PG - TRB - தமிழ் - பகுதி 7 , சங்க இலக்கியம் - பத்துப்பாட்டு - குறிப்புகள் /PG - TRB - TAMIL - PART 7 - SANGA ILAKKIYAM - PATHTHUPPAATTU

 

PG - TRB - தமிழ் - 

பகுதி 7 , சங்க இலக்கியம் - 

பத்துப்பாட்டு - குறிப்புகள்"ஆன்றோர் புகழ்ந்த அறிவினில் தெரிந்து சான்றோர் உரைத்த தண்டமிழ் தெரியல் ஒருபத்து பாட்டு” என்கிறார் நச்சினார்க்கினியார்.

* இதனால் பத்துப்பாட்டின் சிறப்பினை அறியலாம். பத்துப்பாட்டில் உள்ள நூல்களைக் கீழ்வரும் வெண்பா தெரிவிக்கிறது.

முருகு பொருநராறு பாண் இரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து

* இவற்றுள் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றும் அகப்பொருள் பற்றியன. மற்ற ஏழும் புறப்பொருள் தழுவியன.

* இவற்றுள்ளும் நெடுநல் வாடையை வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம் என்று வரும் தொடர் தலைவனை அடையாளம் காட்டுகிறது என்று சுட்டி அதனைப் புறப்பாடலில் சேர்த்தார் நச்சினார்க்கினியர்.

* அதில் இயற்பெயர் சுட்டப்படவில்லை என்று விளக்கி அதனை இந்நாளைய அறிஞர்கள் அகப்பாடலாகவே கொள்கின்றனர்.

* பத்துப்பாட்டு நூலினை நச்சினார்க்கினியர் உரையுடன் 1889-இல் உ.வே. சாமிநாத ஐயர் பதிப்பித்தார்.

 நூல்கள்           அடிகள்          ஆசிரியர்

திருமுருகாற்றுப்படை     317   நக்கீரர்

பொருநராற்றுப்படை        248 முடத்தாமக்கண்ணியார்

சிறுபாணாற்றுப்படை       269   நல்லூர் நத்தத்தனார்

பெரும்பாணாற்றுப்படை 500 உருத்திரங்கண்ணனார்

முல்லைப்பாட்டு           103 நம்பூதனார்

மதுரைக்காஞ்சி  782 மாங்குடி மருதனார்

நெடுநல்வாடை    188 நக்கீரர்

குறிஞ்சிப்பாட்டு     261 கபிலர்

பட்டினப்பாலை        301 உருத்திரங்கண்ணனார்

மலைபடுகடாம்     583 இரணிய முட்டத்துப்

பெருங்கௌசிகனார்

**************    ***************  ***********

1. திருமுருகாற்றுப்படை

* பத்துப்பாட்டில் தனியே கடவுள் வாழ்த்து இல்லை.

* திருமுருகாற்றுப்படையே கடவுள் வாழ்த்துப் போல முதலாவதாக உள்ளது.

* இதனை இயற்றியவர் நக்கீரர்.

* இது 317 அடிகளையுடையது. பதினோராம் திருமுறையில் சைவர்கள் இதனையும் சேர்த்துள்ளனர்.

* ஏனைய ஆற்றுப்படைகள் ஆற்றுப்படுத்துவோர் பெயரால் அமைந்திருக்க இது மட்டும் பாட்டுடைத் தலைவன் பெயரால் பெயர் பெற்றுள்ளது.

* இது வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடுப் பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப் படுத்துவது என்பர் நச்சினார்க்கினியர்.

* இதில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்),
திருவாவினன்குடி (பழனிமலை), திருவேரகம் (சுவாமிமலை),
குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய இடங்களில்
முருகன் வீற்றிருக்கும் திறம் பேசப்படுகிறது.

* இந்நூலின் வேறுபெயர் புலவராற்றுப்படை ஆகும்.

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளக்கு அவிர் ஒளி
என்றும் தொடக்கப் பகுதி முருகப் பெருமானின் ஒளிமிக்க திருத்தோற்றத்தை உவமைகாட்டி விளக்குகிறது.

இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே!

 என்னும் இறுதி அடிகளில் பன்முறையிலும் ழகரம் இசை இனிமை வழங்குகிறது

**************   *****************   **********

2. பொருநராற்றுப்படை

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறா அர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்

    -  என்பது தொல்காப்பியம் தரும் ஆற்றுப்படை இலக்கணம்.

* இவ்விலக்கணத்திற்கு ஏற்பக் கரிகாற் பெருவளத்தானிடம் பரிசில் பெற்ற
பொருநன் ஒருவன் பரிசில் பெற விரும்பும் பிறிதொரு பொருநனை
ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது பொருநராற்றுப்படை.

* இதன் ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார். இது 248 அடிகளைக் கொண்டது. ஆசிரிய அடிகளோடு சில வஞ்சியடிகளும் இதில் விரவி வந்துள்ளன.

* இந்நூல் பொருநன் கையில் உள்ள யாழ் வருணனையோடு தொடங்குகிறது. இது, மணங்கமழ் மாதரை மண்ணி அன்ன
மாட்சியோடு காட்சி தருகிறது.

* அடுத்துப் பாடினியின் அழகிய தோற்றம் முடிமுதல் அடிவரை     எடுத்துரைக்கப்படுகிறது. கரிகாலனைக் காணல், அவன் விருந்தோம்பல் சிறப்பு, தரும் பரிசிற் பெருமை, வழியனுப்பும் தன்மை ஆகியன விளக்கப்படுகின்றன.

*  இறுதியில் கரிகாற் பெருவளத்தானின் வெற்றிச் சிறப்புகள், கொடைச் சிறப்புகள், ஆட்சித்திறம், சோழ நாட்டுவளம் முதலியவை
கூறப்படுகின்றன.

***************   *************   *************

கல்விப் பணியில் ,

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் . மதுரை - 97861 41410 

YOU TUBE - GREEN TAMIL

**************    ***********   **************

Post a Comment

0 Comments