்பெற்றுள்ள வினா-விடை வகைகளைக் கண்டு எழுதுக.

மாதவி: அங்கே வருவது பனிமலரா?எழிலரசியா? -  ஐயவினா

எழிலரசி : நாளை பள்ளிக்கு வருகின்றாயா? - அறியா வினா

எழிலரசி; வருவேன்..நீயும் வருகிறாயா?

                      - நேர்விடை

மாதவி: வராமல் இருப்பேனா? - வினா எதிர்வினாதல் விடை 

எழிலரசி: உனக்கு மகிழுந்து ஓட்டத் தெரியுமா? - அறியா வினா

மாதவி : மிதிவண்டி ஓட்டத்தான் தெரியும்.

- இனமொழிவிடை

31.உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

      நெற்பயிர், கருவுற்ற பச்சைப்பாம்பின் வடிவம்போல் கருக்கொண்டு,  பின்பு   கதிர்விட்டு, செல்வம் சேர்ந்தவுடன் பண்பற்ற மக்கள் பணிவின்றித் தலை   நிமிர்ந்து நிற்பதுபோல் குத்திட்டு நின்று,முடிவில் கதிர் முற்றியவுடன் கற்றவர்கள் வணங்குதல் போல் வளைந்து காய்த்தன.

அ)கருவுற்ற பச்சைப்பாம்பின் வடிவம் எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

விடை : நெற்பயிர்

ஆ) பண்பற்ற மக்களிடம் பணம் சேர்ந்தால் எவ்வாறு நடந்து கொள்வர்?

விடை : பணிவின்றி தலைநிமிர்ந்து நடந்து கொள்வர்.

இ)கற்றவர்களின் பண்பு யாது?

      

பிரிவு-2

எவையேனும் இரண்டு வினாக்களுக்குச் சுருக்கமான விடைருக. (34-வது வினா கட்டாய வினா)

32.சதாவதானம் என்றால் என்ன?கா.ப.செய்குதம்பிப் பாவலர்' சதாவதானி' என அழைக்கப்படக் காரணம் யாது?

* ' சதம்  ' என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையையும் , நினைவாற்றலையும் , நுண்ணறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம்.

* செய்குதம்பிப் பாவலர் 1907 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ' சதாவதானி ' என்று பாராட்டப் பெற்றார். 

* அன்று  முதல் சதாவதானி செய்குதம்பிப் பாவலர் என்று அனைராலும் அழைக்கப்பட்டார்.


33.சுற்றமும் பொருளும் பகையை வெல்ல உதவும் என்ற வள்ளுவரின் கருத்தை விளக்குக.

34.அடிபிறழாமல் எழுதுக.

அ)'அருளைப் பெருக்கி' எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடல்

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

                    (அல்லது)

ஆ)'தண்டலை மயில்களாட்' எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்.

தண்டலை மயில்களாட தாமரை விளக்கந் தாங்க 

கொண்டல்கள் முழவினேங்க குவளைகண் விழித்து நோக்க

தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின்

வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ

                             பிரிவு-3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடை தருக.

35.முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.

இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோள் வகையைச் சுட்டி விளக்குக.

இக்குறட்பாவில் ஆற்றுநீர்ப் பொருள்கோள் அமைந்துள்ளது.

குறளின் பொருள் : 

          முயற்சி செய்தால் ஒருவருக்குச் செல்வம் பெருகும்.முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்.

பொருள்கோள் விளக்கம் :

              பாடலின் தொடக்கம் முதல் முடிவுவரை ஆற்று நீரின் போக்கைப்போல  நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்ததால் இது ' ஆற்றுநீர்ப் பொருள்கோள் ' ஆகும்.

36.தேவர் அனையர் கயவர் அவரும்தான்
மேவன செய்தொழுக தான் - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

      இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி வஞ்சப்புகழ்ச்சி அணி

அணி இலக்கணம் :

                 பழிப்பது போலப் புகழ்வதும் , புகழ்வது போலப் பழிப்பதும் வஞ்சப் புகழ்ச்சி அணியாகும். இப்பாடல் புகழ்வது போலக்கூறி பழிக்கப்பட்டுள்ளது.

பொருள் விளக்கம் :

புகழ்தல் - கயவர் , தேவர்களுக்கு ஒப்பாவர்.

பழித்தல் - கயவர் தம் மனம் போன போக்கில் தீய செயல்களைச் செய்வார்கள்.

குறள் விளக்கம் :

               தேவரும் கயவரும் ஒரு தன்மையர். தேவரைப் போல கயவரும் தாம் விரும்பியதைச் செய்வர்.


37.அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு தொடரை மாற்றுக.

அ.ஓடிய அருணா(எழுவாய்த் தொடர்)

விடை : அருணா ஓடினாள்

ஆ.குழந்தை வந்தது.(பெயரெச்சத் தொடர் )

விடை : வந்த குழந்தை 

இ.அரசர் தந்தார். (வேற்றுமைத் தொடர்)

விடை : தந்ததைக் கேட்டார்.

பகுதி-IV (மதிப்பெண்கள்-25)

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக

38.அ)தமிழர் மருத்துவமுறைக்கும் நவீன மருத்துவமுறைக்கும் உள்ள தொடர்பை
விளக்குக.

தமிழர் மருத்துவமுறை / நவீன மருத்தும்

(i) வெளிப்பூச்சும் மருந்து உட்கொள்ளும்
மருந்து என இரு முறையில் மருந்துகள்
தரப்படுகிறது.

* நவீன மருத்துவத்திலும் இம்முறையே பின்பற்றப்படுகிறது.

(ii)  புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டும் போது புண்ணின் மேல் பஞ்சு வைத்து துணியால் கட்டுபோடுவார்கள்.

* நவீன மருத்துவத்திலும் கட்டுப்போடும்போது பஞ்சு வைத்துக் கட்டுகிறார்கள்.

(iii) தமிழர் மருத்துவத்தில் எலும்பு ஒட்டி இலை, துளசி, முகமுசு, கீழாநெல்லி, தூதுவளை, வேம்பு, கற்றாழை, ஆடாதொடா, வில்வம் போன்றவைகளை அரைத்து பற்றும் , உட்கொள்ளவும் கொடுப்பார்கள்.

* நவீன மருத்துவத்தில் கூழ்மமாகவும் ( டானிக் ) மாத்திரைகளாகவும் கிடைக்கின்றன.

(iv)  நோயாளிக்கு நோயின் கடுமையைத்
தணிக்க மருந்து, சுகாதாரமான சூழல்,
இனிய இசை, அன்பான பணிவிடை
போன்றவற்றால் மிக விரைவாக நோய்கள் குணமாகும்.

* நவீன மருத்துவத்திலும் இவை உள்ளன. ஆனால் வளர்ந்த நாகரிகம் கொண்ட மக்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

(v) மிளகு, சுக்கு, திப்பிலி, இஞ்சி, பூண்டு,
சீரகம் போன்ற உணவு பொருட்களால்
செய்யப்படும் மருந்துகளைக் கொண்டு
நோயைக் குணப்படுத்தப்படுகிறது.

* நவீன மருத்துவத்திலும் இவை மாத்திரைகளாகக் கிடைக்கின்றன.



                       (அல்லது)

ஆ) வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும்
பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.


                சிறந்த அமைச்சர் என்பவர், ஒரு செயலைச் செய்வதற்குரிய கருவி, செய்வதற்கு ஏற்ற காலம், மனவலிமை, குடிமக்களைக் காத்தல், ஆட்சிமுறை குறித்துக் கற்றல், சிறந்த நூல்களைக் கற்றல், விடாமுயற்சி என்னும் சிறப்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.

                              நுண்ணறிவு, நூலறிவு, சூழ்ச்சித்திறமை என்னும் ஆற்றல் பெற்றவரே சிறந்த அமைச்சராக முடியும்
என வள்ளுவர் கூறுகிறார்.

        இக்காலத்தில் நடைமுறை ஆட்சிக்கும் இப்பண்பு இன்றியமையாதனவே.
அதனால் விளையும் நன்மை, செய்யும் வழிவகை ஆகியன அறிந்து செயல்திறமும் கொண்டவராக
இருக்க வேண்டும். குடியாட்சியிலும் இப்பண்புடையோரே அமைச்சராகப் பணியாற்ற முடியும்.


39.அ)நேற்றிரவு பெய்த மழை தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது. தந்தை என்னிடம்,"இலட்சுமி
கூப்பிடுகிறாள், போய்ப் பார்" என்றார். 'இதோ சென்று விட்டேன்" என்றவாறே
அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக் கொடுத்து,"என்னடா விளையாட
வேண்டுமா?" என்று கேட்டேன்.என் தங்கையும் அங்கே வந்தாள்.அவளிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்" என்று கூறினேன்.

இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

1 ) வாழைத்தோப்பு  - மரபு வழுவமைதி

2 ) மாடு கத்தியது - மரபு வழுவமைதி

3 ) இலட்சுமி கூப்பிடுகிறாள் - திணை வழுவமைதி

4 ) இதோ சென்றுவிட்டேன்

5 ) நீயும்  இவனும் விளையாடுங்கள் - இடவழுவமைதி

                     (அல்லது)

ஆ)கல்வியின் இன்றியமையாமையை விளக்கி நண்பனுக்கு/தோழிக்கு மடல்
வரைக.

40.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

Greentamil.in


41.கொடுக்கப்பட்டுள்ள மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பத்தை நிரப்புக.


42.அ)நயம் பாராட்டுக.

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ?

                                                    - பாரதியார்.

திரண்ட கருத்து :

      வானத்தில் உலவுகின்ற நிலவையும், விண்மீன்களையும் காற்றையும் அழகுபட அமைத்து அதில் குலாவும் அமுதத்தைக் குடித்து அழகாக்கினோம். எங்கும் உலவுகின்ற மனமாகிய சிறு பறவையை எவ்விடத்திலும் ஓடச் செய்து மனம் மகிழ்ந்தோம். பலாக்கனியின் சுளைகள் அடங்கிய வண்டியில் ஒரு வண்டு பாடுவது வியப்பல்ல. தேன் உள்ள இடமெங்கும் வண்டுகள் செல்லும் அதுபோல அழகுள்ள இடங்களில் மனம் செல்கின்றது.

மையக் கருத்து :

     மனமானது சிறு பறவையைப் போன்று அழகுள்ளவற்றை எல்லாம் கண்டு மகிழும் என்று பாரதியார் கூறுகின்றார்.


மோனைத் தொடை

நிலாவையும் - நேர்ப்பட
குலாவும் - கோல
பலாவின் - பாடுவதும்

எதுகைத்தொடை

நிலாவையும் குலாவும்
உலாவும் - பலாவின் - அடி எதுகை

இயைபுத்தொடை

- வெறிபடைத்தோம் - மகிழ்ந்திடுவோம்.



                       (அல்லது)

ஆ)மொழிபெயர்க்க.

Malar: Devi, switch off the lights when you leave the room

Devi : Yeah.We have to save electricity.

Malar: Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi : Who knows? In future our country may launch artificial moons to light our
night time sky! 

Malar: I have read some other countries are going to launch these types of
illumination satellites near future.

Devi : Superb news! If we launch artificial moons,they can assist indisaster
relief by beaming light on areas that lost power.

மலர் : தேவி, நீ அறையை விட்டு வெளியே செல்லும் முன் விளக்கை அணைத்துவிடு.

தேவி :  ஆம், நாம் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்.

மலர் : நம் நாடு தெரு விளக்குகளை எரிய வைப்பதற்கு நிறைய மின்சாரத்தைச் செலவு செய்கிறது.

தேவி : யாருக்குத் தெரியும்? வருங்காலத்தில் நம் நாடு செயற்கை நிலாவை நிறுவி இரவில் வானத்தில் விளக்குகளை எரிய வைக்கலாம்.

மலர் :  வருங்காலத்தில் நிறைய நாடுகள் இவ்வகையான செயற்கைக்கோளை நிறுவ இருப்பதாக நான் வாசித்துள்ளேன்.

தேவி : நல்ல செய்தி! நாம் செயற்கை நிலவை நிறுவினால் அது பேரழிவு மற்றும் மின்சாரம் இல்லாத சமயத்தில் ஒளியூட்டி நிவாரண உதவிகளை செய்ய வழி செய்கிறது.


பகுதி-V (மதிப்பெண்கள்-24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.

43.அ)'சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்' என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப்
போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர்
பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய
கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி....தண்டலை மயில்கள் ஆட...
இவ்வுரையைத் தொடர்க.

          தண்டலை மயில்கள் ஆட, விரிந்த தாமரை மலர்கள் விளக்கு ஏற்றியது போல் தோன்ற, சூழ்ந்துள்ள மேகங்கள் மத்தள ஒலியாய் எழ, மலர்ந்துள்ள குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பது போல காண நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிய, தேன் ஒத்த மகர யாழ் இசைபோல வண்டுகள் ரீங்காரம் பாட மருதம் காட்சியளிக்கின்றது என்று இயற்கை கொஞ்சும் மருத நிலத்தை நம் கண்முன் காட்டுகிறார்.

         ஆறு இயற்கையின் தோற்றம். அது வருகின்ற பாதையெல்லாம் வளம் சேர்க்கும் அதனைப் பாட வந்த கம்பர். ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பாய்கிறது என்று அழகுணர்ச்சியுடன் சந்த நயத்துடனும் பாடுகிறார்.

           ‘வண்மையில்லை' என்ற பாடலில் வாங்க வேண்டியவர்கள் இல்லை. அதனால் கொடுக்க வேண்டியவர்கள் இல்லை. வாங்குபவர் இல்லாததால் கொடுப்பவர்களும் இல்லை. பகைமை ஒன்று இல்லாததால் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்புமில்லை. பொய் பேசுவதற்கே ஆள் இல்லை என்பதால்   மெய் என்பது தனித்து விளங்கவில்லை. கல்வி கேள்விகள் நிறைந்துள்ளதால் இங்கு அறியாமை இல்லை என்று நல்ல நாட்டிற்கு இலக்கணத்தைக் கூறியுள்ளார்.

            'கல்வியில் பெரியர் கம்பர்' என்ற சிறப்புக்குரியவர். அவர் இராமனுடைய அழகை வருணிக்கிறார். கவிதையில் வடித்துக் கூற இயலாத அழகு இராமனின் அழகு. பல உவமைகளை கூறினார். மை, மரகதம், கடல், மழைமேகம் என்றெல்லாம் சொல்லி. நிறைவாகச் சொல்ல இயலவில்லை என்பதை 'ஐயோ' என்ற  சொல்லில் வைப்பதன் மூலம் காட்டுகிறார்.

      கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ! அதில் ஒன்று சந்த இன்பம் பொருள் புரியாவிடினும் சந்தம் இன்புறுத்தி விடுகிறது. ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா' என்று பாரதி சொல்வதற்கு கம்பனின் சந்த நயம் சான்றாகும்.

                          மேலும் உறங்குகின்ற கும்பகன்னனின் உறக்கத்தைக் கலைக்க சென்றவர்களின் செயல் நம்மை
இன்புறச்செய்யும். இராவணன் கும்பகன்னனைப் போருக்கு அனுப்ப எண்ணுகிறான். தன் படை வீர்களிடம்
அவனை உலக்கையாலும், தடியாலும், கையாலும் மாறிமாறி இடித்து எழுப்புகின்றனர். இதனை ஒரே
வரியில் அமைந்த சந்தம் இடிக்கும் காட்சியைக் கண்முன் காட்டுகிறது.

         இவ்வாறு கம்பனின் கவிதையில் சொல்நயம், பொருள் நயம் சந்த நயம் அணி நயம் என்று பலவற்றைக்
கூறிக்கொண்டே செல்லலாம். கம்பனின் கவிதைகளைப் படித்துச் சுவைப்போம்.

                          (அல்லது)

ஆ)"உவமையும் உத்தியும் கொண்டு கவிதைகளைப் படைப்பதில் வல்லவர் கம்பர்" என்னும் கூற்றைச் சான்றுடன் நிறுவுக.

44.அ)பண்டைத் தமிழரின் திணைநிலை வாழ்க்கைமுறையை இன்றையதமிழரின்
வாழ்க்கைமுறையோடு ஒப்பிட்டு எழுதுக.

                             (அல்லது)

ஆ)தமிழ் இலக்கணம் கூறும் முதற்பொருள் குறித்து ஒரு கட்டுரை வரைக.


45.அ)நீங்கள் படித்த கதை/கட்டுரை /சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.


             (அல்லது)


ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த
நிகழ்வைக் கட்டுரையாக்குக.


Greentamil.in


வினா உருவாக்கம் :

திரு.மணி மீனாட்சி சுந்தரம் , 

தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி , 

சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை.

விடைத்தயாரிப்பு 

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.


*******************   ********   ***************

Post a Comment

2 Comments