சிந்தை அள்ளும் திருப்பனந்தாள் - செந்தமிழ்க் கல்லூரி - ஸ்ரீ காசிமடம் - THIRUPPANANTHAAL SENTHAMIZH COLLEGE - SRIKAASIMADAM

 



சிந்தை அள்ளும் திருப்பனந்தாள்

பெரும்புலவர் மு.சன்னாசி, 

M.A., M.Phil., M.Ed.,

இராயப்பன்பட்டி தேனி மாவட்டம்.




“சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்றிடச் சிவகதி தானே" திருமந்திரம் - 2716

ஓங்கி உயர்ந்த பனைமரங்கள்; ஓடிவரும் மண்ணியாறு; பேசும் கிளிகள்
சிவ சிவ; பாடுங்குயில்கள் சிவ சிவ; மேயும் பசுக்கள் சிவ சிவ; துள்ளும்
கன்றுகள் சிவ சிவ; கட்டடங்கள் எங்கும் சிவ சிவ; கன்னியர் உள்ளம் சிவ சிவ;
சிவ சிவ என்னும் மந்திரம் அங்கிங் கெனாதபடி எங்கணும் நிறைந்து காண்போரை இன்புறுத்தும் பேரூரே திருப்பனந்தாள் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறந்து விளங்கும் இந்த ஊரின் மேன்மையைக் கட்டுரை வடிவில் அனுப்புமாறு அடியேனுக்கு உற்ற இளவலுமாய் அங்குள்ள செந்தமிழ்க் கல்லூரியில் ஓராண்டிற்குப் பின்னர்ப் பயின்றவருமாய் வாணாள் சாதனையாளர் விருது பெற்றவருமாய்த் திகழும் பெரும்புலவர். திரு. துரையரசன் அவர்கள் கேட்டுக் கொண்டார். எனவே அடியேன் விருப்பார்வமுடன் முன்னோக்கிப் பயணித்து அந்த ஊரின் சிறப்பையும், அங்குள்ள செஞ்சடையப்பர் திருக்கோவில் சிறப்பையும், ஸ்ரீகாசிமடத்தின் சிறப்பையும், செந்தமிழ்க்கல்லூரியின் சிறப்பையும்
இயன்ற அளவு இதில் வழங்க எண்ணிக் கண்பொலி நெற்றியினான் கழலடி
வணங்குகிறேன்.


சைவத்தின் நிலைக்களன் :

"சைவத்தின் மேற்சமயம் வேறில்லை" - என்னும் சான்றோரின் வாக்குக்கு
இணங்க உயிர்த்துணையாம் சிவத்தைத் திருநெறிய தமிழால் திருக்கடைக்காப்பு
அருளிய திருஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பெற்றதே திருப்பனந்தாள் என்னும் தலம் ஆகும். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் 'செஞ்சடையப்பர்' இறைவியின் பெயர் பெரியநாயகி.

                இங்குத் தலமரமாக
விளங்குவது 'பனைமரம்' ஆகும். இத்தலத்தை வழிபட்டோருள் குறிப்பிடத்தக்கோர் பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம், அகத்தியர், சூரியன், சந்திரன், ஆதிசேடன்,
நாககன்னிகை, தாடகை, ஆளுடையபிள்ளை, குங்கிலியக் கலிய நாயனார் ஆகியோர் ஆவர். இத்தலத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தி ஆவார். சுவாமியின் விமானம் பிரணவ வடிவில் மூன்று ஸ்தூபிகளுடன் விளங்குகிறது. தாடகை வழிபட்டு உய்வு பெற்றதால் இது தாடகையீச்சுரம் எனஅழைக்கப்படுகிறது.


"கண்பொலி நெற்றியினான்" 
எனத் தொடங்கும் பதிகத்தைத்
திருஞானசம்பந்தப் பெருமான் இத்திருக்கோவிலுக்கு எழுந்தருளிச்
செஞ்சடையப்பரைப் பாடி வணங்கியுள்ளார். இத்திருத்தலத்தில் தாடகை என்பவள் குழந்தைப்பேறு வேண்டி நாள்தோறும் செஞ்சடையப்பரை மாலை சாத்தி மனம் நெகிழ்ந்து வேண்டி வழிபட்டுவந்துள்ளாள். அவ்வாறு வழிபட்டு வரும் ஒரு நாளில் அவள் மாலை சாத்தும் பொழுது அவளது ஆடை நெகிழ்ந்து விட்டது. அந்நிலையில் பெருமான் அவள் கொணர்ந்து வந்த மாலையைத் தம் திருமேனியாகிய இலிங்கமூர்த்தம் சாய்ந்து
ஏற்றுக்கொண்டது. அன்று முதல் சாய்ந்த நிலையில் திருமூர்த்தம் திகழ அது
கண்டு நாட்டுக்கு இடையூறு நேருமோ என அஞ்சி மக்கள் சோழ மன்னனிடம்
முறையிடச் சோழன் தன் பரிவாரங்களுடன் வந்து யானைகளைப் பூட்டி அத்திருமேனியை நிமிர்த்த முயற்சித்தும் இயலாமற் போகவே,
திருக்கடவூரைச்சார்ந்த குங்குலியக் கலய நாயனார் என்ற அடியவர் தம் கழுத்தில் கயிற்றை ஒருபுறமும் மறுபுறத்தினை இலிங்கத் திருமேனியிலும் கட்டித் தம்
உயிருக்கும் அஞ்சாது ஒருமையுணர்வுடன் இழுத்து இளைத்து நின்றார். தம் அடியவரின் ஒருமைப்பாடு கண்ட அண்ணலராகிய செஞ்சடையப்பர் திருமேனி நிமிர்ந்து நின்றது. இவ்வரலாறு அத்திருக்கோயிலில் உள்ள குங்கிலியக் கலய நாயனாரின் சன்னதியிலே இன்றும் காணலாம்.


ஸ்ரீ காசிமடம் :

       செஞ்சடையப்பர் திருக்கோவிலுக்குப் பின்புறமாக ஸ்ரீ காசிமடம் உயர்ந்தோங்கி விளங்குவதைக் காணலாம். இம்மடமானது திருவைகுண்டத்தில்
பிறந்து காசிவாசியாகத் திகழ்ந்து காசியில் கேதார் கட்டத்தில் முத்துக்குமாரசுவாமி மடம் என்ற பெயரில் ஸ்ரீ-ல-ஸ்ரீ குமரகுருபரசுவாமிகளால் நிறுவப்பெற்று, அம்மடத்தின் மரபில் வந்த ஆறாவது அதிபராகிய ஸ்ரீ-ல-ஸ்ரீ தில்லை நாயகத் தம்பிரான் சுவாமிகளால் திருப்பனந்தாளில் அமைக்கப் பெற்றது ஆகும். இங்கே
முதன் முதலாகக் காசியில் மடம் நிறுவிய குமரகுருபரர் வரலாற்றையும் சுருங்கக்
காணலாம்.

            குமரகுருபரர் 24-06-1625 அன்று திருச்செந்தூருக்கு அருகே உள்ள
திருவைகுண்டம் என்னும் ஊரில் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும்
சிவகாமிசுந்தரி அம்மையாருக்கும் மகவாக முருகப்பெருமான் அருளால் பிறந்தார். பிறந்த குழந்தை ஐந்து வயது நிரம்பும்வரை பேச்சு வாராநிலையில் பெற்றோர் மிகவும் வருந்தி குழந்தையோடு திருச்செந்தூர் சென்று அங்கே செந்திலாண்டவன்
அந்நிலையில் சன்னதியில் பாடுகிடந்து மனமுருகி வழிபட்டனர்.   
செந்திலாண்டவன் அருளால் குழந்தைக்குப் பேச்சு வந்தது. பேச்சு வந்தவுடன் குமரகுருபரர் 'கந்தர் கலி வெண்பா' - என்ற நூலை முருகப்பெருமானைப் போற்றிப் பாடினார். பின்னர்த் தமது ஊரில் எழுந்தருளியுள்ள கயிலை நாதர் மீது கயிலைக் கலம்பகம் பாடினார். இறைவனின் அருளால் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஞானசாத்திரங்களையும் விரைவாகக் கற்றுத் தேர்ந்தார்.

சிவபெருமான் எழுந்தருளியுள்ள தலங்களையெல்லாம் வழிபட்டு வந்த குமரகுருபர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது மதுரையை ஆண்ட மன்னன் 'திருமலை' ஆவான். அம்மன்னன் குமரகுருபரர் வருகையை அறிந்து அவரை எதிர்சென்று வரவேற்று மீனாட்சியம்மன் திருக்கோவிலை அடைந்து ஆலவாய்ச் சொக்கரோடு உடனுறை அன்னை மீனாட்சியை வழிபட்டுப் பின்னர் ஆறுகால்   மண்டபத்தில் அமர்ந்தனர்.

குமரகுருபரர் அன்னையைப் போற்றி செய்து மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடினார். அப்பெருமான் அந்த நூலை இசைத்துக் கொண்டிருந்த பொழுது அன்னை மீனாட்சி அங்குள்ள அர்ச்சகரின் குழந்தை வடிவில் மன்னன் திருமலை மடியில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்க, வருகைப் பருவத்தில், 'தொடுக்கும் கடவுட் பழம்பாடல்' என்னும் பாடல் இசைத்து முடிக்கும் தருவாயில் குழந்தை வடிவில் இருந்த அன்னை மன்னன் கழுத்திலிருந்த முத்து மாலையைக் கழற்றி குமரகுருபரர்க்குச் சூட்டினாள். பின் ஒளியாகத் தோன்றி மறைந்தாள். இந்நிகழ்வு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பின்பு மன்னன் திருமலை வேண்டுகோளை ஏற்று மதுரைக் கலம்பகம் பாடினார். மேலும், சோழநாட்டுத் திருத்தலங்களை வழிபட எண்ணி மதுரையிலிருந்து புறப்பட்டுத் திருவாரூரை அடைந்து தியாகேசப் பெருமானை வழிபட்டுத் 'திருவாரூர்   நான்மணிமாலை' பாடினார். காலம் செல்லச் செல்ல துறவுள்ளம் கொண்டு சிவஞான உபதேசம் பெறத் தமக்குரிய ஞானாசிரியரைச் சரண்புக விரும்பினார். எனவே அது போழ்து திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரத்தின் ஆதின குருமகா சந்நிதானமாக விளங்கியவர் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஆவார். அவரைச் சரண்புகுந்து குமரகுருபரர் துறவு தீட்சை பெற்றார். தன் ஞானாசிரியர் மீது பண்டார மும்மணிக்கோவை இயற்றினார். மேலும், சிதம்பர மும்மணிக்கோவை,   முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், நீதிநெறிவிளக்கம் ஆகிய நூல்களை   இயற்றினார். தம் குருவின் ஆணைக்கிணங்க காசிக்குச் சென்றார். அங்கிருந்த போது இந்துஸ்தானி மொழி அறிவதற்காகச் சகலகலாவல்லிமாலை பாடி சரஸ்வதி அருள் பெற்று இந்துஸ்தானி கற்றார். அங்கிருந்தபோது 'காசிக்கலம்பகம்' ' காசித்துண்டி விநாயகர் பதிகம்' ஆகியவை இயற்றினார். மேலும் காசியில்   இருந்தபோது குமரகுருபரர் அப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த பாதுஷாவின் நன் மதிப்பைப் பெற்று அவர் கொடையாக வழங்கிய நிலபுலன்களையும், மடம்  அமைப்பதற்குரிய இடத்தைக் கேதார் கட்டம் என்ற பகுதியில் பெற்றார்.

          'முத்துக்குமாரசுவாமி மடம்' - என்ற பெயரில் காசியில் மடம் அமைத்துப் பல அறப்பணிகள் புரிந்து வந்தார். 1688ஆம் ஆண்டு தம் சீடர்களில் ஒருவரான சொக்கநாதரைத் தம் வாரிசாக நியமித்த நிலையில் பரிபூரணம் எய்தினார். முதல் ஐந்து குருமரபும் காசியிலே இருந்து தொண்டு செய்துவர ஆறாவது குருவாக வந்த தம்பிரான் சுவாமிகள் ஸ்ரீ காசிமடத்தின் தலைமையைத் திருப்பனந்தாளுக்கு மாற்றி அமைத்து, சரபோஜி மன்னரின் ஆதரவைப் பெற்று மடத்திற்காகப் பலநில புலன்களைப் பெற்று அன்னம்பாலிக்கும் தொண்டிற்கு
இடையறாது உதவினார். இவ்வாறு வந்த குருமரபில் இருபதாவது எஜமான்
சுவாமிகளே ஸ்ரீ-ல ஸ்ரீ அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் ஆவார். அவர்களது அருளாட்சிக் காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள், அறச்சாலைகள் நிறுவப் பெற்றன. மேலும் அவர்கள் பல அறக்கொடைகளை நிறுவி அவற்றிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு என்றென்றும் பயன்படுத்துமாறு உருவாக்கிச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்பு இருபத்தோராவது எஜமான் சுவாமிகளாக இருந்து அருளாட்சி புரிபவர்கள் காசிவாசி ஸ்ரீ-ல-ஸ்ரீ முத்துக்குமாரசுவாமித் தம்பிரான்
அவர்கள் ஆவார். ஸ்ரீ காசி மடமானது குமரகுருபர சுவாமிகள் நிறுவிய
காலம் தொடங்கி இன்றுவரை அனைத்துப் பணிகளும் நிறைவுற
நடந்தேறுகின்றன.

செந்தமிழ்க் கல்லூரி :

               திருப்பனந்தாளில் ஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரி சென்னைப் பல்கலைக் கழக இசைவுடன் கீழ்த்திசைக் கல்லூரியாக 1945ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் வித்துவான்
2(D) தனித்தமிழ்ப் பட்டயமும் 29(A) சமஸ்கிருதம் - தமிழ் ஆகிய இருமொழிப்
பயிற்சிப் பட்டயமும் இக்கல்லூரியில் பயிற்றுவிக்கப் பெற்றன. மேலும்,
புல்லாங்குழல் இசை, மிருதங்க இசை, வீணையிசை ஆகியன
விருப்பமுடையோர்க்குப் பகுதி நேரமாகக் கற்பிக்கப்பெற்றன. பெருமைசான்றஇக்கல்லூரிக்கு முதல்வர் பெருந்தகையாக வாய்த்தவர்கள் தமிழறிஞர், கல்வெட்டு ஆராய்ச்சி வல்லுநர், சிவநெறிச்செல்வர் வித்துவான் கா.ம.வேங்கடராமையா
M.A., B.O.L., அவர்கள் ஆவார். மேலும் தமிழறிஞர்களான பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர், நகராமலை இராமலிங்கம் பிள்ளை, பெரும் பேராசிரியர் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் மாணாக்கரான ச.தண்டபாணி தேசிகர் ஆகியோர் பணியாற்றி இக்கல்லூரியின் மாண்பை உலகறியச் செய்துள்ளனர்.

   அடியேனும், என் வகுப்புத் தோழர்களும் பயின்ற காலத்தில் (1967-1971)
எங்களுக்கு முதல்வராகத் திகழ்ந்தவரும் ஐயா, கா.ம.வேங்கடராமையா அவர்களே ஆவார். அவர்கள் பன்னூற் புலமையும், பைந்தமிழ் ஆற்றலும், கல்வெட்டியல் ஆராய்ச்சித் தேர்ச்சியும், மாணாக்க மாணாக்கியரைக் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கம் சான்றோராக உருவாக்கிய நன்மணி ஆவார். நன்னூலும், கல்வெட்டுகளும், சங்க இலக்கியமும் கற்பிப்பதில் மாணாக்க மாணாக்கியரின் உள்ளம் கொள்ளும் வண்ணம் உரைக்கும் வல்லமை உடையவர். அவர்களது தோற்றப் பொலிவு வெண்ணீறு துதைந்த நெற்றியும், உருத்திராக்கம் பூண்ட கழுத்தும், முழங்கால் வரை நீண்ட கைகளும், கதராடைக்குப் பெருமை சேர்க்கும் சிவந்த மேனியும், உயரமான உருவும் இன்றும் அவர்களிடம் பயின்ற மாணாக்க மாணாக்கியர் நெஞ்சில் நிறைந்திருக்கும் என்பது உறுதி.
மேலும் எங்களுக்குப் பேராசிரியப் பெருமக்களைப் பற்றியும் இங்கே
குறிப்பதில் பெருமை கொள்கிறேன். முதல்வர் ஐயா அவர்களுக்கு அடுத்து
மூத்த பேராசிரியராகத் திகழ்ந்தவர் வித்துவான் சுந்தரேசம்பிள்ளை ஐயா அவர்கள் ஆவார். அவர்கள் இலக்கண இலக்கியங்களைக் கற்பிக்கும் பாங்கானது சங்க இலக்கிய நடையில் அருந்தமிழாற்றலை வெளிப்படுத்தும் இயல்பினர் ஆவார்.

மேலும், முனைவர் கு. சுந்தரமூர்த்தி ஐயா அவர்களைத் தமிழறிஞர் உலகம்
நன்கு அறியும். அவர்கள் தொல்காப்பியச் செல்வர் என்று எல்லோராலும்
அழைக்கப் பெறுபவர். ஆழ்ந்த இலக்கண இலக்கியப் புலமை சான்றவர்.
ஐயா சுந்தரமூர்த்தி அவர்கள் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியிலேயே பயின்றவர். அவர்களுக்குக் கற்பித்தோர் பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா முதல்வர், பேராசிரியர் தி.வே. கோபாலையர், பேராசிரியர் நகராமலை இராமலிங்கம் பிள்ளை, பேராசிரியர் மகாமகோபாத்தியாய டாக்டர் உவே.சாமிநாத ஐயரின் மாணாக்கர் ச. தண்டபாணி தேசிகர் ஆகியோர் ஆவர்.

இப்பேராசிரியர்களைப் பற்றி ஐயா அவர்கள் உள்ளம் உருகி வியந்து பேசுவார்கள். திருக்குறளையும் பரிமேலழகர் உரையையும் அவர் கற்பிக்கும் பாங்கும், இலக்கணத்தை அவர் நுண்மாண் நுழைபுலத்துடன் உரைக்கும் சிறப்பும் அப்பெருமானிடம் கற்றவர் பலரும் என்றென்றும் வியந்து போற்றற்குரியது ஆகும். மேலும், வித்துவான் தா.ம .வெள்ளைவாரணம் ஐயா அவர்கள் பெயருக்கேற்ற நிறப் பொலிவும் வெண்ணீறு துதைந்த மேனியும், கதராடையே உடுத்தும் சிறப்பு மிக்க பேராசிரியராக வாய்த்தார்கள். அவர்களும் ஐயா கு. சுந்தரமூர்த்தி அவர்களைப் போன்றே திருப்பனந்தாள் கல்லூரியில் அவர் பயின்ற அதே ஆசிரியர்களிடம் பயின்ற பெருமைக்கு உரியவர். 

வெற்றிலை சீவல் போட்டு விட்டு வகுப்புக்கு வந்து மேடையில் நின்று அவர்கள் பாடம் உரைக்கும்இலக்கணத்தை மிகவும் பாங்கு நன்னூலில் கூறப்பெற்றிருக்கும் நல்லாசிரியர்க்கு உரிய அனைத்து இலக்கணமும் ஒருங்கே திகழ்ந்து பொலியும். எளிமையாகப் புரியும் வண்ணம் மாணாக்க மாணாக்கியர்க்கு விளக்குவார்கள்,   மதுரகவி என்னும் பட்டம் பெற்ற ஐயா அவர்கள் இன்னிசையுடன்   இலக்கியங்களைக் கற்பிப்பார்கள்.   மேலும் விரும்புகின்ற மாணாக்கரைக்   குருவாகச் சேர்த்து வாரவழிபாடு செய்வதற்கு அருள்மிகு செஞ்சடையப்பர் திருக்கோவிலுக்கு வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் அழைத்துக் கொண்டு வருவார்கள். ஒவ்வொரு சன்னதி முன்பும் மாணாக்கரைப் பாடுவதற்கு ஊக்கப்படுத்துவார்கள். சோமாஸ்கந்தர் சன்னதியில் "செய்ய கருங்குஞ்சி" எனத் தொடங்கும் பாடலை ஐயா அவர்கள் பாடும்போது கேட்போர் உள்ளம் எல்லாம் கரையச் செய்யும். செய்யுளின் ஓசை நயங்களையும் இன்னின்ன செய்யுளை இந்த இந்த ஓசைகெழுமப் பாடவேண்டும் என்பதையும் உரைப்பார்கள். அடுத்து, இனிமையாக அனைத்து மாணாக்கரையும் அரவணைத்துச் செல்லும் பேராசிரியர் ஐயா சிவப்பிரகாசம்பிள்ளை அவர்கள் ஆவார். அவர்கள் சிற்றிலக்கியங்களை அந்த அந்த இலக்கியங்களுக்கு ஏற்ற வகையில் சுவையுடன் எடுத்துரைப்பதோடு மாணாக்க மாணாக்கியரை எழுந்து நின்று வாசிக்கும் பயிற்சியையும் வழங்கினார்கள். அடுத்து ஐயா, பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள். இவர் முதல்வர் ஐயா கா.ம.வேங்கடராமையா அவர்களின் புதல்வர் தமிழ்நாடு முழுவதும் கவியரங்க மேடைகளில் இவர் கால்படாத இடமே இல்லை எனலாம். தாம் கவிதைகள் எழுதுவதோடு மாணாக்கர்க்கும் கவிதை எழுதப் பயிற்சி தந்து அம்மாணாக்கர் எழுதும் கவிதைகளைத் தொகுப்பு நூலாக வெளியிட்டு ஊக்கப்படுத்துபவர் ஆவார். ஐயா அவர்களும் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் மாணாக்கரே ஆவார். வித்துவான் என்ற பட்டயப் படிப்பைப் புலவர் என்று மாற்றிப் பின்பு பி.லிட் என்ற பட்டப்படிப்பாக மாற்றிய பின்னர் அக்கல்லூரி கீழ்த்திசைக் கல்லூரி நிலையிலிருந்து கலை அறிவியல் கல்லூரியாகத் தற்போது திகழ்கிறது.

எனவே, திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரி தொடங்கப் பெற்ற காலம்
தொடங்கி இதுகாறும் ஆயிரக்கணக்கான தமிழ்ப்புலவர்கள் அக்கல்லூரியில் பயின்று அக்கல்லூரியின் புகழையும் பெருமையையும் நிலைநாட்டித் தமிழ் அறிஞர்களாகத் திகழ்கின்றனர். இக்கல்லூரியில் பயின்றோர் அனைவர்க்கும் பனந்தாள் என்றென்றும் 'சிந்தையள்ளும் திருப்பனந்தாளா'கவே திகழும் என்பது
உறுதி. அவ்வூரின்கண் திகழ்ந்துவரும் ஸ்ரீ காசிமடத்தின் திசை நோக்கித்
தொழுதும், எங்களுக்குச் செந்தமிழைச் செழுந்தமிழாகக் கற்பித்த பேராசிரியப் பெருமக்களை மனம் மொழி மெய்களால் வணங்கியும் அங்கே பயின்ற மாணாக்க மாணாக்கியராகிய அனைவரும் நன்றியூற்றெடுக்க மகிழ்ந்திருப்போம்.


நன்றி : 

தமிழ்ச்சுவடி - ஏப்ரல், 2021

Post a Comment

0 Comments