பத்தாம் வகுப்பு - தமிழ்
முன்னுரிமைப் பாடம்
இயல் - 6 , கவிதைப்பேழை
கம்பராமாயணம்
அயோத்தியா காண்டம் - கங்கை காண் படலம் ,
யுத்த காண்டம் - கும்பகருணன் வதைப்படலம் .
*************** ************** ***********
வணக்கம் அன்பு நண்பர்களே ! இன்று நாம் பார்க்க உள்ள பாடம் கலை , அழகியல் , புதுமைகள் என்னும் பெருந்தலைப்பின் கீழ் அமைந்துள்ள ' கம்பராமாயணம் ' ஆகும்.
முதலில் பாடலிற்கான பொருளை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தில் காண்போம்.
அயோத்தியா காண்டம்- கங்கை காண் படலம்
(கவிதைகள் மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ! அதில் ஒன்று சந்த இன்பம். பொருள் புரியாவிடினும் சந்த இன்பம் மகிழ்ச்சியூட்டுகிறது. 'ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா'
என்று பாரதி சொல்வதை இதில் உணரமுடியும்.)
ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ?
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
"ஏழைமை வேடன் இறந்திலன்" என்று எனை ஏசாரோ? (2317)
பாடலின் பொருள்
ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றைக் கடந்து செல்வார்களா? யானைகள் கொண்ட சேனையைக்கண்டு, புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ நான்! தோழமை என்று இராமர் சொன்ன சொல், ஒப்பற்ற சொல் அல்லவா? தோழமையை எண்ணாமல் இவர்களைக் கடந்து போகவிட்டால் அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என உலகத்தார் என்னைப்பழி சொல்ல மாட்டார்களா?
*************** *********** ************
யுத்த காண்டம் - கும்பகருணன் வதைப் படலம்
(உலக்கையால் மாறிமாறி இடிக்கும் ஒத்த ஓசையில் அமைந்த சந்தம், இடிக்கும் காட்சியைக் கண்முன் எழுப்புகிறது.)
'உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெலாம்
இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்'! ( 7316)
பாடலின் பொருள்
உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர்
கையில் இனிப் படுத்து உறங்குவாயாக!
*************** ********** ***************
0 Comments