உழவர் திருநாள்
15 • 01 • 2022
உயிர் வாழத்தேவை உணவு , அவ்வுணவைத் தரும் வழி உழவு. அந்த உழவை மேற்கொள்ளும் உழவனுக்கு உறு துணையாவது மாடுகள் . இவை உழைப்பு மட்டுமல்லாது தன் உதிரம் தந்து உணவாகவும், உரமாகவும் மனிதனுடனேயே பயணிக்கும் பாசமிகு உறவுகள்.எனவே அன்பு காட்டியவருக்கு தன் காலம் முழுதும் கடமையென உழைப்பவை. அந்தத் தன் நலம் கருதாத கருணைமிக்க உழைப்பிற்கு நன்றி பாராட்டும் விழாவே மாட்டுப் பொங்கல்.
ஒரு ஒப்பற்ற இனம் தனக்கு உணவளிக்கும் இயற்கைக்கும் , தன்னுடன் இணையாக உழைக்கும் மாட்டுக்கும், அதற்கு உறுதுணையாகக் கைகோர்க்கும் சுற்றத்திற்கும் நன்றியைத் தெரிவிக்க , அக்கறையோடு ஒரு நாள் குறித்து அகமகிழும் நாள்தான் எத்தனை பண்பாடு நிறைந்தது. ஐந்தறிவுக்கும் அன்புக்காட்டி அரவணைக்கும் அற்புதக் குணம் படைத்தவன் தமிழன். செய்நன்றிஅறிந்து தன் பாராட்டுதலைக் காட்ட இந்த இனம் குறித்த நன்னாளே மாட்டுப் பொங்கல். தனது உழைப்பின் விளைவாகக் கண்ட விளைச்சலில் பொங்கலிட்டு , தனக்கு உறுதுணையாகிய மாடுகளுடன் கொண்டாடி மகிழ்ந்த தமிழன் ,மன நிறைவும் , மகிழ்ச்சியும் , நெகிழ்ச்சியும் கொள்கிறான்.
அவ்வாறு உண்டாகிய மகிழ்ச்சியே ஒரு விளையாட்டாக மலர்ந்தது. ஆம் நாகரீகங்கள் ஓய்வு நேரங்களில் தோன்றியதல்லவா.! அந்த நாகரீகத்தின் முதல்வன் தமிழன் . உழைத்துக் களைத்த மனிதன் தன்னை நிறைத்துக் கொண்டாடிய விழாவில் தன் திறமை காட்டியும் தான் வளர்க்கும் மாடுகளின் வீரம் போற்றியும் மகிழ்ந்தான். சினம் கொண்ட காளையை அடக்கி ஆண்மை போற்றினான். இப்படியாக ஓய்வு நேரத்தை யோசித்து, நேசித்து பண்பாட்டு நாகரீகம் வளர்த்தனர்.
அவ்வாறு உதவும் காளைகளுக்கும் பசுவுக்கும் கொம்பு சீவி, குஞ்சம்கட்டி அழகுப்படுத்தி , திலகமிட்டு , சலங்கை அணிவி த்து பொங்கலும் , கனிகளும் உண்பித்து உள்ளம் மகிழ்கிறான். பயிற்சியற்ற எதுவும் தேர்ச்சிப் பெறுவதில்லை. எனவே வீரத்தைப் போற்றுபவன், காளைகளை வளர்த்து அவற்றை அடக்கியாள்கிறான். உழைப்பில் பங்குக்கொண்ட அனைத்தும் மகிழ்ச்சி காணவேண்டும் என்பது தமிழனின் பொது மொழி.இதை முல்லை நில மக்கள் மாடுகளைக் கொண்டாடும் மேன்மையை , சங்கப் படாடல் வழி கண்ணுற்றுக் காணும்போது விளங்குகிறது.இவ்வாறு முயற்சியும் , பயிற்சியும் மேற்கொண்டதன் விளைவே ஏறுதழுவுதல் தோன்றிய வரலாறாகிறது. ஏறுதழுவுதல் என்பது விளையாட்டு மட்டுமல்ல.வீரத்தின் அடையாளத்தையும் , வாழ்க்கைப் போராட்டத்தையும் கொண்டது. அறுவடை முடிந்தது, உழைப்பின் பயனும் கைவந்தது என ஒரிடம் அமர்ந்து ஓய்வு கொள்ளவில்லை, அந்த ஓய்வையும் உழைப்பாக்கி சாதனையாக்கினான். அச்சாதனையே சந்ததிகள் பல கடந்தும் வீரமணம் வீசிக்கொண்டிருக்கிறது.அவ்வீர மறவர்களின் வழியை, வருங்கால சந்ததிமகளும் அணிசெய்து தொடர , பாதை அமைத்து பைந்தமிழர் மரபை வணங்கி மகிழ்வோம்.!
**************** *********** ***************
0 Comments