மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
தொடர் - 5
கீர்த்தித் திருஅகவல் - பகுதி - 2
உரை விளக்கம்:
பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ,
தலைமையாசிரியர் , ( ப.நி )
கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி
************ **************** ************
உத்தர கோச மங்கையுள் இருந்து,
வித்தக வேடம் காட்டிய இயல்பும்;
50 பூவணம் அதனில் பொலிந்தினிது அருளி
தூவண மேனி காட்டிய தொன்மையும்;
வாத வூரினில் வந்தினிது அருளி,
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்;
திருவார் பெருந்துறைச் செல்வன் ஆகி;
55 கருவார் சோதியில் கரந்த கள்ளமும்;
பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளி,
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்;
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து,
நன்னீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்;
60 விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில்,
குருந்தின் கீழ்அன்று இருந்த கொள்கையும்;
பட்ட மங்கையில் பாங்காய் இருந்தங்கு
அட்டமா சித்தி அருளிய அதுவும்;
வேடுவன் ஆகி, வேண்டு உருக்கொண்டு,
65 காடு அது தன்னில், கரந்த கள்ளமும்;
மெய்க்காட் டிட்டு; வேண்டுருக் கொண்டு,
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்;
ஓரியூரில் உகந்து. இனிது அருளி,
பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்;
70 பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோவார் கோலம் கொண்ட கொள்கையும்;
தேனமர் சோலைத் திருவா ரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்;
75 இடைமருது அதனில் ஈண்ட இருந்து
படிமப் பாதம் வைத்த அப்பரிசும்;
ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து,
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்;
திருவாஞ் சியத்தில் சீர்பெற இருந்து,
80 மருஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்
சேவகன் ஆகி, திண்சிலை ஏந்தி,
பாவகம் பலபல காட்டிய பரிசும்;
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்;
ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்;
85 ஐயாறு அதனில் சைவன் ஆகியும்;
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்;
திருப்பனை யூரில் விருப்பன் ஆகியும்;
கழுமலர் அதனில் காட்சி கொடுத்தும்;
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்;
90 புறம்பயம் அதனில் அறம்பல அருளியும்;
குற்றா லத்துக் குறியாய் இருந்தும்;
அந்தம் இல் பெருமை அழல்உருக் கரந்து,
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு
இந்திர ஞாலம் போல வந்தருளி,
95 எவ்வெவர் தன்மையும் தன்வயின் படுத்து,
தானே ஆகிய தயாபரன் எம் இறைசந்திர
தீபத்து, சாத்திரன் ஆகி;
அந்தரத்து இழிந்துவந்து, அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைத்து, இருந்தருளியும்;
பொருள்
திருவுத்தரகோசமங்கை என்னும் திருத்தலத்தில் ஞானாசிரியனாக எழுந்தருளிய பேரியல்பு உன்னுடையது ஆகும். திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் பொன்னனையாள்
என்பவள் பொருட்டு அருள் செய்வதற்காகத் தூய நிறமும் ஒளிபொருந்தியதும் ஆகிய நின் திருமேனியைக் காட்டி அருளினாய்.
திருவாதவூரில் நீ காட்சியளித்தபொழுது உனது திருவடிகளை அலங்கரித்த சிலம்பின் ஓசையில் இனிமை தவழ்வதாயிற்று.
அழகு நிறைந்த திருப்பெருந்துறையில் ஞானாசிரியனாக வந்த நீ உன் கோலத்தை வஞ்சகமாக மறைத்து மாறாத ஒளிமயமான
உனது மூல நிலையினை அடைந்தாய். திருப்பூவலம் என்னும் திருத்தலத்தில் தோற்றம் காட்டி அடியார்களின் பாவங்களைப்
போக்கிய பெருமை உன்னுடையது ஆகும்.
போரில் பாண்டியன்
வெற்றியடைவதற்காக நீ தண்ணீர்ப்பந்தல் வைத்து அவனுக்கும் அவனுடைய சேனைக்கும் நல்ல நீர் வழங்கும் தொண்டன்
ஆனாய். இவ்வாறு அடியவர்களுக்கு நீ எப்பொழுதும் நன்மை செய்பவன்.
திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் நீ விருந்தினனாக வந்திருந்து குருந்தமரத்து அடியிலே தங்கியிருந்து அடியார்க்கு
அருள்செய்தாய். திருப்பட்டமங்கை என்னும் திருத்தலத்தில் சிறப்புடன் இருந்து அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அட்டமா சித்திகளைக் கார்த்திகைப் பெண்கள் அறுவர்க்கும் ஆசிரியனாய்
வந்து நீ உபதேசித்து அவர்கள் சாபம் நீக்கினாய். இறைவா! நீ விரும்பியவாறு வேடுவனது உருவத்தை எடுத்துப் பிறகு காட்டிலே மாயமாய் மறைந்து போன பெருமை உன்னுடையது ஆகும்.
அடியவர்களைக் காப்பாற்றுதல் என்னும் உண்மையை நிரூபித்தற் பொருட்டுத் தன் திருவுளத்திற்கு ஏற்பச் சிறந்த
மனிதஉருவில் தோன்றிவந்த பெருமை நின்னுடையது ஆகும். திருவோரியூர் என்னும் திருத்தலத்தில் இனிதாக எழுந்தருளி
பிறவாப் பெருமையுடைய குழந்தையாகக் காட்சியளித்தது உன் அருள்தன்மையே ஆகும்.
பாண்டூர் என்னும் திருத்தலத்தில் நீ கண்கூடாகத் தோற்றமளித்திருந்தாய். திருத்தேவூருக்குத் தெற்குப் பக்கத்தில்
உள்ள தீவினிலே நீ பேரழகு கொண்ட அரசனின் வடிவில் காட்சி கொடுத்ததும் உனது திருவுளப்பாங்கே ஆகும். தேன் சொட்டும் மலர்ச் சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் பரஞானத்தை வழங்கும்
பாங்குடையவனாகத் திகழ்ந்தருளினாய். திருவிடை மருதூர் என்னும் திருத்தலத்தில் தோற்றமளித்து புனிதமான பாதத்தினை
வைத்த பெருமை உடையவன் ஆனாய்.
திருவேகம்பம் என்னும் காஞ்சிமாநகரில் இயற்கையாய் எழுந்தருளி இடப்பாகத்தில் உமையவளை வைத்துச் சிவசக்தியாய்க்
காட்சியளித்தாய். திருவாஞ்சியம் என்னும் திருத்தலத்தில் மணம் நிறைந்த கூந்தலை உடைய உமாதேவியோடு சிறப்புப் பொருந்த
எழுந்தருளினாய்.
சமணர்கள் பாண்டியனுக்குத் தீங்கிழைக்கக் கருதி வேள்வி செய்து அதில் தோன்றிய யானையை ஏவ அந்த யானையானது பாண்டிய நாட்டை அழிக்க முற்பட்டபோது பாண்டிய மன்னன்
பொருட்டு இறைவா நீ வில்லேந்தி வந்து போர்வீரனாய்த் தோற்றமளித்து யானையைக்கொன்று பாண்டியனுக்கு
அருள்செய்தாய். திருக்கடம்பூர், திருஈங்கோய்மலை, திருவையாறு ஆகிய
திருத்தலங்களில் நின் அருள் தன்மைகளுடன் விளங்கியருளினாய்.
திருத்துருத்தி, திருப்பனையூர் ஆகிய திருத்தலங்களில் நீ மகிழ்வுடன் எழுந்தருளியிருக்கிறாய். திருக்கழுமலம் எனப்பெறும் சீர்காழி, திருக்கழுக்குன்று ஆகிய திருத்தலங்களில் நீ கண்கூடாக
எழுந்தருளியுள்ளாய். திருப்புறம்பயம் என்னும் தலத்தில் நீ அறநூல்களைச் செய்தருளினாய். திருக்குற்றாலத்தில் கண்களால் காணுமாறு தோற்றமளிக்கிறாய்.
இறைவா! நீ முடிவில்லாத பெருமை உடையவன்; நீ உனது ) தீவண்ணத்தை மறைத்துக்கொண்டு அழகிய கோலத்தினை
உடைய ஒப்பற்ற முழுமுதல் வடிவம் கொண்டு, மாய வித்தையைத் தன்னிடத்து அடக்கிவைத்து எவ்வெவர் தன்மையும் தன்னிடத்துக் கொண்டு சந்திரதீபம் என்னும் திருத்தலத்தில் சாத்திரங்களை
உபதேசிப்பவனாகக் காட்சியளித்தாய். மேலும் நீ வானவெளியிலிருந்து கீழே இறங்கி வந்து திருக்கழிப்பாலை என்னும்
தலத்தில் பேரழகனாகப் பொருந்தியிருந்தாய்.
நன்றி - AR பதிப்பகம் . மதுரை.
0 Comments