திருவாசகம் - மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர் வரலாறு
சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவராகத் திகழ்பவர் மாணிக்கவாசகர் ஆவார். இவர் பாண்டியநாட்டின் தலைநகராக விளங்கிய மதுரைக்குக் கிழக்கே பன்னிரண்டு கல் தொலைவில் உள்ள திருவாதவூர் என்னும் திருத்தலத்தில் அவதாரம் செய்தார்.
இவரது பிள்ளைத் திருநாமம் திருவாதவூரர் என்பதாகும். இவர்தம் பெற்றோர் சம்புபாதசிருதயர் சிவஞானவதி என்போர் ஆவர். திருவாதவூரர்க்கு வயது ஏறஏறக் கலைஞானங்கள் நிரம்பின. இவரது அகவை பதினாறு அடைந்த அளவில் கலைஞானம் அனைத்தும் கைவரப்பெற்றார். இளமையிலேயே இவர் பெற்றிருந்த கல்வி கேள்விகளையும் ஒப்பற்ற கலைத் தேர்ச்சியும், இறைவழிபாட்டு உணர்வும், நல்லொழுக்கமும் கண்டு அனைவரும் வியந்தனர்.
அக்காலத்தில் பாண்டிய நாட்டை அரிமர்த்தனன் என்னும் பாண்டிய மன்னன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். திருவாதவூரரது திறமைகளை அறிந்த அப்பாண்டிய மன்னன் அவரை வரவழைத்து அவர்க்குத் ' தென்னவன் பிரமராயன்' என்ற பட்டமளித்து முதலமைச்சராக ஆக்கிக் கொண்டான். இளவயது முதல் சிவபெருமான் மீது எல்லையில்லாப் பக்தித்திறம் பூண்ட வாதவூரர் இதுவும் திருவருட்செயலே என எண்ணி தமக்குரிய அமைச்சுரிமைத் தொழிலை மிகக்கவனமாக இயற்றி வந்தார். இவர்தம் அமைச்சுப் பணியால் அரசனும் மக்களும் அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒருநாள் வாதவூரர் அரசனுடன் வீற்றிருந்தபோது, குதிரைச் சேவகர்கள் சிலர் வந்து அரசனைப் பணிந்து, “அரசே! நமது குதிரைப்படைகள் குறைந்துவிட்டன. வயது முதிர்ந்த குதிரைகளும், நோயுள்ள குதிரைகளுமே உள்ளன. நம்மிடம் சிறந்த குதிரைகள் இல்லை” என்று தெரிவித்தனர். அப்போது அரசவையில் இருந்த தூதர் சிலர் கீழைக் கடற்கரையில் நல்ல குதிரைகள் வந்து இறங்கியிருப்பதாகத்தெரிவித்தனர். தூதாகள் கூறிய செய்தியைக் கேட்ட மன்னன் அமைச்சர் வாதவூரரிடம், “நமது கருவூலத்திலிருந்து வேண்டும் பொருளை எடுத்துக்கொண்டு பணியாளர்களுடன் சென்று கீழைக் கடற்கரையில் இறங்கியிருப்பதாகக் கூறப்படும் குதிரைகளில் நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்து வாங்கி வருக' ஆணையிட்டான். வாதவூரரும் அரசன் ஆணையை ஏற்றுக் கருவூலத்தில் நிறைந்துள்ள பொற்காசுகளையும், தேவையான பொருட்களையும் ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டு படைவீரர்களும் பரிசனங்களும் சூழ மதுரையை விட்டுப் புறப்பட்டு திருப்பெருந்துறையை அடைந்தார்.
திருப்பெருந்துறை என்னும் அவ்வூரை நெருங்க நெருங்க வாதவூரர் தம்மீது இருந்த ஏதோ ஒரு குறைந்து வருவது போலத் தோன்றியது. அமைச்சர் பதவியில் இருப்பினும் எப்பொழுதும் சிவசிந்தனை உடையவர் ஆதலின் அவ்வூரின் ஒரு
புறத்திலிருந்து ஒலித்துக் கொண்டிருந்த சிவநாம முழக்கம் அவர் செவிக்கு எட்டியது. அவ்வொலி வரும் திசைநோக்கி வாதவூரர்
விரைந்து சென்றார். அங்கே பரந்து விரிந்து தழைத்திருக்கும் பெரியதொரு குருந்தமரத்தின் அடியில் சீடர்கள் சிலரோடு
சிவபெருமான் குருவடிவாக எழுந்தருளியிருந்தார். காந்தம்
இரும்பைக் கவர்வதுபோல வாதவூரர் உள்ளம் அக்குருவினை நோக்கிச் சென்றது. சீடர்களுடன் அமர்ந்திருந்த குருநாதர்
திருநோக்கம் வாதவூரர்பால் சென்றது. அவ்வளவில் வாதவூரர்க்குச்
சிவபெருமான் நயனதீட்சை நல்கினார்.
குருவின் திருமேனி கண்ட வாதவூரர் தம்மையும் மறந்து குருவின் திருவடி பணியக்
குருவானவர் தமது திருவடியினை வாதவூரர் தலைமேல் சூட்டித் திருவடி தீட்சை அருளினார். தாமே வலிய வந்து ஆட்கொண்ட
சிவபெருமான் திருவாதவூரர்க்குத் தீட்சாநாமமாக மாணிக்கவாசகர்
என்று அருளிச்செய்தார்.
மாணிக்கவாசகரான அப்பெருமான்
தம்மை ஆட்கொண்டருளியவர் சிவபெருமானே என்பது உணர்ந்து
தமது அமைச்சர் கோலத்தை அகற்றிச் சிவபெருமான் அருள்பெற்ற தவக்கோலம் பூண்டார். மாணிக்கவாசகர் தம்மை
ஆட்கொண்டருளிய பெருமானை எண்ணி எண்ணி ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கினார். குருவாக வந்து தமது திருமேனி
காட்டித் தம்மை ஆட்கொண்ட பெருமான் அந்த இடத்திலிருந்து மறைந்தருளினார். தம் குருவினைப் பிரிந்திருந்த நிலையில்
மாணிக்கவாசகர் அப்பெருமான் நினைவிலேயே உள்ளம் உருகியிருந்தார்.
இந்நிலையில் பாண்டிய மன்னன் ஆணையின்படி அமைச்சர் பெருமகனாரோடு வந்திருந்த வீரர்களும் பரிசனங்களும்
மாணிக்கவாசகர் நிலையினைக் கண்டு வியந்தனர். மேலும் கடற்கரையில் குதிரைகள் வந்து இறங்காமையையும் கண்டனர். எனவே அமைச்சர் பெருமானை அவர்கள் பணிந்து மதுரைக்கு வருமாறு அழைத்தனர். மாணிக்கவாசகரோ அவர்களுடன் வர மறுத்து இங்கேயே தங்கியிருந்து குதிரைகள் வந்த பின்பு யாம்
வருவோம் நீவீர் செல்க என விடைகொடுத்து அவர்களை அனுப்பிவைத்தார்.
சிவ சிந்தனையிலேயே இருந்த மாணிக்கவாசகர் தமக்குக்
குருவடிவில் வந்து காட்சியளித்துத் தம்மை ஆட்கொண்ட சிவபெருமானுக்குத் திருப்பெருந்துறையாகிய அந்த இடத்தில்
குதிரைகள் வாங்குவதற்காகப் பாண்டிய மன்னன் கருவூலத்திலிருந்து பெற்றுவந்த பொற்காசுகளைக் கொண்டு கோயில்
எழுப்பிக் கொண்டிருந்தார். இச்செயலை ஒற்றர்கள் மூலம் அறிந்த பாண்டிய மன்னன் மாணிக்கவாசர்க்கு ஓலை கொடுத்து
அனுப்பினான். ஓலைக் கண்ட மாணிக்கவாசகர் இறைவனிடம்
சென்று முறையிட, 'ஆவணி மூல நாளில் குதிரை வரும்' என்று தெரிவியும் என்று அசரீரியாகக் கூறியருளினார். பின்பு
மாணிக்கவாசகர் மதுரையை அடைந்து மன்னரிடம் செய்தியைத் தெரிவித்தார்.
பாண்டிய மன்னன் ஆவணி மூல நாளன்று குதிரைகள் வராமை கண்டு மாணிக்கவாசகரைத் தண்டித்துப்
பல்வேறு வகையில் துன்புறுத்தினான்.
எல்லாம் வல்ல சிவபெருமான் மாணிக்கவாசகர் பொருட்டு நரிகளைக் குதிரைகளாக்கியும், குதிரைகளை நரிகளாக்கியும், வையையில் வெள்ளம் வரவழைத்தும், வந்தி என்பாள் பொருட்டுக்
கூலியாளாக வந்தம் திருவிளையாடல்கள் புரிந்தருளினார். மாணிக்கவாசகர் பெருமையை உணர்ந்த அரிமர்ந்தன
பாண்டியன் அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து
வேண்டும் பொருள் நல்கி அனுப்பினான். மாணிக்கவாசக அடிகள் சிவபெருமான் எழுந்தருளிய தலங்களாகிய திருப்பெருந்துறை, உத்தரகோச மங்கை, திருவண்ணாமலை, சிதம்பரம் முதலியவற்றை வணங்கி நெஞ்சை நெக்குருகச் செய்யும் திருவாசகப்
பனுவல்களைப் பாடிக்கொண்டு சிவசிந்தனையிலேயே மூழ்கித்
திளைத்தார். மாணிக்கவாசகர் தில்லைச் சிற்றம்பலத்தில் நட்டம் பயின்றாடும் நாதனை வழிபட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில்
அம்பலவாணர் ஓர் அந்தணர் வடிவம் கொண்டு அவர்முன் தோன்றினார். அந்தண வடிவம் கொண்டு வந்து தோன்றிய
பெருமான் மாணிக்கவாசகர் பாடிய அனைத்துப் பனுவல்களையும் சொல்லுமாறு வேண்டிக் கொண்டார். மாணிக்கவாசகரும் தாம் பாடிய திருவாசகப் பனுவல்களைச் சொல்லச் சொல்ல அந்தணராக
வந்த சிவபெருமான் பட்டோலை செய்தருளினார். திருவாசகம் முழுமையும் எழுதியருளிய சிற்றம்பலவர்
மாணிக்கவாசகரை நோக்கி திருவெம்பாவையைக் கருத்திற்
கொண்டு, "பாவை பாடிய நும் வாயால்
கோவை ஒன்று பாடுக' எனக் கேட்டுக் கொண்டார்.
மாணிக்கவாசகரும்
'திருச்சிற்றம்பலக் கோவையார்' என்னும் நூலைப் பாடினார். அந்தணராக வந்த அம்பலவாணர் அதையும் பட்டோலை
செய்தருளி இறுதியில், "மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது" என்று குறிப்பிட்டு ' அம்பலவாணன்' என்று கைச்சாத்து இட்டுவிட்டு அங்குள்ள
திருச்சிற்றம்பலப்படியில் வைத்துவிட்டு மறைந்தருளினார். இறைவன் கைச்சாத்து செய்து வைத்துவிட்டுச் சென்ற ஓலைகளைத் தில்லைவாழ் அந்தணர் பெருமக்கள்
மாணிக்கவாசகரிடம் அதைக் காண்பித்து இதற்குப் பொருள் யாதெனக் கேட்டனர். அவ்வாறு கேட்ட அவர்களிடம்
மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலமுடையாராகிய எல்லாம்
வல்ல கூத்தப் பெருமானைக் காட்டி இதுவே பொருள் என்றார். இச்செய்தியைச் சிவப்பிரகாச சுவாமிகள், “பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்த வாசகமே வாசகம் அதற்கு வாச்சியம் ரசகல் அல்குல் வேய்த்தோள் இடத்தவனே” என்று கூறியுள்ளார்.
மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் குறித்து ஆய்வாளரிடையே இருவேறு கருத்துகள் உள்ளன. சிலர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
என்றும் வேறு சிலர் கி.பி.13 அல்லது 14ஆம் நூற்றாண்டு என்றும் குறிப்பிட்டுள்ளனர். மாணிக்கவாசகர் இம்மண்ணுலகில்
32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, ஓர் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் இறைவன் திருவடிப்பேற்றினை அடைந்தார்.
நன்றி - பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள் உரை எழுதிய ' பொற்றாமரையும் திருவாசகமும் ' என்ற நூலிலிருந்து.
பதிப்பகம் - AR பதிப்பகம் , மதுரை.
0 Comments