தித்திக்கும் தீபாவளி - யார் இந்த நரகாசுரன் ? - நகைச்சுவை மாமன்னர் இளசை சுந்தரம் அவர்களின் சிறப்புக் கட்டுரை / DIWALI - YAR INTHA NARAKASURAN ?

 

        நகைச்சுவை மாமன்னர் 

முனைவர் இளசை சுந்தரம் வழங்கும்

தித்திக்கும் தீபாவளி - சிறப்புக் கட்டுரை



*****************  *********   *************

      தீபாவளி என்பது இந்தியா மற்றும் சில வெளிநாடுகளிலும் கொண்டாடப்படுகிற முக்கியமான பண்டிகை. அதற்கான புராணக்  கதைகளைப் பார்ப்போம்.

நரகாசுரன்

                            முன்னொரு காலத்தில் இரண்யாட்சகன் என்ற அரசன்   இருந்தான். அவன் பூமாதேவியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டான். திருமால், வராக அவதாரம் எடுத்து அசுரனை அழித்து பூமாதேவியை மீட்டு வந்தார். அப்போது திருமாலுக்கும், பூமாதேவிக்கும் ஏற்பட்ட உறவால் பிறந்தவன் தான் நரகாசுரன்.

            தன் பிள்ளைக்கு யாராலும் மரணம் வராத வரம் வேண்டும் என்று திருமாலிடம் கேட்டாள் பூமாதேவி. சாகா வரம் என்று நேரடியாகக் கொடுக்க இயலாது. ஆனால் தாய் தவிர வேறு யாராலும் மரணம் ஏற்படாது என்று வரம் தருகிறேன். நீ விரும்பும் போது உன்னாலன்றி அவனுக்கு மரணம் வராது. மகனைக் கொல்ல தாய் விரும்புவாளா? ஒரு வகையில் இது சாகாவரம் தானே? என்றார் திருமால். பூமாதேவியும் அதை ஏற்றுக் கொண்டாள்.

கொடுமை

                       நரகாசுரன் பலம் பெற்றவன். தனக்கென்று ஒரு நாட்டை   உருவாக்கினான். கோட்டைக்  கொத்தளங்களை அமைத்தான். பிற நாடுகளை ஆக்கிரமித்தான். கொடுமைகள் பல செய்தான். வானத்துத் தேவர்களைத் துன்புறுத்தினான். மற்றவர்களின் துயரத்தில் இன்பம் கண்டான். நாளுக்கு நாள் அவனது கொடுமைகள் உச்சம் அடைந்தன. 

            தேவர்கள்,கண்ணபிரானிடம் போய் முறையிட்டார்கள். எங்களது உடைமைகளை அபகரிப்பது   மட்டுமல்லாமல் எங்களைச் சித்திரவதையும் செய்கிறான் நரகாசுரன்; அவனை  அழிக்க வேண்டும்; என்று வேண்டினார்கள். நரகாசுரனின் கொடுமைகளை  ஏற்கெனவே அறிந்திருந்த கிருஷ்ண பரமாத்மா அவனை அழிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கினார்.

சத்தியபாமா

                 இந்த அவதாரத்தில் பூமாதேவி, சத்தியபாமாவாகப் பிறந்து கிருஷ்ணனுக்கு மனைவியாகி இருந்தாள். அவளும் வரவேண்டும் என்று அவர் விரும்பினார். ஏனென்றால் அவளால் தான் நரகாசுரனுக்கு மரணம் ஏற்பட வேண்டும். அதற்கு போரில் அவளையும் சம்பந்தப்படுத்த
வேண்டும். அதனால் தனக்குத் தேரோட்டியாக அழைத்துக்
கொண்டார். 

              போருக்கு வந்திருந்த கிருஷ்ண பரமாத்மாவை நரகாசுரனின் வீரர்கள் எதிர்த்தனர். கிருஷ்ணர் அவர்களை அழித்தார். நரகாசுரனின் மகன்கள் போருக்கு வந்தார்கள். அவர்களையும் அழித்தார் கிருஷ்ணர். இப்போது
நரகாசுரனே நேரடியாகப் போருக்கு வந்தான். உக்கிரமான போர் நடந்தது.

கிருஷ்ணர் வரம்

             அப்போது கிருஷ்ணர் ஒரு நாடகம் நடத்தினார். நரகாசுரன் விட்ட ஓர் அம்பு தன் மீது படும்படி செய்தார். அதனால் மயக்கம் அடைந்தது போல நடித்தார். சத்தியபாமா துடிதுடித்துப் போனாள். வில்லை எடுத்து நாணேற்றினாள்.
நரகாசுரன் மார்பு மீது குறிவைத்து அதை எய்தாள். அவன் அம்மா என்று அலறியபடி சாய்ந்தான். அந்த அலறல் கேட்டு
எழுவது போல் கிருஷ்ணர் கண்  விழித்தார்.

   "நரகாசுரன் அம்மா என்று அலறியதற்கு ஏதேனும் காரணம் உண்டா?" என்று சத்தியபாமா கேட்டாள். “உண்டு;
முந்தைய அவதாரத்தில் நீ பூமாதேவியாக இருந்தாய். அப்போது நமக்குப் பிறந்தவன்தான் இவன். தாயாலன்றி வேறு யாராலும் இவனுக்கு மரணமில்லை என வரம் தந்தேன்.
ஆனால், இவனது அட்டூழியங்கள் அதிகமாகி விட்டன. எனவே, உன்னை வைத்து அவனைக் கொல்ல வைத்தேன்" என்று கிருஷ்ண பரமாத்மா கூறியதும், சத்தியபாமாவுக்குப் பிள்ளைப்
பாசம் பெருகியது.

     நரகாசுரன், மரணமடையும் தருவாயில் இருந்தான். தான் இறந்த நாளை மக்கள் குதூகலமாகக் கொண்டாட வேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும் என்று இருவரையும் பிரார்த்தித்தான். கிருஷ்ணர், அப்படியே ஆகட்டும் என்று வரம் அளித்தார்.

தீபாவளி

             ஐப்பசி மாதம் சதுர்த்தசி திதியில் நரகாசுரன் உயிர் துறந்தான். அந்த நாளைத்தான் நாம் தீபாவளியாகக்
கொண்டாடுகிறோம். வேறு சிலர் கேதார கவுரி விரதம் என்று அம்பிகை நோன்பாக்கிக் கொண்டாடுவார்கள். சமணர்கள் தங்கள் தீர்த்தங்கரர் முக்தியடைந்த நாள் என்று
கொண்டாடுவர். 

              முச்சுடர், முத்தி என்று வேதம் சொல்கிறது. சூரியன், சந்திரன், நெருப்புச் சுடர் இந்த மூன்றும் தான் அவை. இருட்டை விரட்டுவது இவற்றின் வேலை என்றாலும், அக்கினி மனித முயற்சியால் ஒளிர்வது. எனவே அதற்கு மதிப்பு அதிகம். இத்தகைய நெருப்பு மலர்களை வரிசை வரிசையாக ஏற்றிக்
கொண்டாடும் பெருவிழாவே தீபாவளி.

              ஆவளி என்றால் வரிசை என்று பொருள். ஸ்வரங்களை   வரிசைப்படுத்தினால் ஸ்வராவளி ஆண்டவனை தரிசிக்கும் போது நாமங்களை வரிசைப்படுத்தினால் நாமாவளி, அது போல தீபங்களை வரிசைப்படுத்தினால் தீபாவளி.

                      இதன் விளைவுதான் வண்ண வண்ண வெடிகளை வெடித்து மகிழ்வது. வாண வேடிக்கை நடத்துவது. மத்தாப்பு
கொளுத்துவது எல்லாம்.

வாழ்வியல்

             இருட்டு, இருட்டு என்று புலம்பிக் கொண்டு இருப்பதை விட ஒளியேற்றி இருளை விரட்டுவது புத்திசாலித்தனம்.
தீபமேற்றி புற இருளைப் போக்குவது போல் ஞான தீபமேற்றி அக இருளைப் போக்க வேண்டும். நரகாசுரன் நமக்குள்ளே இருக்கிறான். அறியாமை என்பது ஒரு நரகாசுரன்தான்.
அறிவுச்சுடர் ஏற்றி அவனை அழிக்க வேண்டும். அறியாமை என்பது ஒன்றைப் பிறிதொன்றாக நினைத்து மயங்குவது, இந்த அறியாமை பலரிடமும் உண்டு.

        சோம்பேறித்தனம் என்ற நரகாசுரனும் நமக்குள் இருக்கிறான். சுறுசுறுப்பு என்ற குணத்தால் அவனை அழிக்க
வேண்டும். அதனால்தான் அதிகாலையில் குளித்து, புத்தாடை
அணிந்து, பலகாரங்கள் செய்து சுவைத்து உற்றாரோடும், மற்றாரோடும் உறவாடி மகிழ்வது. அன்றைக்கு நீராடும் நீரில் கங்கையின் சாயல் இருப்பதாகக் கருதுவது ஐதீகம். அதனால்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா?" என்று கேட்பார்கள்.
அன்றைய சுறுசுறுப்பு அன்றோடு
விடக்கூடாது. நாளெல்லாம், வாழ்வெல்லாம் தொடர வேண்டும்.

                கோபம், பொறாமை, பிடிவாதம், ஆணவம் இப்படி நரகாசுரர்கள் நமக்குள் ஒளிந்திருக்கிறார்கள். அவைகளையும் அழிக்கும் நாளாக, அந்த வெற்றியைக்
கொண்டாடி மகிழும் நாளாக தீப விழாவாம் தீபாவளியைக்
கொண்டாடுவோம்.

***************    ***************   ************

Post a Comment

0 Comments