புலவர் . இரா.இளங்குமரனார் பிறந்த தினம்
30 • 01 • 2022
தமிழுக்குத் தொண்டாற்றி பழுத்தப் பழம்!
தாய் பெயரும் தன் ஊர்ப் பெயரும் ஒன்றெனெக்
கொண்ட தனித் தமிழ்ச் சிங்கம் !
மறைமலை அடிகளைத் தொடர்ந்து தன்பெயரைத்
தமிழாக்கியத் தன் மானச் சுரங்கம் !
மொழிக்காக தன் மனைவியின் ஆபரணம் விற்று
செல்வமென நூல்களைச் சேர்ந்த தமிழ் மறம் !
கல்விச் செல்வத்திற்கு இயற்கை இன்பம் காண
மொழி ஞாயிறாகச் சுடர்விட்டு .....!
தேனருவியாக கனிச்சுவை தந்த தமிழ் உரையில்
தமிழ் நூறு கண்ட வானவில் !
கைம்பெண் நிலைகண்டு மனம்வருந்தி
' விதவைக் குரல் ' தந்த பெரியார் !
இலக்கியம் பாடிய காக்கைப் பாடினியைக்
கரைச் சேர்த்த ஓடம் !
இலக்கியத்தின்பால் இல்லை மறதி !
மறைமலை , இலக்குவனார் , பாவாணரின் பிரதி !
தமிழகமெங்கும் சேர்ந்த சிறு கற்களைக் கொண்டு
திருக்குறளுக்கு நினைவுக் குன்றமைத்த வள்ளல் !
தமிழ் வாழ தான் வாழ்ந்த பெருமைக்குரிய
பேரறிவுப் பெட்டகம் இளங்குமரனார் !
அவர்பிறந்த தினம் இன்று !
அவர் பணி போற்றி வணங்குவோம் !
தமிழ் அறிஞர் , ஆசிரியர் ,நூலாசிரியர் , பாவலர், பதிப்பாசிரியர் , உரையாசிரியர் , தொகுப்பாசிரியர் , முதுமுனைவர் எனப் பல பணிகளைத் திறம்படச் செயலாற்றியவர் புலவர்.இராஇளங்குமரனார். இவர் திருநெல்வேலி மாவட்டம் வாழ்ந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1927 - ஆம் ஆண்டு சனவரி - 30 - ஆம் நாள் , படிக்கராமர்- வாழவந்தம்மையார் இணையரின் மகனாகப் பிறந்தார். தமிழ் உணர்வால் ,பற்றால் தந்தையின் வாசிக்கும் பழக்கத்தைத் தானும் பெற்றுத் திகழ்ந்தார்.
ஆகையினால் தமது 12 - ம் அகவைக்குள் திருக்குறள் முழுவதும் , 16 - ம் அகவைக்குள் தொல்காப்பியம் முழுவதையும் மனப்பாடம் செய்து சாதனையாக்கினார்.மேலும் 18 - ஆம் வயது தொடக்கத்தில் சங்க இலக்கியத்தில் பயணிக்கத் தொடங்கினார். 8 • 04 • 1946 - ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளி ஆசிரியராகத் தொடங்கிய இவரது பயணம் பல பட்டங்கள் பெற்று 1951 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகப் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி கண்டார்.அது மட்டுமன்றி சொற்பொழிவாற்றுவதிலும் , பாடல்கள் இயற்றுவதிலும் பெருந்திறன்பெற்று விளங்கினார்.மேலும் 1951-- ஆம் ஆண்டில் தமிழாசிரியராக உயர்ந்து, மதுரைக் காமரார் பல்கலைக்கழக ஆய்வறிஞராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
பாதியாகக் கிடைத்த குண்டலகேசியை பதமாக முழுமையாக்கி தன் கற்பனையாலும், கவித்திறத்தாலும் காப்பியமாக்கி முடித்தார்.1958 - ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் குண்டலகேசி காவியம் அரங்கேற்றப் பட்டது. பலஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிய போதும் , நூலாக்கப் பணியையே தம் விருப்பப் பணியாகச் செய்து மகிழ்ந்தார்.மேலும் பல பொறுப்புகளைச் சிறப்புடன் செய்து முடித்தார் . அவை தமிழ் காப்புக் கழகச் செயலாளர் , மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச் செயலாளர்,தேர்வுக் குழு அமைப்பாளர், போன்ற பொறுப்புகளையும் , பல்வேறு அமைப்புகளில் இணைந்தும் பணியாற்றினார்.மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பணியில் இவர் உருவாக்கிய " தொல்காப்பியக் கலைச் சொற்களஞ்சியம் ", தாம் பேசிய உரைகளையெல்லாம் தொகுத்து , நூலாக விரித்தெழுதும் வழக்கத்தைக் கொண்டார்.
இதற்கு தம் முனோடியாக திரு. வி.க.வைப் பின்பற்றினார்.திரு .வி.க. இப்படித்தான் செய்வதாக தாம் எழுதும் முறைக்கு முன்னோடியாக அவரைக் காட்டுகின்றார். மேலும் திருவள்ளுவர், மறைமலை அடிகள் , திரு.வி.க., தேவநேயப் பாவாணர் ஆகிய நால்வரும் தந்த நூல் வெளிச்சத்தில் நடப்பதாக பெரு மிதம் கொண்டவர் இளங்குமரனார்.இவரது அறிவுப் பரப்பையும் , ஆராயும் திறத்தையும் எடுத்தியம்பிய சான்றாக தனித்தமிழ்ச் சொல்லாய்வாளர், வரலாற்றாசிரியர் ,உரையாசிரியர், படைப்பாளர், பழம்நூல் மீட்பாளர் , பதிப்பாசிரியர் எனப் பல முனைகளிலும் வியந்து போற்றப் படுகிறார். ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களைத் தம் கையால் எழுதி பதிப்பித்து வெளியிட்டவர் இளங்குமரனார். இவர் தம் இறுதிக்காலம் வரை எழுத்தும் நடுக்கமும் , நினைவுத் தடுமாற்றமும் இன்றி முத்து முத்தான எழுத்துகளைத் தன் வரமாகப் பெற்றவர். தமிழகமெங்கும் பூ மழையாகத் தம் நா நயத்தால் திருக்குறள் உரைப் பொழிவுகளைப் பொழிந்து இலக்கண ,இலக்கியம் மட்டுமல்லாது திருமணங்களையும் தமிழ் வழியாகவே நடத்தி மகிழ்ந்தார்.
மேலும் இவர் தமிழ் வழிக் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.திருச்சியில் காவிரியின் கரையை கவின்மிகு பகுதியாக்கி அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையையும் ,பாவாணர் நூலகத்தையும் அமைத்து சிறப்பித்தார். இவரது தமிழ்ப் பணியைத் போற்றும் விதமாக தமிழக அரசும் சிறப்புப் பரிசுகளால் நிறைத்து, விருதுகளால் அலங்கரித்து சிறப்புச் செய்தது.
இளங்குமரனார் எழுதிய நூல்கள் :
இலக்கண வரலாறு ,காக்கைப் பாடினியம், எங்கும் பொழியும் இன்பத் தமிழ், குண்டலகேசி,தமிழிசை இயக்கம்,தனித் தமிழ் இயக்கம்,திருக்குறள் தமிழ் மரபுரை, தேவநேயம் 13- தொகுதிகள், நாலடியார் தெளிவுரை,பாவாணர் வரலாறு ,யாப்பெருங் கலம்,புறத்திரட்டு,செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம்,தென்னாட்டு வணிகம் ,திருக்குறள் உரை,திரு.வி.க .தமிழ்க்கொடை அறிமுகம்,திரு.வி.க.முன்னுரைகள்,ஈழம் தந்த இனிய தமிழ்க் கொடை எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.இவரது நூல்கள் அனைத்தும் மதுரை பாரதி புத்தக நிலையம்,சிதம்பரம் மாணிக்க வாசகர் பதிப்பகம் , திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , பாவாணர் அறக்கட்டளை போன்றவற்றின் வழியாக வெளிவந்து உலகமெங்கும் தமிழ் மணம் பரப்பின.
பெற்ற விருதுகளில் சில...
* 1978- நல்லாசிரியர் விருது.
* 1994 - தமிழக அரசின் திரு.வி.க.விருது.
* 1995 - மதுரை ஆடி வீதி திருவள்ளுவர் கழகம் சார்பில் திருக்குறள் செம்மல் விருது.
* 1996 - திருச்சி மாவட்ட திருக்குறள் பேரவை சார்பில் குன்றக்குடி அடிகள் வழங்கிய " குறள் ஞாயிறு விருது".
* 1999 - சென்னைத் தமிழ்ச் சான்றோர் பேரவை வழங்கிய
" மொழிப் போர் மறவர் விருது ".
* 2000 - சென்னை கம்பன் கழகம் சார்பில் " கம்பர் விருது".
* 2003 - தமிழ் இயக்க செம்மல் மெய்யப்பன் வழங்கிய தமிழ் இயக்கச் செம்மல் விருது.
* 2004 - உலகப் பெருந்தமிழர் விருது.
* 2004 - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ்ச்செம்மல் விருது.
தமிழே தமது உயிர் மூச்சாக தன் இறுதிக்காலம் வரை வாழ்ந்து, தமிழ்ச் சேவையில் அகம் மகிழ்ந்து, தமிழ் வளர்த்த தன்னிகரற்ற தமிழ்க் காவலரை இவ்வையகம் உள்ளவரை அவர் புகழ் என்றும் ஒளிர்ந்து , ஒலித்துக்கொண்டிருக்கும்.
.
0 Comments