போகிப் பண்டிகை
13 • 01 • 2022
சிந்திய பனியும் நம்மைத்
தீண்டிய குளிரும் குன்றி
முந்தைய பருவ மாகி
முடிந்தபின் ; மற்றோர் மாற்றம்
தந்தது நீல வானம் !
தமிழரை ஒன்று சேர்க்க
வந்தது புதிய திங்கள் !
வந்தது நமக்குப் பொங்கல் !
( உவமைக் கவிஞர் சுரதா )
நாடோடியாக காடெங்கும் திரிந்த மனிதன், வளர்ச்சி அடைந்து , விலங்கு குணம் விடுத்து மனித இனம் கண்டு வேட்டையாடுதலை விட்டு , ஒரிடம் நிலைத்து ஒழுங்கு வாழ்க்கையை தனதாக்க சிந்தித்த மனிதனுக்கு , உணவின் தேவையை நிறைவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன்விளைவாக விவசாயத்தின் பயன் அறிந்து , அவற்றையே மேற்கொண்டன். அவற்றிற்கு உதவியாக சில விலங்குகளையும் பழக்கப் படுத்தி பயன்படுத்தினான். அவ்வாறாக செய்யப்பட்ட விவசாயம் செழிப்புற்று உணவை வழங்கி வந்தது.எனவே அந்த அபரிமிதமான விவசாய உற்பத்திக்கான காரணியாக விளங்கிய சூரியனுக்கும் , மழைக்கும் , விலங்குகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பண்டிகை எடுத்து படையலிட்டு வழிபட்டனர். அவ்வழிபாடே நன்றி கூறும் விழாவானது. நான்கு நாட்கள் கொண்ட விழாவில் முதன்மையானது போகிப் பண்டிகை என்பதாகும். . தீயவற்றைப் போக்கி அசுத்தம் போக்கி , கடந்தகால துயரம் போக்கி என மனதின் நினைவுகளிலிருந்தும், வீட்டின் குப்பைகளையெல்லாம் ஒழித்து ,தூய்மையைப் போற்றியது தமிழரினம்.தேவையற்ற குப்பைகள் மிகுமாயின் அவை மாசடையுமென சிந்தித்து , பயனற்றவைகளையும் , பாழ்பட்டவைகளையும் பக்குவமாக ஒதுக்கி , பதமாகக் கொளுத்தி எரிப்பதால் குப்பைகள் கூளமாகிப் பயன் தரும் வகையில் கொண்டாடியப் பண்டிகையே போகி எனக் கொண்டாடப்படுகிறது. ஆம் தமிழினம் கண்ட தலையாயப் பண்டிகை பொங்கல் எனும் அறுவடைத் திருநாள். அவைநான்கு நாட்கள் கொண்டாடும் ஒரு பெருவிழாவாக விளங்குகிறது
அவற்றின் முதல் திருவிழாவாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகையானது மார்கழி மாதம் கடைசி நாள் கொண்டாடப்படும் பண்டிகையாகும் அதாவது விழாக்களும் , விரதங்களும் நிறைந்த சிறந்த மாதமான மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகை .இப்பண்டிகையானது பழையன கழிந்து புதியன புகுதலாகும்.
காப்புகட்டுதல் :
பழந்தமிழரின் அறிவியல் அறிவைப் பறைசாற்றுகின்ற ஒரு சடங்கு காப்புக் கட்டுதல் . சடங்குகள் மூலம் ஆற்றல்மிகு மூலிகைகளைக் கொண்டு நோய்த்தடுக்கும் முறைகளை காலமறிந்து வகைப்படுத்தினர். இருள் பிரிந்து , ஒளி புலரும் வேலை குளிர் காலமான நீண்ட இரவுப் பொழுது முடிந்து, பகல் பொழுது நீடிக்கும் காலமாதலால் வெப்பம் அதிகரிக்கும் காரணத்தால் உடல் நலக்குறைவு ஏற்படுமென உத்தேசித்து , வரும் முன் காப்பதன் நோக்கமாக மூலிகைகளைக் கொண்ட ஒரு தடுப்பு அரணை ஏற்படுத்தி ஒரு முதலுதவிப் பெட்டகத்தையே தமது வீடு ,வீதி களில் கட்டி அழகுடன் ஆரோக்கியத்தையும் வளர்த்தனர்.பண்டிகை நாட்களில் திடீரெனத் தோன்றும் ஒவ்வாமை, விஷக்கடி,வயிற்றுப்போக்கு போன்ற சிறு நோய்களுக்கு பயன்படுத்தும் நோக்கத்தோடு எளியதொரு மூலிகைக ளைக்கட்டி வைத்தனர்.இதற்கு காப்புக் கட்டுதல் என்று பெயர் சூட்டி வழக்கப் படுத்தினர்.
அத்தகைய காப்புக் கட்டில் வேப்பலை,மாவிலை , தும்பை , பிரண்டை ,ஆவாரை , சிறுபீளை , பண்ணைபூ போன்றவை அணி வகுத்து ஆரோக்கியம் காத்தன. இவற்றின் பயன்களாவன ஆவாரை சூடு தணிக்கும் ,மற்றும் சர்க்கரை , புற்று நோய்க்கு தீர்வாக அமையும்.வேப்பிலை என்பது தமிழர் மரபுப் படி முதன்மை கிருமிநாசினிஆகும்.இது தெய்வீகத் தாவரமென போற்றப்படுகிறது.இதன் கசப்புத் தன்மையே காற்றில் பரவும் நோய்க் கிருமிகளைத் தாக்கும் ஆற்றல் கொண்டது.தும்பையோ வாசம் வீசி இறைப்பு,நீர் வேட்கை, தலைவலியிலிருந்து பாதுகாக்கிறது. சிறுபீளை எனப்படும் பொங்கல் பூவானது கல்லடைப்பு, நீரடைப்பு, நீர்த்தாரை போன்றவை குணப்படுத்துகிறது.இந்தக் கொண்டாட்டங்கள் சடங்குகள் மட்டுமல்ல, காரணம் கருதி செயல்படுத்திய அறிவியல் முறைகள்.மனித வாழ்விற்கு மேன்மைத் தரும் பாதைகள். அசுத்தம் நீக்கி, சுத்தம் போற்றி , நோய் தடுக்கும் முறைகளை வகுத்து விழாவினூடே விளங்கவைத்து, சிறப்புக் கண்ட தமிழர் மரபை போற்றி தரணியெங்கும் தமிழ் மணம் வீச,தமிழர் குணம் தழைத்தோங்க , மரபு மாறாமல் வணங்கி மகிழ்வோம்.!
0 Comments