மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய
திருவாசகம்
சாவமுன் னாட்டக்கன் வேள்வித்
தகர்தின்று, நஞ்சமஞ்சி,
யாவவெந் தாயென் றவிதா
விடுநம் மவரவரே
மூவரென் றேயெம்பி ரானொடு
மெண்ணிவிண் ணாண்டுமண்மேற்
றேவரென் றேயிறு மாந்தென்ன
பாவந் திரிதவரே. ( 4 )
உரை:
தக்கன் என்பான் தன்னை மதிக்காமல் செய்த யாகத்தால் வீரபத்திரரைக் கொண்டு அவ்வேள்வியை அழித்துத் தக்கனது தலையையும் அறுத்து அவன் இறக்குமாறு செய்தீர். மேலும் அவ்வேள்வியில் கலந்து கொண்ட பிரமன் முதலியோரும் தேவர்களும் தக்கன் வேள்வியில் இட்ட ஆட்டிறைச்சியாகிய அவிர்பாகத்தை உண்டனர். மேலும் திருப்பாற்கடலைக் கடையும் போது தோன்றிய நஞ்சினுக்கும் அஞ்சினர். இந்நிலையில் எமக்குத் தந்தையே என்று முறையிட்டு பிரமன் முதலியோர் தத்தமக்குரிய விண்ணுலகு ஆண்டு மண்ணுலகில் தேவர் எனவும் சொல்லப்பட்டு செருக்கடைந்து திரிகின்றனரே. இவர்கள் என்ன பாவம் செய்தனரோ?
தவமே புரிந்திலன் றண்மல
ரிட்டுமுட் டாதிறைஞ்சே
னவமே பிறந்த வருவினை
யேனுனக் கன்பருள்ளாஞ்
சிவமே பெறுந்திரு வெய்திற்றி
லேனின் றிருவடிக்காம்
பவமே யருளுகண் டாயடி
யேற்கெம் பரம்பரனே. ( 5 )
உரை:
எம் மேலான பரம்பொருளே வீணாகப் பிறப்புற்ற அரிய வினைகளை உடைய அடியேன் தவம் புரிந்திலேன். குளிர்ந்த மலர்களால் அருச்சனை செய்து தவறாமல் இறைஞ்சேன். உனக்கு அன்பு செய்யும் அடியார்கள் நடுவே கலந்திருக்கும் சிவத்தை அடையும் செல்வத்தை அடைந்திலேன். அடியனேன் ஆகிய எனக்கு நின் திருவடிகளை இடைவிடாது நினைத்தற்குரிய பிறப்பினையே திருவருள் புரிய வேண்டும்.
0 Comments