ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி
சொர்க்க வாசல் திறப்பு விழா
14 • 12 • 2021
கண்ணன் மகிழும் மாதம் மார்கழி மாதம் !
வைகுண்டம் வணங்கும் இனிய மாதம் !
மாதங்களில் மார்கழியானேன் என்பது கண்ணன் மொழி.!
மா தவம் செய்து நடப்போம் மாதவனின் வழி!
விரதமேற்று கண்விழித்து சொர்க்கமதை தரிசிப்பது பிறவிப்பயன். இந்தப் பயணமானது ஒவ்வொரு ஆண்டும் மார்கழித் திங்களில் வரும். இம்மாதத்தில் கண்ணன் பாதம் சரணடைந்து சங்கடங்களைப் போக்கும் காலமாகப் பின்பற்றப்படுகிறது.மோட்சம் தீர்க்கும் ஒரு நாளாக விளங்குகிறது .இவ்விழா 108 - வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது. திருச்சி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோவிலில் பிரசித்திபெற்றதாக விளங்குகிறது.இங்கு ஆண்டு தோறும் தமிழ்ப் பண்ணிசையுடன்" வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.ஸ்ரீரங்கம் ஏகாதசி விழாவானது டிசம்பர் 4 • 12 • 2021 அன்று முதல் பத்து நாட்கள் விழாவானது தொடங்கி 14 •12 • 2021ம் நாள் வைகுண்ட ஏகாதசி விழாவும் , அதைத் தொடர்ந்து ராப்பத்து துவங்கும்.இந்த நாள் அனைத்து பெருமாள் கோவில்களிலும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.வைணவக் கோவில்களில் ஏகாதசி விழாவை ஒட்டி பகல் பத்து , இரவு பத்து என கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழித் திங்களில் வரும் ஏகாதசி , இந்த ஆண்டு கார்த்திகையில் வருகிறது.அனைத்து ஆலயங்களிலும் ஒரே நாளில் ஏகாதசி கொண்டாடுவது வழக்கம் எனினும் இந்த ஆண்டு 19 - ஆண்டுகளுக்கொரு முறை இது போன்ற வேறுபாடு ஸ்ரீரங்கத்துக்கும், பிற கோவில்களுக்கும் வருவதுண்டு.
சொர்க்க வாசல் :
சொர்க்க வாசல் என்பது திருமால் கோவில்களில் மார்கழி மாதத்து வளர்பிறை ஏகாதசி முதல் பத்து நாள் வரை இறைவன் எழுந்தருள உரியதும், இவற்றை வைகுண்ட வாயில் போல கருதிப் பலரும் செல்வதற்கு உரியதும் மற்றக் காலங்களில் திறக்கப் படாமல் அடைத்து வைக்கப்படும் ஒரு தனி வாயில் ஆகும்.சொர்க்கம் என்பது புண்ணியம் செய்தார்க்கு மட்டும் கிடைத்திடும் அரிய வரமாகும். இவற்றைப்பெற சொர்க்க வாசல் வழிபாடு வகை செய்கிறது.
சொர்க்க வாசல் மண்ணுலகம் வந்த கதைகள் :
சொர்க்கவாசல் தோன்றியதற்கு இரண்டு கதைகளைப் புராணங்கள் வழியே கூறப்படுகிறது. அவற்றின் படி இறைவன் மகாவிஷ்ணு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த வேலையில் ,அவரது காதில் இருந்து இரண்டு அசுரர்கள் தோன்றினர்.அவர்கள் மது , கைடபர் என்னும் பெயர்களை உடைய அசுரர்கள். இவர்கள் இருவரும் கொடிய மனம் கொண்ட கொடுமையின் வடிவமாகக் கொண்டவர்கள் . தேவர்களைக் கொடுமை செய்து வதைத்தனர். இந்தக் கொடுமையிலிருந்து மீள தேவருலகம் போராடியது. அசுர கொடுமையை எதிர்கொண்டு தவித்து தத்தளித்து தாங்க தேவர்கள் , விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை அடக்கும் சக்திக் கொண்டவர் விஷ்ணுவே என முடிவு செய்து , அவரிடம் முறையிட்டனர். இவற்றை செவிமடுத்த இறைவன் நாராயணர் மது, கைடபர் என்னும் இரண்டு அசுரர்களுடன் போர் செய்தார். நாராயணரின் சக்தியை எதிர்கொள்ள முடியாத அசுரர்கள் பெருமாளிடமே சரணடைந்தனர். அவ்வாறாக சரணடைந்த அசுரர்கள் இறைவனை வணங்கி " இறைவா... தங்களின் சக்தியால் நாங்கள் உருவானோம் எனவே, நீரே எம்மை காத்து கருணை எனும் அடைக்கலம் தருக என பணிவுடன் யாசித்ததன் விளைவாக திருமாலுடன் வைகுண்டத்திலேயே இருக்கும் வரத்தை அசுர சகோதரர்கள் பெற்றனர்.
அவ்வாறாக நற்பலனை அடைந்த அசுர சகோதரர்கள் தாம் பெற்ற வரத்தை அனைவரும் பெறவேண்டும் என்ற நற்சிந்தனையால் பெருமாளிடம் வேண்டினர்." இவற்றை ஏற்ற எம்பெருமானும் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவேங்க வடக்கு வாசல் வழியாக, மனித வடிவில் ( அர்ச்சாவதாரத்தில்) வெளிவரும் போது , தம்மை தரிசிப்பவர் களுக்கும் , பின் தொடர்பவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள்யாவும் நீங்க , அவர்களுக்கு முக்தி அளித்தார்." இவ்வாறாக அசுரசகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டு , பெருமாளின் பவனி நிகழ்வு இனிதே நடந்தேறுகிறது. ஏகாதசி நன்னாளில் " ஓம் நமோ நாராயணாய " என்று உச்சரித்துத் துதிப்பவர்கள் தமது முன்வினைகள் நீங்கி ஸ்ரீமகாலட்சுமியின் அருளும் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை.
அசுரர்களின் நற் சிந்தனையில் உருவான சொர்க்க வாசல் :
அசுரர்களின் வேண்டுதல் படி அவர்கள் இறந்த பிறகு , மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று , வைகுண்டத்தில் வடக்கு வாசலைத் திறந்த திருமால் , அதன் வழியாக அவர்களை உள்ளே அனுமதித்தார். அங்கே ஆதிசேஷன் மீது அருள் புரியும் " அனந்தனின் திவ்விய மங்கல வடிவைக் கண்டு , அசுரர்கள் இருவரும் ஆனந்தம் அடைந்தனர். இவர்கள் செயலானது யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - என்னும் உயர்ந்த மந்திரத்தின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன. அசுரர்களின் செயல் அகிலத்தில் ஆனந்தத்தை உண்டாக்கியது.தங்களுக்குக் கிடைத்த பெரும்பேறு, உலக மக்களுக்கும் கிட்ட வேண்டும் என்று எண்ணிய அசுரர் இருவரும் " இறைவா! வைகுண்ட ஏகாதசி அன்று உங்களைத் தரிசிக்கும் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும் ,என வேண்டினர். இதை அருள்புரிந்து ஏற்றார் என்பது புராணம் புனையும் நம்பிக்கைகள் ஆகும்.
முரண்பட்டதால் முரனின் முடிந்த கதை :
முரன் என்ற அசுரன் மூன்று உலகையும் துன்பம் பல தந்து வேதனையில் மூழ்கச் செய்து, மகிழ்ந்து திரிந்தான் . இவனது துன்பம் தாங்காத தேவர்கள், தங்களைக் காத்தருளுமாறு விஷ்ணுவை சரணடைந்தனர். தேவர்களின் வேண்டுதலை ஏற்ற திருமால் , முரனை வதம் செய்து முரனின் படைகளை அழித்து , திருந்தவும் ஒரு வாய்ப்பு தரவேண்டி எண்ணி போர்க்களம் விடுத்து, விலகி பத்ரிகாசிரமத்தில் இருந்து வேறு இடமானதொறு குகையில் சென்று உறங்குவது போல சமிக்ஞை செய்தார்.
முரனின் முடிவு :
ஸ்ரீமன் நாராயணனைத் தேடிய முரன், அவரிருந்த குகைக்கு வந்து , இறைவனைக் கண்டு, அவர் உறங்குவதாக எண்ணி, இறைவனைக் கொல்ல வாளை எடுத்தான். அச்சமயம் மகா விஷ்ணுவின் திருமேனியில், உருவான ஆக்ரோஷ தோற்றமாக ஆயுதமேந்திய பெண் , முரனை போருக்கு அழைத்தாள். பெண்தானே என அலட்சியமாக எண்ணி , உம்மைக் கொல்ல ஓர் அம்பே போதும் என்று ,அம்பை எடுக்க முரன் எத்தனித்த போது அந்த பெண் ' ஹும்' என்று ஓர் ஒலி எழுப்பினாள்.அவ் வொலியில் முரன் என்னும் அசுரன் சாம்பலாகிப் போனான்.
ஏகாதசியின் தோற்றம் :
நடந்தவற்றைக் கண்ணுற்ற திருமால் , அறியாதவர் போல கண்விழித்தப் போது , விஷ்ணுவின் திருமேனியில் இருந்து வெளிப்பட்ட சக்தியைப் பாராட்டியதுடன் , ஏகாதசி என்னும் திருப்பெயரைச் சூட்டி மகிழ்ந்த திருமால் , நீ தோன்றிய இந்த நாளில் விரதமிருந்து என்னை வழிபடுவர்களுக்கு அனைத்துச் செல்வங்களையும் அருளி , வாழ்வு முடிவில் வைகுண்டப் பதவியும் அருள்வேன் " என மொழிந்தார்.
ஏகாதசி விரத முறை :
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளை தரிசிக்க
அடியார்கள், ஏகாதசி முழுவதும் விரதம் இருப்பார்கள்.ஏகாதசி பகலும் , இரவும் பெருமாள் பாசுரங்களைப் பாடி , தூங்காமல் கண்விழித்து , வைகுண்ட ஏகாதசி நாளில் அதிகாலையில் பரமபத வாசல் வழியாக வரும் பெருமாளை தரிசித்து , சொர்க்க வாசல் வழியாக நுழைந்து தரிசிக்கும் போது மோட்சம் கிட்டும் என்பது காலம்காலமாக வெற்றிக்கண்ட நம்பிக்கை ஆகும். நலம் தரும் துவாதசி பாரணை : ( 21 - வகை காய்கறிகள் கொண்ட உணவு. ஏகாதசி விரதமாக, இரண்டு நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் , துவாதசி தினத்தன்று பாரணை என்ற உணவாகிய 21 காய்கறிகளைச் சமைத்து சாப்பிட வேண்டும் என்பார்கள். ஏகாதசி விரதம் உணவு உண்ணாமலும் , உறங்காமலும் எடுக்கும் விரதமாதலால் வயிற்றுக்கு நலம் தரும் உணவுகளை இதமான முறையில் சாப்பிட வேண்டிய அவசியத்தை முன்னர் உரைத்தவற்றை கடைப்பிடித்தல் நலம்.அவற்றில் சிலவாக அகத்திக் கீரைப் -பொரியல், நெல்லிக்காய் -துவையல்,சுண்டைக்காய்- வறுவல் என காலத்திற்கேற்ற உணவுகளை வகைப்படுத்தி உண்டு பக்தியும் , சித்தியும் கண்டு நலம் காத்தனர்.மண்ணுலகில் மாமங்கமாய் வாழவும், அனந்த கிருஷ்ணரின் அருளைப் பெற்று ஆனந்தமாக இருக்கவும் வைணவ வழியைப்போற்றுவோம்.!
ஸ்ரீமன்நாராயணன் அடியைப்போற்றி வணங்கி நலம்பெறுவோம்.!
" ஓம் நமோ நாராயணாய "
0 Comments