மாணிக்கவாசகரின் திருவாசகம் - 4 , போற்றித் திரு அகவல் - பகுதி 1 / MANIKKAVASAKARIN THIRUVASAKAM - 4 , POTRITH THIRU AKAVAL - PART - 1

 


மாணிக்கவாசரின் திருவாசகம்

4 , போற்றித் திரு அகவல் - பகுதி - 1
உரை விளக்கம்: 

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி , 

தலைமையாசிரியர் , ( ப.நி )

கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி

4. போற்றித் திரு அகவல்

(தில்லையில் அருளியது)

சகத்தின் உற்பத்தி

(உயிர்கள் உறும் அல்லல்கள் அனைத்தையும் நீக்குபவன்   சிவபெருமானே என அவனைப் போற்றுதல்)

நிலைமண்டில ஆசிரியப்பா

திருச்சிற்றம்பலம்

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ,

ஈரடியாலே மூவுலகு அளந்து,

நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்,

போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமால், அன்று

அடி, முடி, அறியும் ஆதரவு அதனில்,

கடுமுரண் ஏனம் ஆகி, முன் கலந்து,

ஏழ்தலம் உருவ இடந்து, பின் எய்த்து,

ஊழி முதல்வ, சய! சய! என்று,

வழுத்தியும் காணா மலர் அடி இணைகள்,

வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில்,

யானை முதலா எறும்பு ஈறாய,

ஊனம் இல், யோனியின் உள்வினை பிழைத்தும்;

மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,

ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;

ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;

இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்;

மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்;

ஈர்இரு திங்களில் பேரிருள் பிழைத்தும்;

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்;

ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்;

ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்;

எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;

தக்க தச மதி தாயொடு தான்படும்

துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்

ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை

ஈண்டியும், இருத்தியும், எனைப்பல பிழைத்தும்,

காலை மலமொடு, கடும்பகல் பசி, நிசி

வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்;

கருங்குழல், செவ்வாய்; வெண்ணகை; கார்மயில்

ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்துக்,

கச்சு அறநிமிர்ந்து, கதிர்த்து, முன்பணைத்து,

எய்த்து இடைவருந்த எழுந்து, புடைபரந்து,

ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர் தம்

கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்;

பித்த உலகர் பெருந் துறைப் பரப்பினுள்

மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;

கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்;

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;

நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும்;

புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்;

தெய்வம் என்பது ஓர்சித்தம் உண்டாகி,

முனிவு இலாதது ஓர்பொருள் அது கருதலும்


உரை:

(சகம் என்பது உலக உயிர்களைக் குறிக்கும். உயிர்கள் உடம்பிற் புகும் தன்மையை அடிகள் எடுத்துக்
கூறியிருத்தலின் இதற்குச் சகத்தின் உற்பத்தி எனச் சிறப்பு
வழங்கப்பெற்றுள்ளது.)

                            நான்முகனாகிய பிரமன்
முதலாக உள்ள தேவர்கள் அனைவரும் தொழுது எழ தமது இரண்டு திருவடிகளாலே மூன்று உலகுகளையும் அளந்து மாவலியின் வலிமையை
அடக்கியவர் திருமால் ஆவார். அவர் அவ்வாறு செய்தலாலே நான்கு திசைகளிலும் உள்ள முனிவர்கள் தமது ஐம்புலன்களும் மகிழுமாறு வணங்குகின்ற ஒளிபொருந்திய திருமுடியினை உடைய திருமால், முன்பு ஒரு காலத்தில் சிவனாரின் திருவடியின்
முடிவினைக் காணும் பொருட்டு கடுமுரண் ஏனமாகி ஏழ் உலகங்களும் ஊடுருவுமாறு தோண்டிச் சென்றும்
இயலாமையால் இளைத்து, ஊழி முதல்வனே! உனக்கே வெற்றி என்று போற்றி வழிபட்டும் காணவியலாத தம் மலர்போன்ற திருவடிகளைச் சிவபெருமான் தம் அடியார்களுக்கு எளிவந்தவனாகி அவ்வடியார்கள் போற்றுவதற்கு எளிதாக இந்நிலவுலகினில் தம் திருவடிகளைக் காட்டி அருளினான்.

           யானை என்னும் பேருடல் முதலாக எறும்பு என்னும் சிற்றுடல் இறுதியாக நல்வினையால் அந்த அந்த உடல்களின் கருப்பையினுள் இருந்து தப்பித்தும் மானுடப் பிறப்பில் அன்னையின் வயிற்றில் கருவாய்த் தோன்றும்போது அக்கருவினை அழித்தற்குப் போராடும்
கிருமிகளிலிருந்து தப்பியும் முதல் மாதத்தில் தான்றிக்காய் போல
உள்ள கருவானது இருமையாக மாறாமல் தப்பியும் இரண்டாம் மாதத்தில் விளைகின்ற தன்மையினால் உருவம் கெடாதவாறு தப்பியும், மூன்றாம் மாதத்தில் தாயின் கருப்பையினுள்
பனிக்குடத்தில் ஏற்படும்  நீர்ப்பெருக்கிற்குத் தப்பியும், நான்காம்
மாதத்தில் நீர்ப்பெருக்கினால் ஏற்படும் பேரிருளுக்குத் தப்பியும், ஐந்தாம் மாதத்தில் ஏற்படும் மாற்றத்தால் உயிர் நீங்காதவாறு தப்பியும், ஆறாம் மாதத்தில் கருப்பையில் ஏற்படும் விரிவினால்
தாய்க்கு ஏற்படும் தினவு மிகுதியால் உண்டாகும் துன்பத்தினின்று
தப்பியும், ஏழு மாதத்தில் கரு வளர்ச்சி அடைந்து குறைமாதக்குழவியாக பூமிக்கு வாராமல் தப்பியும், எட்டாம் மாதத்தில்
உண்டாகும் துன்பத்தால் தப்பியும், ஒன்பதாம் மாதத்தில் தாயின்
கருப்பையினுள் இருந்து வெளிப்படுதற்கு முயலும் துன்பத்தில்
தப்பியும் பத்தாம் மாதத்தில் தாயின் கருப்பையினின்று வெளியே
வரும் பொழுது தாய் படுகின்ற கடல் போன்ற துன்பத்தினோடு
தான் படுகின்ற துன்பத்தினின்று தப்பியும் குழவியாகி பூமியை
வந்து அடைய நேரிட்டது.

                       பின்னர் வளர்ச்சியடைந்து வருகின்ற ஆண்டுகள் தோறும்
நெருக்கடிகளாலும் பல்வேறு அழுத்தங்களாலும் தப்பியிருந்தும்,
காலை நேரத்தில் வெளிப்படும் மலத்தொடு, கடும்பகலில் ஏற்படும்
பசி, இரவுப் பொழுதில் ஏற்படும் உறக்கம், வேற்றிடங்களுக்குச் செல்கின்ற யாத்திரை ஆகிய துன்பங்களிலிருந்து தப்பிப் பிழைக்க நேரிட்டது. மேலும் கருங்கூந்தலையும் சிவந்த வாயினையும்
வெண்மையான பற்களையும் மழைக்காலத்தில் தோகை விரித்தாடும் மயில் போன்ற சாயலையும் நெருங்கி உள் மதர்த்து இறுகக் கட்டிய கச்சு அறுமாறு நிமிர்ந்து இடை எய்த்து வருந்துமாறு பக்கங்களில் பரவி ஈர்க்கும் இடையே நுழையாதவாறு நெருங்கிய
இளமுலைகளை உடைய மயக்கும் மாதரின் கூர்மையான கண்கள்
செய்யும் கொள்ளையிலிருந்து தப்பிக்க நேரிட்டது.

       பித்தம் கொண்ட  உலகத்தோரின் பல துறைகளாகிப் பரந்து நிற்கும் மதம் கொண்ட யானை போன்ற பேராசை என்னும் துன்பத்திற்குத் தப்ப நேரிட்டது. கல்வி என்னும் பல கடலுக்கும்,
செல்வம் என்னும் துன்பத்திற்கும், வறுமை எனப்படும் பழைய
நஞ்சிற்கும், புல்போன்று எளிய எல்லையிலிருந்து பலவகைப்பட்ட
துறைகளில் மேற்கொள்ளும் செயல்களிலிருந்தும் தப்பிக்க
நேரிட்டது. இவற்றையெல்லாம் கடந்து தெய்வம் உண்டு என்ற சித்தம் உண்டாகி வெறுப்பில்லாததாகிய ஒப்பற்ற அப்பொருளை நாடும் நிலையில் ஆறுகோடி மாயா சக்திகள் வேறு வேறாகிய தம் மாயைகளைச் செய்யத் தொடங்கின.

****************   ***************   ********

நன்றி - AR பதிப்பகம் , மதுரை

Post a Comment

0 Comments