8 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 , கட்டுரை - தேசிய ஒருமைப்பாடு

 

எட்டாம் வகுப்பு - தமிழ் 

கட்டுரை 

தேசிய ஒருமைப்பாடு

குறிப்புச் சட்டம் :

முன்னுரை

 விடுதலைப் போராட்டம்

கவிஞர்களின் ஒருமித்த குரல்

 முரண்பாடான தற்போதைய நிலை

 வளர்க்க வழிகள்

 முடிவுரை.

முன்னுரை:

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - என்ற தாரக மந்திரத்தை நாம் கடைப்பிடித்தனால் தான் இன்று விடுதலைக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

“முப்பது கோடி முகமுடையாள் - உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள்

செப்புமொழி பதினெட்டுடையாள் எனில்

சிந்தனை ஒன்றுடையாள்"

என்ற பாரதியின் கவிதை அடிகள் தேசிய ஒருமைப் பாட்டினை உணர்த்துகின்றன.

விடுதலைப் போராட்டம் :

இந்தியா ஆங்கிலேயரின் ஆட்சி முறையிலிருந்து விடுதலை பெற நாம் ஒன்றுபட்டு உழைத்தோம். நமது ஒற்றுமையே அவர்களை நம் நாட்டிலிருந்து விரட்டியது. நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் செயல்பட்டால் தான் இவ்விடுதலை சாத்தியமாயிற்று. மொழியாலும், நாட்டாலும், மதத்தாலும் நாம் பிரிந்து நின்றாலும் இந்தியர் என்ற உணர்வுடன் நாம் ஒன்றுபட்டு உழைத்தோம். அதனால் இன்று உவப்புடன் வாழ்கிறோம்.


கவிஞர்களின் ஒருமித்த குரல் :

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றார் திருவள்ளுவர். “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று நம்மை ஒற்றுமைக்கு வழிகாட்டினார் கணியன் பூங்குன்றனார். “வங்கத்தின்
ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” என்று தண்ணீர்ப் பிரச்சனைக்கு நதிகளை இணைப்போம் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே குரல்
கொடுத்தார் பாரதியார். சுதந்திர இந்தியாவில் பாரத மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே அனைத்துக் கவிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்.

முரண்பாடான தற்போதைய நிலை :

பாரதத் தாய் மாநிலங்களின் தனிநாடு போராட்டத்தால் தலை குனிந்து நிற்கிறாள். ஒரு சில மாநிலங்கள் தனிநாடு உரிமை கேட்டுப் போராடுகின்றன. தண்ணீர் தர மறுப்பதால் பல மாநிலங்கள் பிளவுபட்டு நிற்கின்றன. மொழியாலும், தண்ணீராலும் மாநிலங்களுக்கிடையே
தீர்க்கப்படாத பிரச்சனை நிலவி வருகிறது.

வளர்க்க வழிகள் :

மக்களிடையே ஒற்றுமையும் வளர்ச்சியும் அமைய வேண்டுமானால் நாட்டுத் தலைவர்கள் தன்னலம் துறந்து பிறர் நலம் பேணும் தகைமை பெற்றிருத்தல் வேண்டும். சுய இலாபத்தோடு
செயல்படும் அரசியல் தலைவர்களையும், தீவிரவாத இயக்கங்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களுடன் உள்ள பிரச்சனைகளைப் பேசி தீர்க்க
வேண்டும். குறுகிய மனப்பான்மையை விலக்கிப் பரந்த மனப்பான்மையுடன் அனைவரும் செயல்பட வேண்டும். மாணவர்களின் மனதில் நாட்டுப் பற்றை விதைத்தால் நாளைய இந்தியா
வளமான இந்தியாவாக உலகில் வளமை பெற்றோங்கும்.

முடிவுரை

"இமயமலையில் ஒருவன் இருமினான்
என்றால் குமரி வாழ் மனிதன்
மருந்து கொண்டு ஓடினான்” என்ற செயல்பாடு ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் அமைய
வேண்டும். உலக நாடுகளில் நமது நாடு வல்லரசாக எல்லாத் துறைகளிலும் சிறப்புற்றோங்க நாம் ஒன்றுபட்டு உழைப்போம்.

வாழ்க பாரதம்!
வளர்க இந்தியா!


Post a Comment

0 Comments