ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் - 5 , கசடற மொழிதல்
மதிப்பீடு - நெடுவினா
3 ) நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?
* உலகமெங்கும் வாழும் மக்களுக்குப் பட்டறிவை நூலகம் தருகிறது. ஏதோ ஒரு காரணத்தால் உலகில் வாழ்கின்ற மக்களோடு தொடர்புகொண்டு வாழ வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். எழுத்தறிவு பெற்றோர் மிகுந்துள்ள நிலையில் மனவளம் பெருக வேண்டும். அதற்கு வீட்டின் நிலையும், நாட்டின் நிலையும் மாறவேண்டும். வீட்டு நிலைமாற, வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்.
* ஒரு நாட்டை உலகம் மதிப்பது, அந்த நாட்டு மக்களின் மனவளத்தைக் கொண்டே. ஆதலால் வீடுகள் நற்பண்புகள் செழிக்கும் பண்ணைகளாக, கருத்துகள் மலரும் சோலைகளாக மாறவேண்டும். வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளானவை என வீடுகளில் வெள்ளி, பித்தளைப் பாத்திரங்கள், உடைகள், மருந்துகள் இருப்பனபோலப் புத்தகசாலையும் நிச்சயம் இருக்கவேண்டும்.
* உணவு, உடை, அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானதும், முதலிடம் புத்தகசாலைக்குத் தரவேண்டும். மக்கள் மனத்தில் அறிவைப் புகட்ட வழிசெய்ய வேண்டும். உலக அறிவையும் வாழ்க்கைக்குப் பயன்படும் அறிவையும் தருவன புத்தகங்களே. இதயத்தைப் பண்படுத்துவன புத்தகங்களே. மக்களின் மனவளத்தை அதிகப்படுத்துவன நூல்களே.
* வீடுகளில் நடைபெறும் விசேஷங்களின் போதும், வெளியூர் சென்று திரும்பும்போதும், பரிசளிப்புகள் செய்யும்போதும் புத்தகங்கள் வாங்குவதை ஊக்குவிக்க வேண்டும். உலக அறிவைத் தரக்கூடிய நூல்களும், வீட்டிற்கோர் திருக்குறளும் கட்டாயம் இருத்தல் வேண்டும்.
* நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள், மக்கள் துயர் துடைத்தவர்கள், தொலைத்தூரம் பயணம் செய்து நாடுகளைக் கண்டவர்கள், வீரர்கள், விவேகிகள் குறித்த வாழ்க்கை வரலாறுகளைப் படிக்க வேண்டும். இலக்கிய நூல்கள், விஞ்ஞானத் தகவல் தெரிவிக்கும் நூல்கள், வாழ்க்கைக் குறிப்பு ஏடுகள், தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்களும் தேவை.
0 Comments