மாணிக்கவாசகரின் திருவாசகம்

 

5. திருச்சதகம்

(திருப்பெருந்துறையில் அருளியது)

பக்தி வைராக்கிய விசித்திரம்

உரை விளக்கம்: 

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி , 

தலைமையாசிரியர் , ( ப.நி )

கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி

(சதகம் என்பது நூறு என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். இறைவனைப் போற்றிப் பாடும் சதகம் ஆதலின் ‘திரு' என்னும் அடைமொழி பெற்றது) இதற்குப் பக்தி வைராக்கிய விசித்திரம்' எனத் தலைப்பிடப் பெற்றுள்ளது. அஃதாவது இறைவன்பால் செலுத்தும் அன்பில் உறுதியாக இருத்தல் எனலாம்.

(அ) மெய் உணர்தல்

(மெய்ம்மையே வடிவாக விளங்கும் இறைவனை உணர்தல்

என்பதாம்)

கட்டளைக் கலித்துறை

திருச்சிற்றம்பலம்

மெய்தா னரும்பி விதிர்விதிர்த்

துன்விரை யார்கழற்கென்

கைதான் தலைவைத்துக், கண்ணீர்

ததும்பி வெதும்பியுள்ளம்

பொய்தான் தவிர்ந்துன்னைப், போற்றி

சயசய போற்றியென்னுங்

கைதா னெகிழ விடேனுடை

யாயென்னைக் கண்டுகொள்ளே.

(1)

உரை: என்னை ஆட்கொண்ட உடையவனே! என் உடல் சிலிர்ப்படைந்து நடுநடுங்கி என் கைகளைத் தலைக்குமேல் வைத்துக் கண்ணீர் ததும்பி உள்ளம் வாடுதல் கொண்டு பொய்மை நீக்கி நின் மணம்பொருந்திய திருவடிகளை எண்ணி வணக்கம் செய்து வெற்றி வெற்றி என்று கூறி வணங்கி என் கைகளை நெகிழவிடாமல் மனஉருக்கத்துடன் வழிபடுகிறேன். இந்நிலையில் உள்ள என்னை அருள்நோக்கம் செய்து ஏற்றுக் கொள்ளவேண்டும்.


Post a Comment

0 Comments