ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் - 3 , உள்ளத்தின் சீர்
நெடுவினா
1 ) ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.
பண்பாட்டுத் தொன்மையும் இலக்கிய வளமையும் வாய்ந்தது தமிழர் வரலாறு. இயற்கையைச் சார்ந்தும்,பிற உயிர்களோடு இணைந்தும் வாழ்ந்தனர் சங்ககாலத் தமிழர். இதற்குச் சங்க இலக்கியங்களில் ஏராளமானசான்றுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று, ஏறு தழுவுதல் நிகழ்வாகும்.
ஏறுதழுவுதல் என்பது, சீறிப்பாயும் முரட்டுக் காளையைத் தழுவி அடக்குதல் ஆகும். ஏறுகளின் கொம்புகளைக் கூர்மையாய்ச் சீவிப் பரந்தவெளியில் விடுவர். இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏறுகளைத் தழுவுவர்.
முல்லைநில மக்களின் பண்பாட்டு அடையாளமாக ஏறுதழுவுதல் திகழ்கிறது. ஏறுதழுவுவதற்குமுன் தெய்வங்களை வழிபடுவர். திமில் பெருத்த காளைகள், நிலத்தின் நீரை வெளிக்கொண்டு வருவதுபோல் முட்டின. சில தம்முள் முரண்பட்டு ஒன்றையொன்று எதிர்த்துப் போரிட்டன.
மிடுக்குடன் போர்க்களம் செல்லும் மருதநில வீரர்கள் போல், இந்தக் காளைகள் இருந்தன எனக் கலித்தொகை கூறுகிறது. ஏறுகோள் குறித்துச் சிலப்பதிகாரமும், புறப்பொருள் வெண்பாமாலையும் குறிப்பிடுகின்றன.
கண்ணுடையம்மன் பள்ளும், மாடு தழுவுதல் நிகழ்வைப் பதிவு செய்துள்ளது. ஏறு தழுவியோர் குறித்த நடுகற்கள், தமிழகமெங்கும் தொல்சான்றுகளாகக் காணப்படுகின்றன. தமிழரின் வீரத்தையும் நாகரிகத்தையும் உணர்த்தும் வீர விளையாட்டாகவும், அறச்செயலாகவும் ஏறுதழுவுதல் போற்றப்படுகிறது. இன்றும் ஏறுதழுவுதல், தமிழர்களின் அடையாளமாக நிறுவப் பட்டிருக்கிறது.
****************** ********* *************
0 Comments