காணும் பொங்கல் - தை மாதச்சிறப்புப் பதிவு - KAANUM PONGAL - URAVUKALAIK KAANUM NAAL

 

            காணும் பொங்கல்

                      16 • 01•2022

        பொங்கல் விழாவின் நான்காம் நாளானது காணும் பொங்கல் , உறவுகளையும் ,நட்புக்களையும் காணும் பொங்கல்.பண்டைத் தமிழன் மதத்தைப் போற்றாமல் மனிதத்தை ஏற்றவன். ஆகையினால் இயற்கையையும் , உதவும் விலங்குகளையும், உயிரென  வணங்கிப் போற்றியவன். தூய்மை போற்றி , அறுவடை கண்டு , உறுதுணையான விலங்கு தொழுது,  அவற்றை அடக்கி , வீரம் காத்து விவேகம் கண்டவன் ,மேலும் காண்பது , காணும் பொங்கல் .உறவுகளையும் , நட்புகளையும் காணும் பொங்கல்.உலை பொங்கி,உள்ளம் பொங்கி , உவகை பொங்கி மகழ்ந்தவன், உறவுகளுடன் ஒன்றிணைந்து , நட்புகளுடன்  நலம் பாராட்டி தம்மிடத்துள்ள உணவுகளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து, இன்முகம் காட்டி ,ஈதல் போற்றி ஆற்றங்கரையிலோ, கடற்கரையிலோ வெகு விமரிசையாக இன்றளவும் கொண்டாடப் படுகிறது.அதுமட்டுமன்றி சிறு உயிர்களையும் நேசிக்கும் பாங்கும் , நற்பண்புகளும் அடுத்தடுத்த  தலைமுறைக்கு எடுத்துக் காட்டும் ஒருவிழாவாக உள்ளது.

     நட்பு விலங்குகள் மட்டுமல்லாமல் சிறு பறவைகளிடத்தும் அன்புப் பாராட்டுவது- உன்னதமான உணர்வல்லவா !  ஆற்றக்கரையிலோ, மொட்டை மாடியிலோ , குளக்கரை வெளிப் பரப்பிலோ அன்னமும், பாலும் சேர்த்துப் பதமாக்கிய பொங்கல் மற்றும் தயிர் சாத வகைகள் காக்கை, குருவிகளுக்குப்  படையலாக வைத்து மகிழ்கின்றனர். இச்செயல் அனைத்துயிரிகளையும் போற்றும் மரபாக மகத்துவம் பெறுகின்றன. பறவைகளுக்கு உணவு பகிர்ந்து பின் உணவுடன் உறவுகளை நாடி நலம் விசாரிப்பது காணும் பொங்கலாம். நேரில் சென்று நெஞ்சம் மகிழ்ந்து பெரியவர்கள் சிறியவர்களை வாழ்த்தியும், சிறியவர்கள் பெரியவர்களை வணங்கியும்  மகிழ்வது நமது பண்பாடுட்டுச் சான்றாகும். 

            பகைமறந்து குணம் நிறைந்து ஒருவருக்கொருவர் நட்புப் பாராட்டும் தினமாகவும் இப்பண்டிகை விளங்குகிறது. இவ்வாறு ஆசி பெற்று . உண்டு  ஒருவர்க்கொருவர் நட்புப் பாராட்டும் தினமாக வும் இப்பண்டிகை திகழ்கின்றது.இவ்வாறாக சுற்றம்  கொண்டாடியும் , நட்புப்பாராட்டியும் கண்டும் , உண்டும் களித்தப்பின் தங்களது திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டுப் போட்டிகளையும் அரங்கேற்றினர்.  தமிழர் விளையாட்டு மரபுப்படி முதன்மைப் பெறுபவை உறி அடித்தல் , வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீரசாகச நிகழ்வுகளும்  பட்டிமன்றம் போன்ற அறிவுசார்ந்த நிகழ்வுகளும் மக்களைப் பண்படுத்தின. இவை மட்டுமல்லாது வயதிற்கு ஏற்றார் போல் பாட்டு,  கட்டுரை, இசை நாற்காலி , மூன்றுக்கால் ஓட்டம், தவளை ஓட்டம் , ஊசி நூல் கோர்த்தல், முறுக்கு கடித்தல் ஓட்டப் பந்தயங்கள் போன்றவை இன்றும் கிராமப் பொங்கலை வசீகரிக்கின்றன. போட்டிகளும் அவற்றில் பெறும் வெற்றிகளும், வெற்றி பெற்றவருக்கு தரும் பரிசுகளும் , பாராட்டுகளும் என பெற்று மகிழ்கின்றனர்.ஒருவரதுதனித் திறமை யை வளர்க்கும் களமாகவும் இவ்விழா அமைகிறது.

எழுபது, எண்பதுகளின் கால கட்டத்தில் பிறந்தவர்களின் பொங்கல் விளையாட்டுகளும், கலாச்சாரமும் இன்றும் எண்ண அலைகளில் வண்ணமயமான அழகுக் கோலங்கள். வாழ்வியல் வசதிகள் குறைந்திருந்த போதும் , நிறைந்த மகிழ்ச்சியில் திளைத்தக் காலம் . அன்றையப் பொங்கலை கொண்டாடிய விதம் வசந்த காலம்.ஆம் அன்றைய பொங்கலுக்காகவே ஏற்படும் திடீர் கடைகள், அவற்றில் உள்ளதை வாங்கவும் , காணவும் விழையும் மக்கள் கூட்டம். குறிப்பாக இளம் பெண்கள் கூட்டம்.பெரியவர்களிடம் ஆசிபெற்று, அவர்கள் தரும் சிறு தொகையில் வாங்கிய கண்ணாடி வளையல்கள் வண்ணங்களால் கண்ணைப் பறிக்கும்.ரப்பர் வளையல்ளே ஆயினும் ரம்மியமாகக் காட்சியளித்தன. ராட்டினம் சுற்றுவதும் , கலர் ரிப்பன்கள் வாங்குவதும் எத்தனை அழகிய போட்டிகள். பொங்கல் பண்டிகையின் சிறு கடைகளே சொர்க்கமாக விளங்கிய காலங்கள். பல வண்ணச் சாந்துப் பொட்டும், மினுமினுக்கும் ஸ்டிக்கர் பொட்டும், பலவண்ண ரிப்பன்களும் இளநங்கையரை ஈர்த்தவை.புத்தாடையும் , வளையலும் ரிப்பனும் மட்டுமே மனதை நிறைந்த நாட்கள்.பொங்கள் விழாவின் அனைத்துப் போட்டிகளிலும் ஆண்களும் , பெண்களும் சமமாகவே பங்கேற்று பரிசுப் பெற்றனர். அதில் முதன்மையானதாக கவிதை , பாட்டுப் போட்டிகள் சிறப்புமிக்கதாக விளங்கின. போட்டி ஆரம்பமாகும் நேரம் எதிர்பார்த்து காத்திருந்த நாட்கள் எழில் மிகு நினைவுகள்.ஊரின் நடுவே மேடையமைத்து , உடற் வலிமைப் போட்டிகளையும் தாண்டிய இந்த அறிவை விலாசமாக்கும் போட்டிகள் ஆரோக்கியம் நிறைந்தவை. பாடும் குயில்களும், ஆடும் மயில்களும், கர்ஜிக்கும் சிங்கங்களும் , சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கோமாளிகளுமாகச் சதுராடிய கிராமத்து மேடையின் கதாநாயகர்கள் இன்று  அறிஞராகவும், ஆட்சியராகவும் , ஆசிரியராகவும் , கவிஞராகவும் , கருத்தாளராகவும்,எழுத்தாளராகவும் , படைப்பாளராகவும் என பல துறைகளை அழகுப்படுத்துகின்றனர்.எனவே அன்றைய மாணவர்கள் முன்னேற்றம் காண பள்ளி மேடைகளும், பண்டிகை மேடைகளுமே படிக்கற்களாக அமைந்தன என்றால் அது மிகையல்ல. இவ்வாறு பண்டிகையும், அவற்றின் விளையாட்டும் மக்களின் முன்னேற்றப் பாதையமைப்பில் முதன்மை  பெற்றதாகவே திகழ்கின்றன.எனவே உறவுகளைச் சேர்த்தும் , நட்பை வளர்த்தும்பண்டிகைக்கால விளையாட்டுபாரம்பரியத்தைப் போற்றியும் தமிழர் மரபைதலைவணங்கிப் போற்றுவோம்.!நாளைய தலைமுறை தழைத்தோங்க நல் தடமதைக் காப்போம் .!


*************   ****************   **********

Post a Comment

0 Comments