மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய திருவாசகம்


உரை விளக்கம்: 

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி , 

தலைமையாசிரியர் , ( ப.நி )

கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி

*************    **************   ************

கொள்ளேன் புரந்தரன் , மாலயன் 

வாழ்வு ; குடிகெடினு

நள்ளே னினதடி யாரொடல்

லானர கம்புகினு

மெள்ளேன் றிருவரு ளாலே

யிருக்கப் பெறினிறைவா

வுள்ளேன் பிறதெய்வ முன்னையல்

லாதெங்க ளுத்தமனே.   (2)

உரை: 

             இறைவனே! எங்கள் உத்தமனே! இந்திரன், திருமால், பிரமன் முதலியோரின் உலகங்களின் வாழ்வினை என் உள்ளத்தில் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். என் குடியே அழிவதா யினும் நின் அடியவரோடு அல்லாமல் வேறொருவரோடு நட்புக் கொள்ளேன். நின் திருவருளாலே இருக்கப் பெறின் நரகத்தை நான் அடைந்தாலும் அதனை இகழ மாட்டேன். நின்னையன்றி பிற தெய்வங்களை நினைத்தும் பாரேன். எனவே செத்துப் பிறக்கின்ற சிறு தெய்வங்களை எண்ணாது பிறவாயாக்கை உடையவனாகிய நின்னை மட்டுமே நினைந்து என் பிறப்பறுக்க வழிதேடுவேன்.

உத்தம னத்த னுடையா

னடியே நினைந்துருகி

மத்த மனத்தொடு மாலிவ

னென்ன மனநினைவி

லொத்தன வொத்தன சொல்லிட

வூரூர் திரிந்தெவருந்

தத்த மனத்தன பேசவெஞ்

ஞான்றுகொல் சாவதுவே.  ( 3)

உரை: 

           உத்தமனாகவும் தந்தையாகவும் என்னை அடிமை கொண்டவனாகவும் விளங்கும் இறைவா! நின் திருவடியையே நினைந்து உருகி இவன் பித்தன் எனப் பிறர் கருதுமாறு பக்தி  மிகுதியால் களிப்புமிகு உள்ளத்துடன் ஊர் ஊராகத் திரிந்து என் மனதில் தோன்றும் பலவற்றை அடியேன் கூறிட இதனைக் கண்டோர் எல்லோரும் தத்தம் மனத்தில் தோன்றியவற்றைக்   கூறவும் யான் சாவது (செயலற்றிருக்கும் நிலையை நான் அடைவது) எப்பொழுது என்று அறிகிலேனே.






Post a Comment

0 Comments