வை.மு.கோதைநாயகி என்னும் பல்துறை வித்தகர் - எழுச்சிப் பெண்ணின் வெற்றிக்கதை / VAI.MU.KOTHAINAAYAKI - BIRTHDAY - 01 - 12 - 2021

 

      பெண்ணியம்  காத்த புண்ணியவதி 

         வை• மு • கோதைநாயகி அம்மையார் 

                பிறந்த  தினம்-- 01 - 12 - 2021


    தமிழ் புதின எழுத்துலகில் புத்தொளியாகப் புகுந்தவர்,மேடைப்பேச்சு  மேம்பட்ட மெருகேற்றியவர், சமூக நல சிந்தனையாளர், கவிஞர், இதழாசிரியர், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை, துப்பறியும் புதினம் எழுதிய பெண் எழுத்தாளர்  எனப்பன்முக ஆற்றலைப் பெற்ற,வை • மு • கோதைநாயகி அம்மையார்  அவர்கள் 1901 - ஆம் ஆண்டு டிசம்பர் -1- ம் நாள் செங்கல்பட்டு மாவட்டம் நீர்வளூரில் என் • எஸ் • வெங்கடாச்சாரி- பட்டம்மாள்  இணையரின் இரண்டாம் மகளாகப் பிறந்தார்.

           இவர் வைணவ மரபைக் கொண்டவராக இருந்தமையால் சிறு வயது முதலே கோதை எனவும், ஆண்டாள் எனவும் அனைவரும் அன்புடன் அழைத்து மகிழ்ந்தனர்.  கோதை நாயகி அம்மையார் தனது சித்தப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம் , திருவாசகம்,திருவாய்மொழி, கம்பராமாயணம்  போன்ற இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

    சிறுவயது திருமணத்தில் சிறுமிகள் சிக்கிச் சிதைந்துக் கொண்டிருந்த தருணம் , அது கோதை அம்மையார் வாழ்விலும்  நிகழ்ந்தது. ஆம்... 1907 - ஆம் ஆண்டு கோதை நாயகிக்கு ஐந்தரை வயதே ஆனபோது  திருவல்லிக்கேணி வை• மு • சீனிவாச ஐயங்கார், மகனார் ஒன்பது வயது நிரம்பிய வை• மு • பார்த்தசாரதிக்குத்  திருமணம் செய்து வைத்தனர். சிறுமி , திருமணம்  நடந்த போதும் சீர்மிகு சிங்காரமாக சிகரம் தொட்டார்  வை. மு.கோ  அம்மையார்.  அம்மையார் அவர்களின் வெற்றிக்கு அவரது செயல்கள்  அனைத்திலும்  அகம் மகிழ்ந்து  கைகொடுத்து  கலை வளர்க்கச் செய்தவர் ,வை.மு.கோ அவர்களின் கணவர் பார்த்தசாரதி  ஆவார். திருமணத்திற்குப் பின்பே பார்த்தசாரதி அவர்கள் கோதை நாயகி அம்மையாரை கல்வி  பயில  அனுமதித்தார்  .மேலும் தனது மாமியாரிடம்  சுந்தரத் தெலுங்கு மொழியைக் கற்றார்.

எழுத்தாளராக...!

        வை. மு. கோதைநாயகி அவர்கள் பள்ளி சென்று படிக்க இயலாத நிலை . எனவே வீட்டில் அவ்வப்போது திருவாய்மொழிப் பாசுரங்களை பாடிக்கொண்டிருந்ததன் விளைவே சரளமான தமிழ் உச்சரிப்பில் உச்சம் தொட்டார்.மேலும் கதைச் சொல்லும் ஆர்வத்தால் பல கற்பனைக் கதைகளை  சொல்லும் திறன் சிறுவயது முதலே கதைக் கேட்போரின் ஆர்வத்தைத் தூண்டி மகிழும் விதத்தில் கதைகளைக் கூறி மகிழ்வித்தார். இத்திறனைக் கண்டு வியந்த அவரது துணைவர் , வை. மு.  கோ - வின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக பல நாடகங்களைக் காண அழைத்துச் சென்றார். அவ்வாறாக நாடகங்களைக் கண்ட கோதை அம்மையாருக்கு நாடகம் எழுதும் ஆர்வம் மேலிட்டது.இவற்றைத் தொடர்ந்து சமூக மறுமலர்ச்சி மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்ற அவரின் ஆர்வமும், கற்பனை வளமும் எழுத்தின் மீதான ஈர்ப்பைத் தூண்டின. ஆகையால் கோதைநாயகி அவர்கள் நாடகத்தை எழுதுவதிலும், இயக்குவதிலும் வளம்பெற்றுக் காணப்பட்டார். இதனால் இவரின் சமூக நாடகங்கள் பலமுறை அரங்கேற்றம் பெற்றன.அவற்றில் அருணோதயம், வத்ச குமார், தயாநிதி போன்ற நாடகங்கள் பாராட்டைப் பெற்றவைகளாகத் திகழ்ந்தன. முத்தமிழ் திறத்தில் வல்லவராக விளங்கினார். எனவே இவரின் இரு சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாடகங்கள் , இரண்டு உரைநடை நூல்கள் ஆகியவையும் பாராட்டைப் பெற்ற படைப்புகளாகத் திகழ்கின்றன. 

மேடைப் பேச்சாளராக...!

         கோதைநாயகி அம்மையாரின்  மேடைப் பேச்சானது கேட்பவரைவியக்கவைப்பதாக விளங்கியது. பேச்சின் இடையிடையேசிறு, சிறு கதைகளைச் சொல்லி கதை கேட்கும் ஆர்வத்தை தூண்டும் விதம் அனைவராலும் விரும்பத்தக்க பெரும்வரவேற்பைப் பெற்றன. எனவே காங்கிரஸ் இயக்கத்தினுடைய செயல் திறன் மிக்க பேச்சாளராகத் திகழ்ந்தார்.மேலும் சத்திய மூர்த்தி, காமராசர் , இராஜாஜி போன்றோரின் நட்பு கிடைக்கப் பெற்று ,வாழ்த்துகளையும் பெற்றார்.மேலும் பல கூட்டங்களில் கலந்து கொண்டு பக்திப் பாடல்களையும் மகா கவியின்  எழுச்சிமிக்க பாடல்களையும் பாடும் திறன் மிக்கவராக விளங்கினார்.மேடைப் பேச்சாளராக மட்டுமல்லாமல் பாடல்களைப் பாடுவதிலும் தேர்ந்தவராகக் காணப்பட்டார். வை.மு.கோதை நாயகி அம்மையார் அவர்கள் 

இனிய இசையில் பாடுவதை 'மகாகவியே ' கேட்டு மகிழ்ந்த தாக செய்திகள் தெரிவிக்கின்றன.  பின்பு பாரதியாரால் புகழப்பட்டு  வானொலியிலும் இசை நிகழ்ச்சிக்காக வழங்கியதோடு மட்டுமல்லாமல் , இசைத் தட்டுகளாகவும் வெளியிட்டு சிறப்புச் சேர்த்தார்.பாடுவது மட்டுமன்றி பாடல்களைப் புனைவதிலும் வல்லவராக மிளிர்ந்தார். 

இசை மார்க்கம்...!

            பாடல்களை இயற்றுவதிலும் , பாடுவதிலும்  ஆர்வம் கொண்ட வை.மு. கோதை அம்மையார் சில அபூர்வ ராகங்களின் சுருதிகள் அனைத்தையும் ஒன்றிணைந்து " இசை மார்க்கம் " என்ற புத்தகமாகவும், இசைக்கான புத்தகமாகவும் வெளியிட்டார். அந்த புத்தகத்தில் " அம்பா மனோஹரி,கங்கணாலங்காரி, அம்சப்ரமாரி  போன்ற அபூர்வ ராகங்களின் இருந்த சுருதிகள் , இன்றும் கர்நாடக இசை கலைஞர்களால் பாடப்பட்டு வருகின்றன. 

விடுதலைப்  போராட்டத்தில்  ஈடுபாடு...

            தாய்நாட்டைக் காக்கும் தணியாத ஆர்வத்தில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து ஈடில்லா சேவை செய்தார். 1925- ஆம்  ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்த போது வை.மு. கோதைநாயகி  அம்மையார் காந்தியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு கோதைநாயகி அம்மையார் அவர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.அன்னி பெசன்ட் அம்மையாரை  சந்தித்த வை. மு. கோ அவர்களுக்கு தேசபக்தையும், சமூக சேவகியுமான  அம்புஜம்  அம்மாவின் நட்பு ஏற்பட்டது. அப்போது அவரது தந்தை சீனிவாச ஐயங்கார் இல்லத்துக்கு காந்தி வந்தார்.  காந்தியை நேரில் பார்த்த வை.மு கோதை அம்மையாரை , காந்தி அவர்களின் எளிமையும்,உறுதியும் வெகுவாக கவர்ந்தன. எளிமையைக் கண்டு இளகிய அம்மை அவர்கள் அதுமுதல் தானும் கதர் ஆடையும் , உயர் அணிகலன் விடுத்து எளிய தோற்றமும் தனதாக்கிக் கொண்டார்.  மேலும் அம்புஜம் அம்மையார் , ருக்மணி இலட்சுமிபதி,வசுமதி இராமசாமி ஆகியோருடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டார்.1931 - ஆம் ஆண்டு மகாத்மா காந்தி கள்ளுக்கடை மறியலில் ஈடுபட வை. மு.கோதைநாயகி அவர்களை அழைத்ததன் பேரில் , அதனை அம்மையாரும் ஏற்றார். அதன் படி வை. மு.கோ அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் இருசப்ப கிராமணித் தெருவில் இருந்த கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்.மேலும் சென்னை சைனா பஜாரில்  தடையை மீறி ஊர்வலம் சென்றதால் , தலைவர்கள் பலருடன் கோதைநாயகியும் கைது செய்யப்பட்டார். அதற்கான சிறைதண் டனையும் பெற்றார். மேலும் 1932- ல் ' ஆம் ஆண்டு ' லோதியன் கமிஷனுக்கு ' எதிராக நடந்த போராட்டத்தில் கலந்த  கொண்டு  அன்னியத் துணி எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துக்கொண்டு போராடியதற்காக  வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தச் சிறை யில் இருந்த பலரின் வாழ்க்கை நிலையையும் , சிறைப்பட்ட விதத்தையும் கேட்டறிந்து அவற்றை நாவலாக  எழுதினார். சிறையில் இருந்துக் கொண்டே " சோதனையின் கொடுமை ", " உத்தமசீலன் " ஆகிய புதினங்களை எழுதினார்.மேலும் கைதிகளைச்  சீர் திருத்தி  வன்முறை விடுத்து காந்திய  பாதையில் நல்வழிப் படுத்தினார்.


பொதுத் தொண்டில்  புதுமைச்  செய்தவர்...


            வை. மு .கோதைநாயகி  அம்மையார் அவர்கள்  பத்தி சேவை , சமூகச் சேவை  மட்டுமல்லாது.பொதுத் தொண்டுகள்  பல செய்து மக்கள் பணியும் ஆற்றினார். திருவல்லிக்கேணியில்  " மகாத்மா காந்தி சேவா சங்கம் " என்ற  சங்கத்தைத்  தொடங்கினார். அச்சங்கத்தின்  வாயிலாக  ஏழைகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்தார். வை.மு.கோ அவர்கள் குழந்தைப் பேறு மருத்துவம் பார்க்கும் திறனைப் பெற்று ,மகத்தான சமூகப் பணியாற்றினார். உறவினர்கள் மட்டுமின்றி, எளியவர் யார் உதவி என வந்தாலும் உள்ளத்து அன்போடு, அவர்கள் இருக்கும் இடம் நாடிச் சென்று மருத்துவ உதவியாற்றினார்.வை.மு. கோ அவர்களின்  தேசிய சேவையைப் பாராட்டி காங்கிரஸ் அரசால் வழங்கப்பட்ட  மூன்று ஏக்கர் நிலத்தை " பூமிதான " இயக்கத்திற்காக வினோபாவேயிடம் வழங்கி மகிழ்ந்தார். இந்நிகழ்வு அம்மையாரின் பொதுத் தொண்டிற்கு சிறந்த 

கோதைநாயகி அவர்களின் படைப்புகளில்  சிறந்தவற்றில் சில...

         தமது படைப்பால் சமூக நலத்திலும் பெண்கள் நலத்திலும் முன்னேற்றம் காண விழைந்தவர்,சிறந்த படைப்புகளை நல்கி மக்கள் மனங்களில் நல்ல எண்ண விதைகளை விதைத்தவர்.இருபத்து நான்கு ஆண்டுகளில் எண்பது கதைகள்.வேறுபட்ட கதையில் பிண்ணிப் பெண்கள் அனைவரையும் இணைத்தவர் வை.மு.கோதைநாயகி எனப் பாராட்டப் பட்டவர் வை.மு. கோ அவர்களின் ஜகன் மோகினி இதழில் வெளிவந்த வெற்றிப் படைப்புகளில் சில.

* 1925- ஆம் ஆண்டு வெளிவந்த வைதேகி.

* 1927 - ஆம் ஆண்டு வெளிவந்த கெளரிமுகுந்தன்.

* 1928 - ஆண்டு வெளிவந்த நவநீத கிருஷ்ணன்.

* 1930 - ஆம் ஆண்டு வெளிவந்த சியாமளநாதன்.

* 1932 - ஆம் ஆண்டு வெளிவந்த 

உத்தம சீலன் , கதம்ப மாலை.

* 1933 - ஆம் ஆண்டு வெளிவந்த 

சோதனையின் கொடுமை.

* 1934 - ஆம் ஆண்டு வெளிவந்த 

புத்தியே புதையல்.

* 1935 - ஆம் ஆண்டு வெளிவந்த 

பட்டமோ பட்டம்.

* 1936 - ஆம் ஆண்டு வெளிவந்த 

அநாதைப் பெண்.

* 1937 - ஆம் ஆண்டு வெளிவந்த 

அன்பின் சிகரம்.

* 1938 - ஆம் ஆண்டு வெளிவந்த மகிழ்ச்சி உதயம்.

* 1943- ஆம் ஆண்டு வெளிவந்த மதுர கீதம்.

* 1944 - ஆம் ஆண்டு வெளிவந்த 

அமுத மொழி.

* 1945 - ஆம் ஆண்டு வெளிவந்த 

பிரார்த்தனை.

* 1947 - ஆம் ஆண்டு வெளிவந்த 

புதுமைக் கோலம்.

* 1950 - ஆம் ஆண்டு வெளிவந்த தூய உள்ளம்.

* 1951 - ஆம் ஆண்டு வெளிவந்த 

ரோஜா மலர்.

* 1953 - ஆம் ஆண்டு வெளிவந்த நிர்மல நீரோடை

         போன்றவை  கோதைநாயகி அவர்களின் நல்ல படைப்பின் நற்சான்றுகளாக திகழ்கின்றன. இவ்வாறாக  விடுதலைப் போராட்ட வீராங்கனை,  நாடக ஆசிரியர், நடன இயக்குநர்,இசை வித்தகி,பத்திரிக்கை ஆசிரியர் ,பெண்களின் வழிகாட்டி யென பன்முகத் திறன்  மிக்க மங்கையர் திலகம் நினைவைப் போற்றி வணங்கி  என்றென்றும்  பெருமை கொள்வோம்.!

Post a Comment

0 Comments