9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 , எட்டுத்திக்கும் சென்றிடுவீர் - பாடப்பகுதி - நெடுவினா & விடை / 9th TAMIL - EYAL 4 - NEDUVINA & VIDAI

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 4 , எட்டுத்திக்கும் சென்றிடுவீர் 

பாடப்பகுதி நெடுவினா 


1. இந்திய விண்வெளித்துறை பற்றிய செய்திகளை விவரிக்க.


         இந்தியா, கடந்த 20 ஆண்டுகளாக விண்வெளித்துறையில் சாதனைகள் படைத்த 6 நாடுகளில் ஒன்றாக உள்ளது. பூமியை ஆய்வுசெய்தல், தொலைத் தொடர்புக்கான செயற்கைக்கோள் ஏவுகணைகளை உருவாக்குதல், வெளிநாட்டு உதவி இல்லாமல் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைக் கையாளுதல் என்னும் செயல்பாடுகளை, இந்தியா முழுமையாகக் கொண்டுள்ளது. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

      இந்திய அறிவியல் முன்னோடி டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்கள், விண்வெளித் தொழில்நுட்பச் சாத்தியக் கூறுகளைச் சாமானிய மக்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தக் கருதி, 1960இல் விண்வெளித் திட்டங்களை உருவாக்கினார். தற்பொழுது சதீஷ்தவான் விண்வெளி மையம் ஆந்திராவில் உள்ளது. உலக நாடுகளில் விண்வெளி ஆய்வு, தனி நிறுவனமாகச் செயல்படுகிறது. நம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமாக ‘ISRO' பணியாற்றுகிறது. ஆய்வு என்ற நிலையைக் கடந்து, மீள்பயன்பாட்டு ஏவுகலம் ஸ்ரீஹரிகோட்டாவில் பரிசோதிக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுகிறது. ‘PSLV' மற்றும் ‘GSLV' ஆகிய ஏவுகலன்கள், ஒருசில மாற்றங்களுடன் சாதனைகள் படைத்துள்ளன.


            சந்திராயன் - 1 நிலவின் புறவெளி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. சந்திராயன் - 2 'ரோவர்' ஊர்தியை நிலவில் இறக்கி 14 நாள்கள் ஆய்வுப்பணி மேற்கொள்ளும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள், 7 ஆண்டுகள், 15 ஆண்டுகள் என, இஸ்ரோ மூன்றுவகைத் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.


முன்னோடித் திட்டங்கள் :

            சூரியனை நோக்கி இந்தியாவின் ‘ஆதித்யா-1' என்ற விண்கலம் அனுப்பப்பட உள்ளது. வெள்ளிக்
கோளினை நோக்கி, “இந்திய வெள்ளி சுற்றி திட்டக்கலன்' செலுத்தப்பட உள்ளது. வியாழன் கோளுக்கும்
விண்கலன் அனுப்பப்பட உள்ளது. பிரான்சு நாட்டுடன் இணைந்து, செவ்வாய் தேசத்தில் குடிபெயர் ஆய்வு
மேற்கொள்ளத் திட்டமிடப் பட்டுள்ளது. மார்க் 3 என்ற ஏவுகலன், 2021 - 2022இல் ஏவப்பட உள்ளது.

****************    **********   ************

2 .அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.

        அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதிய புதிய அரிய முன்னேற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. கற்பனைக்கு எட்டாத வேகத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. இன்று இணைய வழிப் பயன்பாடு, அன்றாட வாழ்வை எளிதாக்கியுள்ளது.

இணையவழிக் கல்வி :

         பள்ளி வகுப்பறையில் ஏற்படுகின்ற சந்தேகங்களை வீட்டில் அமர்ந்து, இணைய வழியில் பாடங்களைக்கற்க முடியும். புரியாத புதிர்களைக்கூட மிக எளிமையான விளக்கப் படங்களாகக் காணமுடியும்.


 புத்தகத்தில் இல்லாத பல்வேறு கூடுதல் செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம். முன் அறியாத இடங்கள் பற்றிய விளக்கங்கள் செய்திகளாக மட்டுமல்லாமல், விளக்கப் படங்களுடன் நேரிடையாகச் சென்று காண்பதுபோலக் காட்சிகள் வாயிலாகக் காணலாம்.

        கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு என்பதுபோல் ஒரு பொருள் பற்றிய பல்வேறு தரவுகளைக்
கண்டறியலாம். எளிமையாகப் புரிந்துகொள்ள அது உதவுகிறது. உலகமே உங்கள் கையில் இருப்பதுபோல்
குறுகிய கால எல்லைக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் எவ்விதப் பயமும் இல்லாமல் புரிந்துகொள்ள முடியும்.

இணையவழிப் பொழுதுபோக்கு :

      இன்றைய உலகில் பொழுதுபோக்கே வாழ்க்கை என்றாகியுள்ளது. விடியற்காலை எழுவதுமுதல் இரவு
உறங்கப் போவதுவரை கைப்பேசியைப் பயன்படுத்துகிறோம். ‘சலிப்பு ஏற்படும்போது', பணச்செலவு இல்லாமல்
'You tube' வாயிலாக, உலகையே உள்ளங்கையில் காணலாம். 

           புதிய, பழைய திரைப்படங்கள் பார்க்கவும், திரைப்படப் பாடல்கள் கேட்கவும் முடியும். இசைத் தொடர்பான
நிகழ்வுகள் அனைத்திலும் தேவையானவற்றை உடனுக்குடன் கேட்கமுடியும்.

     விளையாட்டு நிகழ்வுகளைப் பார்ப்பது மட்டுமல்லாமல், நாமே களத்தில் இறங்கி விளையாடுவதுபோல விளையாட முடியும். விரல்நுனியில் இவை அனைத்தும் அடக்கம்.

******************    **********   ************





Post a Comment

0 Comments