TNPSC - போட்டித்தேர்வில் வெற்றி - பகுதி இ - தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் - மரபுக்கவிதை - உவமைக்கவிஞர்.சுரதா / TNPSC - TAMIL - MARAPHUK KAVITHAI - UVAMAIKKAVIGNAR SURATHA

 

TNPSC - போட்டித் தேர்வில் வெற்றி 

பொதுத்தமிழ் - பகுதி - இ . 2

தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

மரபுக்கவிதை 

உவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினம்.

                             23 • 11 • 2021

காலந்தோறும் தமிழன்னையை  அணிசெய்ய அவதரித்த அரும் பெரும் மைந்தர்கள் வரிசையில் வனப்பு சேர்ப்பவர் இராசகோபாலன்  என்ற இயற்பெயர் கொண்ட சுரதா அவர்கள். கவிஞர் ,எழுத்தாளர்  என மிளிர்கிறார்.பாவேந்தர் பாரதிதாசனிடம் தான் கொண்ட பற்றினைக் கொண்டாட, பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதனைக் கொண்டு சுப்புரத்தின தாசன் என தம் பெயராக அமைத்துக் கொண்டார்.இந்தப் பெயரின் சுருக்கமே சுரதா என அழைக்கப்பட்டது. 

சுரதா என்றப் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள்   எழுதினார். செய்யுளின் மரபு மாறாமல் எழுதி வந்த சுரதா  அவர்கள் உவமையைக் பயன்படுத்துவதில் தன்னிகரற்ற தனிப் புகழோடு விளங்கியதால் ' உவமைக் கவிஞர் ' என சிறப்பிக்கப் படுகிறார்.

இராசகோபாலன் என்ற சுரதா அவர்கள் தஞ்சை மாவட்டம் பழையனூர் என்னும் ஊரில் 1921 - ஆம் ஆண்டு நவம்பர் - 23- ம் நாள் பிறந்தார்.பெற்றோர் திருவேங்கடம் - செண்பகம் அம்மையார் ஆவார்.பள்ளி இறுதி வகுப்புவரை படித்துப் பின்னர் சீர்காழி அருணாச்சல தேசிகர் என்பவரிடம்  தமிழ் இலக்கணத்தைக் கற்றுணர்ந்தார். 

மகாகவியின் மகத்தான வழியில் , தான் தொடர்ந்த கனகசுப்புரத்தினம் , பாரதியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பாரதிதாசன் ஆனார். பாரதிதாசனின் எண்ணத்தில் மின்னலென உருவான புரட்சிப் பாதையில் தன்னை பதித்திக் கொண்ட இராசகோபாலன் , சுப்புரத்தினதாசன்  என ஆனார். அதாவது சுரதா எனும் சுடர் படர்ந்து தமிழுக்கு மேலும் அணிசெய்தது.

உள்ளம் உவகை கொள்ளும் விதத்தில் ,உவமைகளைக் கையாண்டதால் இவர் " உவமைக் கவிஞர் " என உச்சம் கண்ட உவமையாளராகக் கொண்டாடப் பட்டார்.


கவிதைக் கருவூலத்தில் ஒரு சகலகலா வல்லவராக!


     1947 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதுக்கோட்டையில் பூத்த பொன்னி என்னும் இதழில் சுரதாவின் ' சொல்லடா ' என்னும் கவிதை மலர்ந்தது. இக்கவிதையில் லயித்து மகிழ்ந்த பாவேந்தர், சுரதா அவர்களைத் தமது பரம்பரைக் கவிஞராக அறிவித்து அங்கீகாரம் கொடுத்தார். தந்தைப் பெரியார், கலைவாணர் ஆகியோரின் முன்னிலையில் பாவேந்தரின்" புரட்சிக் கவி " நாடகம் அரங்கேற்றப் பட்டது. அந்த நாடகத்தி ல் அமைச்சர் வேடமணிந்து நடித்து அனைவரின் பாராட்டையு ம் பெற்று பெருமைக்கு அருமை சேர்த்தவர் சுரதா.மேலும் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் அரசவைக் கவிஞராக இருந்த போது, அவரின்  அருமை உதவியாளராக விளங்கினார் சுரதா.புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ' தலைவன் ' என்ற இதழின் ஆசிரியர் நாராயணன்  அவர்களிடம் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதினார்.மேலும் கவிஞர் திருலோகசீதாராமி ன் ' சிவாஜி ' இதழில்  தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்தன. திருச்சி வானொலியில் இவரது கவிதைகள் பல ஒலிபரப்பாகி ஒளிர்ந்தன. 

கலையுணர்வின்  கருவூலமாகத் திகழ்ந்த சுரதா அவர்களைக் கண்ணுற்ற  திரு.கிருட்டிணமூர்த்தி என்பவர் திரையுலகிற்கு  அறிமுகப் படுத்த விழைந்ததன் விளைவு , 1944 - ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதலாக   உரையாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றார்.எனினும் திரைத் துறையில் குறைந்த அளவு பாடல்களையே எழுதியுள்ளார்.

ஆயினும்  அவை எக்காலத்துக்கும்  பொருந்தும்  வைரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.அவற்றில் முத்தாக அன்பி ன் ஆழத்தை அளவெடுக்கும் போது " அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு " , மற்றும் ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா "என வாழ்வின் நிலையாமையை வகுத்து தெளிவுபடுத்துகிறார். 


எழுத்தாளராக சுரதா :


            எழுத்துலகில் தனிப்பெரும் களஞ்சியமாக விளங்கிய சுரதாஅவர்கள் தன் சிந்தனையில் விளைந்த காவியத்தை காட்சிப்படுத்துகிறார். 1946 - ம் ஆண்டு  வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் சுரதா அவர்களின் முதல் நூலான " சாவின் முத்தம்" என்ற நூலை வெளியிட்டார்.இதனைத் தொடர்ந்து 1956 - ம் ஆண்டு " பட்டத்தரசி " என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 -ம் ஆண்டு கலைஞரின் முரசொலி இதழில் கவிதைகளைத் தொடர்ந்து எழுதினார்.


கவிதை வளர்ச்சியில் சுரதா :


கவிதை வளர்ச்சிக்கு தம்பெரும் பங்கை  நல்கி சிறப்பித்துள்ளார். 1955 - ம் ஆண்டு காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார்.இதனைத் தொடர்ந்து தமது கவிதைகளை 1958 -ம் ஆண்டு இலக்கியம் , 1963 - ஆண்டு " ஊர்வலம் " 1964 - ம் ஆண்டு " விண்மீன் " மற்றும் 1988- ம் ஆண்டு " சுரதா " என கவிதையின் வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார். 2971 - ம் ஆண்டு "ஆனந்த விகடன் " இதழில் சுரதா திரைப்பட  நடிகைகளின் அகவாழ்க்கையைப்  பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்பு இவை தொகுக்கப் பட்டு " சுவரும் சுண்ணாம்பும் "  என்ற பெயரில் நூலாக வடிவம் பெற்று சிறந்து விளங்கியது.

நூலகத்தை  உருவாக்கிய  நூலகம் :

பாவேந்தரின்  அகம் மகிழ் சிறந்த மாணவராகத் திகழ்ந்த  சுரதா அவர்கள்  பாரதிதாசனின் கவிதைகளைத் தொகுத்து ஒரே தொகுப்பாக வெளியிடும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். இவற்றிற்கு   திருவாசகன், கல்லாடன் என்ற பெயரினை வெளியிட்டு சிறப்புச் செய்தார்.மேலும் ஆர்வத்தால் தமது இல்லத்தில் அரிய நூல்கள் பல கொண்ட நூலகத்தை உருவாக்கினார். இது பல கற்ற நூலகமே மற்றொரு நூலகத்தை வைத்திருப்பது போன்ற சிறப்பை உணர்த்துகிறது.

மேலும் தமிழ் மொழியின் மீது பற்று, ஆர்வம் மற்றும் கவிதை புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரைக் கொண்டு சில அதிசயக் கவியரங்கங்களை நடத்தினார். தொடர்ந்து படகு கவியரங்கம்,கப்பல் கவியர்கம், விமானக் கவியரங்கம் முதலிய கவியரங்கங்களை  இயக்கி  மொழி வளர்த்தார்.


சுரதாவின்  படைப்புகள்:


உவமைக் கவிஞர் அவர்கள் தமது கவிதைகள் , சிறு கதை , சிறு காவியம்  பாடல்கள் , திரையிசைப் பாடல் கள் மூலம் தமிழ் வளர பாடுபட்ட  சிறந்த  படைப்புகளைத் தந்துள்ளார். அவற்றிலிருந்து சில...


* 1986 - ம் ஆண்டு வெளிவந்த" தேன் மழை " என்ற கவிதைத் தொகுப்பு. 

* 1976 - ம் ஆண்டு வெளியிடப்பட்ட  " துறைமுகம் " என்ற பாடல் தொகுப்பு.

* சிரிப்பின் நிழல்

* சிக்கனம்

* 1974 - ம் ஆண்டு எழுதப்பட்ட பாடல் தொகுப்பு - சுவரும் சுண்ணாம்பும்.

* 1983 - ம் ஆண்டு எழுதப்பட்ட அமுதும் தேனும்.

* 1991- ம் ஆண்டு பாரதிதாசன் பரம்பரை.

* நெய்தல் நீர்.

* கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்.

* சாவின் முத்தம்.

* சுரதாவின் கவிதைகள்.

போன்றவை சுரதா அவர்களின் படைப்புகளில் சிலவாகும் .

உவமைச்  சாரல் :

உவமைக் கவிஞர்  உள்ளம் உவகைக் கொள்ளும் வண்ணம் , தன்  எண்ணங்களை  உவமைகளால் தோய்த்து வாரி வழங்குகிறார். வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம்  இயன்றவரை அள்ளி அருளினார் அழகு மொழியில். அவ்வாறு  இனிமைப் உடைய  சுவைகளில்  அங்கீகாரம் பெற்ற  சான்றுகளாகச்  சில....

கவிஞர்  கையாளும் உவமைகள் அவரது உள்ளத்தையும் , படைப்பின் ஆழத்தையும் காட்ட வல்லது.தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செந்தமிழில் பெயரிடுதல் வேண்டும் , என்னும் கருத்தை வலியுறுத்த  கவிஞர் கையாண்ட  பண்பாடு மிக்க  உவமைகள் ...

" தாய் மொழியை ஒதுக்கி வைத்துப் பிற நாட்டவரின் தழுவல் மொழிப்பெயரிட்டுக் கொள்ள நினைப்பது  தாய்ப்பாலை  வேண்டாது  நாய்ப்பால்  உண்ணச்  சம்மதிக்கும் தன்மைப்  போன்றது என்றார்.தாய் மொழியை ஒதுக்கி பிறமொழியின் மீது நாட்டம் கொள்வது போன்றது என்ற சிந்தனைச்  சாட்டையடியை உவமையாக்கி தமிழ்ப் பயிரைப் பாதுகாக்கின்றார்.

சான்று - 2


" ழ " கரத்தை சிறப்பிக்கும் இடத்தில் , இவ்வாறு கவிதையாக்குகிறார். " எப்போதும் இனிப்பவளே ! ' ழ 'கரம்  என்னும் எழுத்தைப் போல் சிறந்தவளே!", தனித்தியங்கும் செந்தமிழ் போன்றே தானும் சிறந்தவள்" ஆய்த எழுத்தின் அமைப்பே அடுப்பாம்.என்பன போன்ற உவமைகள்  சிந்தனையைத்  தூண்டும்  புதிய வனப்புக் கொண்டவை.


தேன் மழை" என்னும் கவிதைத் தொகுப்பில்  வாசிப்போர்  உள்ளம் கொள்ளைக்  கொள்ளும் வகையில் உவமையால் ஊர்வலம் நடத்துகிறார் கவிஞர்.ஆண்மையின் அடையாளம் மீசை , அந்த  மீசைக்கு  உயர்ந்திட  பாண்டிய மன்னர்களின் மீசையைக் குறித்த ஒரு உவமை , வியப்பும்  வித்தியாசமும்  மிக்கதாக விளங்குகிறது.


" படுத்திருக்கும்  வினாக்குறி போல் மீசை வைத்த பாண்டியர்கள் வளர்த்த மொழி "  என்பதாகும். படுத்திருக்கும் வினாக் குறி போல் என்பது பாண்டிய மன்னர்களின் வீரத்தைப் போற்றும் விவேகம் நிறைந்த கற்பனை வளம் ஊற்றெடுக்கும்  பொங்கருவியாக புகழ் சேர்க்கின்றன. 


மரபுக் கவிஞரான சுரதா அவர்கள் 

எளிய , இனிய, புதுமையான உவமைகளைக் கொண்டு புகழ் பெற்றார். மாநிறத்தைக்  " கருப்பின் இளமை " என்றும் பல்லியை " போலி உடும்பு " என்றும் , நீர்க் குமிழிகளை " நரைத்த நுரையின் முட்டை " என்றும் , அழுகையைக் " கண்மீனின் பிரசவம் " என்றும் விண்ணுக்கு மேலாடை " பருவ மழை மேகம் " என்றும் , வெண்ணிலாவைச் " சலவை நிலா " என்றும் , வீணைக்கு மேலாடை " நரம்புகளின் கூட்டம்" என்றும் பத்துக்கு மேலாடை " பதினொன்றே என்ற உவமை விளக்கத்தின் மூலம் மகிழ்ச்சியே அடிப்படையாக அமைகின்றது.  இவ்வாறாக  இன்பத்தில் சிந்தனையைத் தூண்டும் உவமைக் கவிஞரின் உன்னத வரிகள் தமிழுலகம் உள்ளவரை தனித்து விளங்கும் என்பது திண்ணம். மரபு வழி உவமைக் கவிஞரின் நினைவைப் போற்றி வணங்குவதில் பெருமைக் கொள்வோம்.!

Post a Comment

0 Comments