10 ஆம் வகுப்பு - தமிழ் - திருப்புதல் தேர்வு - மதுரை - மாதிரி வினாத்தாள் - ஜனவரி - 2022 / 10th TAMIL - REVISION TEST - MADURAI - JANUARY - 2022

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

மாதிரி வினாத்தாள் - மதுரை மாவட்டம்

முதல் திருப்புதல் தேர்வு - ஜனவரி - 2022

நேரம் 15 நிமிடங்கள் + 3 மணி நேரம்

மொத்த மதிப்பெண்கள் : 100

                 பகுதி - 1                      15 × 1 = 15 

1 ) எந்தமிழ்நா - என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் ------

அ ) எந் + தமிழ் + நா 

ஆ ) எந்த + தமிழ் + நா

இ ) எம் + தமிழ் + நா

ஈ ) எந்தம் + தமிழ் + நா

2 ) " உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் . உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் " - பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை ? 

அ ) உருவகம் , எதுகை

ஆ) மோனை , எதுகை

இ ) முரண் , இயைபு 

ஈ ) உவமை , எதுகை

3 ) " காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் " நிலத்துக்கு நல்ல உரங்கள்.  இத்தொடரில் வண்ணமிடப்பட்ட பகுதி குறிப்பிடுவது -----

அ ) இலையும் சருகும்

ஆ ) தோகையும் சண்டும் 

இ ) தாளும் ஓலையும்

ஈ ) சருகும் சண்டும்

4 ) வேர்க்கடலை , மிளகாய்விதை , மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும்  பயிர்வகை -----

அ ) குலை வகை 

ஆ ) மணி வகை

இ ) கொழுந்து வகை 

ஈ ) இலை வகை 

5 ) விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர் -----

அ ) பாவாணர்

ஆ ) பாரதிதாசன்

இ ) இரா.இளங்குமரனார்

ஈ ) தமிழழகனார்

6 ) பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் -----

அ ) கனகசுப்புரத்தினம்

ஆ ) துரை. மாணிக்கம்

இ ) பாவலர்

ஈ ) முத்தையா

7 ) முறுக்கு மீசை சிரித்தார் - வண்ணமிட்ட சொல்லுக்கான தொகையின் வகை -----

அ ) பண்புத்தொகை

ஆ ) அன்மொழித்தொகை

இ ) உவமைத்தொகை

ஈ ) வேற்றுமைத்தொகை

8 ) அறிஞருக்கு நூல் , அறிஞரது நூல்   ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது -----

அ ) வேற்றுமை உருபு 

ஆ ) தனிமொழி 

இ ) தொடர் மொழி 

ஈ ) பயிற்று மொழி 

9 ) வளவன் வீட்டிற்குச் சென்றான்  - இத்தொடர் எவ்வகை மொழி ?

அ ) பொது மொழி

ஆ ) தனி மொழி 

இ ) தொடர் மொழி 

ஈ ) பயிற்று மொழி 

10 ) உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு  நடத்திய முதல் நாடு ------

அ ) ரஷ்யா 

ஆ ) இந்தியா 

இ ) சிங்கப்பூர்

ஈ ) மலேசியா

11 ) கெடுப்பதூஉம் , எடுப்பதூஉம் - இச்சொற்களில் பயின்று வந்துள்ள அளபெடை வகை -----

அ ) இன்னிசை அளபெடை

ஆ ) செய்யுளிசை அளபெடை

இ ) இசைநிறை அளபெடை

ஈ ) சொல்லிசை அளபெடை 


பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு ( வினா எண்கள் 12 , 13 , 14 , 15 ) விடை தருக.

செந்தமிழே ! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை 

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும் ?

முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும் 

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் 


12 ) இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?

அ ) கனிச்சாறு 

ஆ ) காற்றே வா

இ ) சிலப்பதிகாரம்

ஈ ) கம்பராமாயணம்

13 ) இப்பாடலின் ஆசிரியர் யார் ?

அ ) இளங்கோவடிகள்

ஆ ) கம்பர்

இ ) பெருஞ்சித்திரனார்

ஈ ) கண்ணதாசன்

14 ) செந்தமிழே - இலக்கணக்குறிப்புத் தருக.

அ ) எண்ணும்மை 

ஆ ) பண்புத்தொகை

இ ) வினைத்தொகை 

ஈ ) வினை முற்று

15 ) இப்பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்கை எடுத்து எழுதுக.


                பகுதி - II   ( மதிப்பெண்கள் - 18 )

                         பிரிவு - I

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 21 - வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.                                   ( 4 × 2 = 8 )

16 ) விடைக்கேற்ற வினாக்கள் அமைக்க.

அ ) ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே , அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்கள் அமைந்திருக்கும்.

ஆ ) கரும்பின் நுனிப்பகுதியை கொழுந்தாடை என்று அழைப்பர்.

17 ) மண்ணும் சிலம்பே ! மணிமேகலை வடிவே ! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே ! - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர  எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

18 ) வசன கவிதை - குறிப்பு வரைக.

19 ) ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்களை எடுத்தெழுதுக.

20 ) ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி , எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

21 ) ' விடல் ' - என முடியும் குறளை எழுதுக.

                           பிரிவு - II           5 × 2 = 10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.

22 ) இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

அ ) தொடு - தோடு

ஆ ) மலை - மாலை

23 ) வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

அ ) நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்

ஆ ) ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

24 ) கலைச்சொல் அறிவோம்

அ ) Homograph

ஆ ) Classical literature 

25 ) கூட்டப்பெயர்களை எழுதுக.

அ ) ஆடு      ஆ ) பழம்

26 ) தண்ணீர் குடி , தயிர்க்குடம் ஆகிய தொகைச்சொற்களை விரித்து எழுதி , தொடரில் அமைக்க.

27 ) பழமொழிகளை நிறைவு செய்க.

அ ) கற்றோர்க்குச் -------------

ஆ ) உப்பிட்டவரை -------------

28 ) எண்ணுப் பெயர்களைக்கண்டு , தமிழ் எண்களில் எழுதுக.

அ ) எறும்புந்தன் கையால் எண்சாண் ------

ஆ ) நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி ------


             பகுதி - 3 - சிறுவினா    2 × 3 = 6

                               பிரிவு - I

29 ) புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது. இது போல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

30 ) கெட்டுப்போன காய்களுக்கு வழங்கும் சொற்களை எழுதுக.

31 ) உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக .

            மகாகவி சுப்பிரமணிய பாரதியார், 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா', 'சிந்துக்குத் தந்தை' என்றெல்லாம் பாராட்டப் பெற்றவர்; எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்; கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சித்திரம்- கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும்,பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்; குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என, குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்; இந்தியா, சுதேசமித்திரன் முதலிய இதழ்களின்   ஆசிரியராகப் பணியாற்றியவர். பாட்டுக்கொரு புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்; இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும் தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே   பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.

1 ) பாரதியார் எந்தெந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார் ?

2 ) பாரதியார் எழுதிய குழந்தைகளுக்கான நீதிநூல்கள் யாவை ?

3 ) பாரதியார் எவ்வாறெல்லாம் பாராட்டப்பெற்றார் ?


                        பிரிவு - 2            2 × 3 = 6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க. வினா எண் 34 கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

32 ) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை ?

33 ) சோலைக் ( பூங்கா ) காற்றும் , மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

34 ) ' அன்னை மொழியே ' - எனத் தொடங்கும் பெருஞ்சித்திரனாரின் பாடலை எழுதுக.


             பிரிவு - 3               ( 2 × 3 = 6 ) 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.

35 ) வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்ற இரவு.

     - இப்பாடலில் பயின்று வந்துள்ள அணியைச்சுட்டி விளக்குக.

36 ) அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.

        - அலகிட்டு வாய்ப்பாடு தருக.


37 ) அறிந்தது , அறியாதது , புரிந்தது , புரியாதது , தெரிந்தது , தெரியாதது , பிறந்தது , பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம் . அது பற்றி உமது அறிவுரை எமக்குத் தேவையில்லை . எல்லாம் எமக்குத் தெரியும்  . 

     இக்கூற்றில் வண்ணமிட்ட வினைமுற்றைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.


                 பகுதி - IV        5 × 5 = 25

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.

38 ) மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் , பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு , மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

39 ) மாநில அளவில் நடைபெற்ற ' மரம் இயற்கையின் வரம் ' எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

                              அல்லது

உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் , விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

40 ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக .

   


41 ) நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

42 ) கீழ்க்கண்ட அறிவிப்பைக் கேட்ட நீங்கள் , உங்கள் குடும்பத்தாரைக் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்கள் ஐந்தினை எழுதுக.

           ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று  இரவு சென்னைக்கும் , நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

                அல்லது

மொழி பெயர்த்து தலைப்பிடுக.

   The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers' fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

                    பகுதி - 5       ( 3 × 8 = 24 ) 

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.

43 ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

                    அல்லது

நயம் பாராட்டுக.

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே

       தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே

ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே

     உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே

வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே

            மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே

தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே

        தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே

                                                கா.நமச்சிவாயர்

44 ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

                                  அல்லது

உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

45 ) '  சான்றோர் வளர்த்த தமிழ் ' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

                    அல்லது

சிறியதானியம் போன்ற மூக்கு; சின்னக்கண்கள்; சின்னத்தலை; வெள்ளைக் கழுத்து: அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்; இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்த கொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண்.

         -   இது போன்று உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைப் பற்றி வசனநடையில் எழுதுக.

****************   **************   ***********

நண்பர்களே !

ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்களுக்கான காட்சிப்புதிவு , அனைத்துப் பாடங்களுக்கான வினாத்தாள் & தினம் ஒரு ஆன்லைன் போட்டித்தேர்வு எழுதி சான்றிதழ் பெற்று அரசுப்பணியில் சேர்ந்திட , வாட்சாப்பில் தொடர்பு கொள்க.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

97861 41410

YOU TUBE - GREEN TAMIL

**************   **************   **************


Post a Comment

0 Comments