9 ஆம் வகுப்பு - தமிழ் - மதுரை மாவட்டம் - அலகுத்தேர்வு - 2 , வினாக்களும் விடைகளும் / 9th TAMIL - MADURAI - UNIT TEST - 2 , ANSWER KEY - FEBRUARY - 2022

 


அலகுத் தேர்வு -II - 2022

9 - ஆம் வகுப்பு - தமிழ்

மதுரை மாவட்டம் - 24 - 02 - 2022காலம் : 1.30 மணி       மதிப்பெண்கள் : 50

விடைத்தயாரிப்பு.

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.

*******************   ********   *************

                          பகுதி - 1

1 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                      6X1 = 6

1 )உற்றறியும் அறிவு மட்டுமே கொண்ட உயிர்கள் எவை?

அ) நண்டு. தும்பி 

ஆ) சிப்பி, நத்தை 

இ) புல். மரம்

ஈ) பறவை. விலங்கு

விடை : இ ) புல் , மரம்


2 'குடும்பவிளக்கு' என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அ) பாரதியார் 

ஆ) பாரதிதாசன் 

இ) வைரமுத்து

ஈ) தொல்காப்பியர்

விடை : ஆ ) பாரதிதாசன்

3 ) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியாரகப் போற்றப்படுபவர் யார்?

அ) முத்துலெட்சுமி 

ஆ) சாவித்திரிபாய் பூலே 

இ) பண்டித ரமாபாய் 

ஈ) ஔவையார்

விடை : ஆ ) சாவித்திரிபாய்பூலே

4 ) மலர்க்கை, வில்வாள் - இலக்கணக் குறிப்பு தருக.

அ) பண்புத்தொகை. வினைத்தொகை 

ஆ) உவமைத்தொகை, உம்மைத் தொகை

இ) உம்மைத்தொகை. உவமைத்தொகை

 ஈ) உருவகம். வினைத்தொகை

விடை : ஆ ) உவமைத்தொகை , உம்மைத்தொகை

பாடலைப்படித்து விடை தருக.


"பாய்ந்து பரவும் இளைய நதிகளே
பள்ளம் நிரப்ப வாருங்கள்
காய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும்
கதிர்கள் சுமந்து தாருங்கள்”

பாடல் அடிகளில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.

விடை : பாய்ந்து - காய்ந்து 

6 ) 'கழனி' என்பதன் வேறு சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) கிணறு

ஆ) வயல்

இ) பழனம்

ஈ) ஆ, இ, இரண்டும்

விடை : ஈ ) ஆ , இ , இரண்டும்


பகுதி - 2 (மதிப்பெண்கள் : 12) பிரிவு - 1

குறுகிய விடை தருக. (மூன்று மட்டும்),
3x2 =6

7. விடைக்கேற்ற வினா அமைக்க

அ) விக்ரம் சாராபாய் 'இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார்.

வினா : இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?

ஆ) பெண்ணுக்குக் கல்வி முதன்மையானது.

வினா : பெண்ணுக்கு முதன்மையானது எது ?


8 ) "மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே”
இவ்வரிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும் மூவறிவு, நான்கறிவு உயிர்கள் எவை?

மூவறிவு உயிர்கள் : கரையான் , எறும்பு 

நான்கறிவு உயிர்கள் : நண்டு , தும்பி

9. சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?

* பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம்.

* அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929 ஆம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டுவரப்பட்டது.

10 ) தமிழ் கற்றான். கை தட்டினான் - இவ்விரு தொடர்களில் வல்லினம் மிகாமைக்கான காரணம் என்ன?

     இரண்டாம்  வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.


                           பிரிவு - 2
குறுகிய விடை தருக. (மூன்று மட்டும்).
3X2 = 6

11. ஒரே தொடரில் இருவினைகளையும் அமைத்து எழுதுக.

சேர்ந்து - சேர்த்து

நண்பர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் சேர்த்து வைத்த  பணத்தின் மூலம் பள்ளி நூலகத்திற்கு நூல்கள் தந்தனர்.


12 ) கலைச்சொல் தருக.

அ) Downloand - பதிவிறக்கம்

ஆ) Volunteer - தன்னார்வலர்


13. சொற்களைப் பயன்படுத்தி இரு தொடர்கள் உருவாக்குக.

மக்கள், முகக்கவசம். தடுப்பூசி, பாதுகாப்பு

* பெருந்தொற்றுப் பரவி வருவதால் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.

* பாதுகாப்புடன் இருக்க இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.

14. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ) திருவளர்செல்வி. திருவளர்ச்செல்வி

விடை : அ ) திருவளர்செல்வி

ஆ) தேநீர்க்கடை. தேநீர்கடை

விடை : தேநீர்க்கடை 

பகுதி - 3 (மதிப்பெண்கள் - 9)

11 சுருக்கமான விடை தருக. 

(மூன்று மட்டும்) வினா எண் : 17 கட்டாய வினா.     3X3 =9

15 ) அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?


16. "சமைப்பது தாழ்வா? இன்பம்
சமைக்கின்றார் சமையல்செய்வார்"

அ) இன்பம் சமைப்பவர் யார்? 

     பெண்கள் உணவு சமைப்பது மட்டுமன்றி , அன்போடு பரிமாறி இன்பத்தையும் படைக்கின்றனர்.

ஆ) சமைப்பது தாழ்வா?

*  இல்லை. உணவு சமைப்பது என்பது , உயிரை உருவாக்குவது போலாகும்.

* பக்குவமாய்ச் சமைப்பதாலும் , உள்ளத்து அன்போடு பரிமாறுவதாலும் மனித வாழ்வு நலம் பெறுகிறது.


17. 'அறிவியல் என்னும் வாகனம் மீதில்' எனத் துவாங்கும்' ஓ! என் சம காலத் தோழர்களே! பாடலை அடிபிறழாமல் எழுதுக.

அறிவியல் என்னும் வாகனம் மீதில்
          ஆளும் தமிழை நிறுத்துங்கள்
கரிகா லன்தன் பெருமை எல்லாம்
    கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்*

ஏவும் திசையில் அம்பைப் போல
        இருந்த இனத்தை மாற்றுங்கள்
ஏவு கணையிலும் தமிழை எழுதி
         எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.*

                                                     - வைரமுத்து

18. வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை விளக்குக.

நாம் பேசும் போதும் எழுதும்போதும்
பொருள் மயக்கம் தராத வகையில்
மொழியைப் பயன்படுத்துவதற்கு
வல்லினம் மிகும், மிகா இடங்களை
அறிவது இன்றியமையாததாகும்.
வல்லினம் இட்டும் நீக்கியும் எழுத
வேண்டிய இடங்களை அறிந்து
கொண்டால் பிழையின்றித்
தொடர்களை அமைக்கலாம்.

எ-கா

மருந்துகடை - மருந்தும் கடையும்

மருந்துக்கடை-மருந்தை விற்கும் கடை

பகுதி - 4 (மதிப்பெண்கள்: 15)

எவையேனும் மூன்றுக்கு மட்டும் விடையளிக்கவும்.                    3X5= 15

19. உங்கள் பகுதி நூலகத்திற்கு தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப்
பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.

அனுப்புநர் :

                அ. தமிழரசன் , 

                  மாணவச்செயலாளர் , 

                  9 ஆம் வகுப்பு , 'அ' பிரிவு , 

                  அ.ஆ.தி.ந.மே.நி .பள்ளி , 

                   இளமனூர் , மதுரை - 625 201.

பெறுநர் : 

மேலாளர்,
நெய்தல் பதிப்பகம்,
சென்னை 600 001.


பெருந்தகையீர்,

     வணக்கம். உலகிலேயே பழம்பெருமை வாய்ந்த மொழிகளுள் முதல்  மொழியாகவும், முதன்மை
மொழியாகவும், செம்மொழியாகவும் விளங்குவது தமிழ்மொழியே.  கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
முன்தோன்றிய மூத்தமொழி தமிழ் என்று சான்றோர் போற்றிப் புகழ்வர். “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று மகிழ்வார் பாரதியார். ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளாக வளர்ந்துவரும் தமிழ்மொழியில் உள்ள  அருஞ்சொற்களின் பொருளை அறிய, உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதியின் பத்துப்படிகளை எங்கள் பள்ளி
நூலகத்திற்குப் பதிவு அஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.

                           தங்கள் உண்மையுள்ள,

                                 அ.தமிழரசன் , 

                              மாணவச் செயலர்.

உறைமேல் முகவரி :

மேலாளர்,
நெய்தல் பதிப்பகம்,
சென்னை 600 001.

**************   ************* *****************

20. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

21. நயம் பாராட்டுக.

பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான வீதி திகுதிகு என எரிக்கும்
மங்காத தணற்பி ழம்பே மாணிக்கக் குன்றே! தீர்ந்த
தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!

கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்
நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅளாவ அமைந்தனை! பரிதி வாழி!
                                                     - பாரதிதாசன்

 இப்பாடலின் ஆசிரியர் பாரதிதாசன்.  29.4.1891 இல் புதுவையில் பிறந்தார். பெற்றோர் கனகசபை
இலக்குமி அம்மாள்.  இயற்பெயர்
கனகசுப்புரத்தினம். பாரதியார் புதுவையில் வாழ்ந்த போது, அவருடன் நட்புக் கொண்டு, அவர் மீது கொண்ட அன்பு காரணமாகத் தம் பெயரைப்
பாரதிதாசன் எனப் புனைந்து கொண்டார்.

பாடலின் மையக்கருத்து:

     இயற்கையை வருணித்துப் பாடுவதில் வல்லவர் பாரதிதாசன். இப்பாடலில், சூரியனைப் பல்வேறு வடிவங்களில் வருணித்துப்பாடுகிறார். 

பாடலின் திரண்டகருத்து:

             கடலுக்குள்ளிருந்து பொங்கிப் பொழிந்து பிடரிமயிர் சிலிர்க்க வரும் சிங்கம் போல வருகிறாய் நீ! வானத்தில் திகுதிகு என எரிக்கும் தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே! தங்கத் தட்டே! வானத் தகளியற் பெரு விளக்கே!
கடலில் உன் கோடிக் கைகளை ஊன்றுகின்றாய் நெடுவானில் சுடர்க்கைகளை நீட்டுகிறாய். இடையில் தென்படுகின்ற மலை, காடு, இல்லம், பொய்கை, ஆறு அத்துணையிலும்
உன் ஒளி அளாவுகின்றது. கதிரவனே! நீ வாழ்க.

எதுகை நயம்:

            அடிதோறும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரப் பாடுவது எதுகை நயம் ஆகும்.

எடுத்துக்காட்டு

பொங்கி
சிங்கமே 
மங்காத
தங்கத்தின்

கடலிலே 
அடங்கநின்

மோனை நயம்:

      அடிதோறும் ,  சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.

பொங்கி  - பொலிந்து

தங்கத்தின் - தட்டு

இடைப்படு - இல்லமோ

அடங்க - அமைந்தனை

இடைப்படு - இல்லமோ

அணி நயம் : 

         பாரதிதாசன் பரிதியைப் பல்வேறு உருவகங்களாகக் காட்சிப் படுத்துகிறார். எனவே இப்பாடலில் உருவக அணி பயின்றுள்ளது.

மாணிக்கக்குன்று 

தங்கத்தட்டு

கதிர்க்கைகள்

தணற்பிழம்பு

இயைபு நயம்

பாடலில் இறுதிச்சீர் ஒன்று போல் வருவது இயைபு நயம் ஆகும்.

மயிர்சி லிர்க்கும் - என எரிக்கும்

குன்றே - விளக்கே 

**************   **************   ************

22. பத்தியைப் படித்து விடையளிக்கவும்.

                    இந்திய இசையின் அழகான நுட்பங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக்கூடிய இசைக்கருவிகளில் நாதசுரமும் ஒன்று, இந்த இசைக்கருவி நாதசுவரம் என வழங்கப்பட்டாலும் நாகசுரம் என்ற பெயரே சரியானது. நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது. சீவாளி நாணல் என்ற புல் வகையைக் கொண்டு செய்யப்படுகிறது.

அ) நாதசுரம். நாகசுரம் - இவற்றில் சரியானது எது?

விடை : நாகசுரம்

ஆ) நாகசுரக் கருவி செய்யப் பயன்படும் மரம் எது?

விடை : ஆச்சா மரம்

இ) நாணல் என்பது ......

அ) புல்                 ஆ) மரம் 

இ) இசை          ஈ) சீவாளி

விடை : அ ) புல்

ஈ) நாகசுரம் எத்தகைய இசைக்கருவி என விளக்குக.

               இந்திய இசையின் அழகான நுட்பங்களைத் தெளிவாக வாசித்துக் காட்டக்கூடிய இசைக்கருவி.

பகுதி - 5 (மதிப்பெண்கள் : 8)


விரிவான விடை தருக.

23. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.

முன்னுரை:

         நிலைத்த புகழுடைய கல்வியாலும் சாதனைகளாலும், பல தடைகளைத் தாண்டிப் பல பெண்மணிகள் சாதனை புரிந்து அழியாப் புகழ் பெற்றுள்ளனர். அவர்களுள் சிலரைப் பற்றி அறிந்து
கொள்வோம்.

பண்டித ரமாபாய்:

        1858 -ஆம் ஆண்டு முதல் 1922 - ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் சமூகத் தன்னார்வலர். பல தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர், "பெண்மை என்றால் உயர்வு” என்பதற்குச் சான்றாவார்.

ஐடாஸ் சோபியா:

            1870 முதல் 1960 வரை வாழ்ந்தவர். பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவம் கற்றதோடு, தமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூர் கிறிஸ்தவ
மிஷன் மருத்துவமனையை நிறுவியவர்.

மூவலூர் இராமாமிர்தம் :

            1883 முதல் 1962 வரை வாழ்ந்த இவர், தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற துணைநின்றவர். இவரைச்
சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு மகளிர் திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கி
வருகிறது.

சாவித்திரிபாய் பூலே :

           1831 முதல் 1897 வாழ்ந்தவர். 1848 ம் ஆண்டு பெண்களுக்கென தொடங்கப்பட்ட பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.

மலாலா:

          பாகிஸ்தானில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, பெண் கல்வி வேண்டுமெனப் பன்னிரண்டு வயதிலே போராட்டக்களத்தில் இறங்கிய வீரமங்கை ஆவார்.

முடிவுரை :

       இன்று பல்துறைகளிலும் சிறப்புற்று விளங்க, முன்பே வழிகாட்டிய இவர்கள் அனைவருமே சாதனைப் பெண்மணிகளே.

"புவி வளம் பெறவே
புதிய உலகம் நலம்பெறவே
வாழியவே பெண்மை வாழியவே"

**************    ******************* ********

 (அல்லது)


24, 'இந்திய வானியல் துறையில் தமிழர்களின் பங்கு' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

முன்னுரை :

' வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் ! 
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் ! - எனபு பாடினான் நம் பாட்டுப்பாட்டன் பாரதி. பாரதியின் வார்த்தைகள் இன்று நனவாகிக் கொண்டிருக்கின்றன.  ஆம் ! 
நம் நாட்டின் அறிவியலாளர்கள் அதைச் சாத்தியப்படுத்தி வருகிறார்கள். அதிலும் நம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வானியல் துறையை வசப்படுத்தி வருகிறார்கள். 

அப்துல்கலாம்

         இந்தியாவின் 11ஆவது குடியரசுத்
தலைவராகப் பணியாற்றிய இந்திய
அறிவியலாளர்; தமிழ் நாட்டின்
இராமேசுவரத்தைச் சேர்ந்தவர்; ஏவுகணை, ஏவுகணை ஏவு ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாம் காட்டிய ஈடுபாட்டினால் இவர், 'இந்திய ஏவுகணை நாயகன்' என்று
போற்றப்படுகின்றார் .  இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றவர். இவர் தம் பள்ளிக் கல்வியைத் தமிழ்வழியில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்மதி

           அரியலூரில் பிறந்த இவர், 2015இல் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர். இஸ்ரோவில் 1984ஆம்
ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். 2012இல் உள் நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (RISAT-1) திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இவர், இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட
இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் ஆவார்.


அருணன் சுப்பையா

    இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளரும்
திட்ட இயக்குநரும் ஆவார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடி அருகில் உள்ள கோதைசேரி
என்னும் ஊரைச் சேர்ந்தவர். இயந்திரப்
பொறியியலில் பட்டம் பெற்று, 1984இல்
திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்து, தற்போது பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகிறார். 2013இல் மங்கள்யான்
செயற்கைக்கோளை உருவாக்கிய
இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன்
திட்டத்தின் திட்ட இயக்குநராக
இருக்கின்றார்.


மயில்சாமி அண்ணாதுரை

      'இளைய கலாம்' என்று அன்புடன்
அழைக்கப்படும் இவர் கோவை மாவட்டம்
பொள்ளாச்சி வட்டம், கோதவாடி என்னும்
சிற்றூரில் பிறந்தவர். மேல்நிலை வகுப்பு
வரை அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில்
படித்தவர். நம் நாடு நிலவுக்கு முதன் முதலில் அனுப்பிய ஆய்வுக்கலம் சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.
சந்திரயான் - 2 திட்டத்திலும்
பணியாற்றிவருகிறார். சர்.சி.வி. இராமன் நினைவு அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். 

சிவன் :

          இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவராகப் பொறுப்பேற்றவர். இந்தப் பதவியை ஏற்ற முதல் தமிழர். 2015 ஆம் ஆண்டில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்கநராக இருந்து , இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றவர். நாகர்கோவில் அருகே சரக்கல்விளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்.

முடிவுரை :

  உலகம் இன்று உள்ளங்கைக்குள் வந்து விட்டது. அறிவியல் இன்றி ஓர் அணுவும் அசையாத நிலை இன்று உருவாகியுள்ளது. இதில் வானியல் துறையில் சாதித்த நம் தமிழர்கள் பாராட்டிற்குரியவர்கள்.

**************    *************   ***********
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வு எழுதி சான்றிதழ் பெற விரும்புவோர் தங்கள் பெயர் , வகுப்பு , மாவட்டம்  இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எனண்ணிற்கு அனுப்பி இணைப்பைப் பெறலாம்.

******************   *************   **********

Post a Comment

0 Comments