பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 , இலக்கணம் - பொது - பொருள்கோள் / 10th TAMIL - EYAL 5 - KARKANDU - POTHU - PORULKOL

 


பத்தாம் வகுப்பு - தமிழ் 

முன்னுரிமைப் பாடம் 

இயல் - 5 , கற்கண்டு 

பொருள்கோள்

***************   **************   ***********

வணக்கம் அன்பு நண்பர்களே ! இன்று நாம் பார்க்க உள்ள பாடம் கல்வி என்னும் பெருந்தலைப்பின் கீழ் அமைந்துள்ள ' பொருள்கோள் '  ஆகும்.

முதலில் பாடலிற்கான பொருளை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தில் காண்போம்.




பொருள்கோள்

     செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் பொருள்கோள்' என்று பெயர். பொருள்கோள் எட்டு வகைப்படும்.

           அவை ஆற்றுநீர்ப் பொருள்கோள், மொழிமாற்றுப் பொருள்கோள், நிரல்நிறைப் பொருள்கோள், விற்பூட்டுப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், அளைமறிபாப்புப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள், அடிமறிமாற்றுப் பொருள்கோள் ஆகியன. இவற்றுள் ஆற்றுநீர்ப் பொருள்கோள், நிரல் நிறைப் பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள் ஆகியவற்றை அறிந்து கொள்வோம்.

1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்

எ.கா. 'சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்

மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்

செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே'.

                                   -  சீவகசிந்தாமணி

     நெற்பயிர், கருவுற்ற பச்சைப் பாம்பின் வடிவம்போல் கருக்கொண்டு, பின்பு கதிர்விட்டு, செல்வம் சேர்ந்தவுடன் பண்பற்றமக்கள் பணிவின்றித் தலை நிமிர்ந்து நிற்பதுபோல் குத்திட்டு நின்று, முடிவில் கதிர் முற்றியவுடன் கற்றவர்கள் வணங்குதல் போல் வளைந்து காய்த்தன.

              ' நெல்' என்னும் எழுவாய் அதன் தொழில்களான இருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என்னும்   வினையெச்சங்களைப் பெற்றுக் 'காய்த்தவே' என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்தது.

    பாடலின் தொடக்கம்முதல் முடிவுவரை ஆற்றுநீரின் போக்கைப்போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்ததால் இது 'ஆற்றுநீர்ப் பொருள்கோள்' ஆகும்.

'மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்

அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப் புனலே.' -நன்னூல்: 412

2. நிரல்நிறைப் பொருள்கோள்

         ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக) அமைந்து வருவது ' நிரல்நிறைப் பொருள்கோள்' ஆகும்.

இது முறை நிரல்நிறைப் பொருள்கோள், எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் என   இருவகைப்படும்.

எ.கா.

(அ) முறை நிரல்நிறைப் பொருள்கோள்

             செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் 'முறை நிரல்நிறைப் பொருள்கோள்' ஆகும்.

எ.கா.

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது'. - குறள்: 45

           இக்குறளில் பண்பு பயன் என்ற இரு சொற்களை வரிசைப்படுத்தி, அவற்றிற்குரிய விளைவுகளாக அன்பு, அறன் என்று வரிசைப்படுத்தி உள்ளார். அவற்றை இல்வாழ்க்கையின் பண்பு, அன்பு என்றும் அதன் பயன், அறன் என்றும் பொருள்கொள்ள வேண்டும். எனவே, அன்புக்குப் பண்பும் அறத்துக்குப் பயனும் பயனிலைகளாக - நிரல்நிறையாக - நிறுத்திப் பொருள்கொள்வதால், இப்பாடல் 'முறை நிரல்நிறைப் பொருள்கோள்' எனப்படும்.


(ஆ) எதிர் நிரல்நிறைப் பொருள் கோள்

                  செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக்
கொண்டு பொருள் கொள்ளுதல் 'எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்' ஆகும்.

எ.கா. 

'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.' - குறள்: 410

       இக்குறளில் முதல் அடியில் விலங்கு, மக்கள் என்று எழுவாய்களை வரிசைப்படுத்திவிட்டு, அடுத்த அடியில் பயனிலைகளாகக் கற்றார், கல்லாதார் (ஏனையவர்) என வரிசைப்  படுத்தியுள்ளார். அவற்றைக் கற்றார் மக்கள் என்றும், கல்லாத ஏனையவர் விலங்குகள் என்றும் எதிர் எதிராகக்
கொண்டு பொருள்கொள்ள வேண்டும். எனவே, இக்குறள் 'எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்'
ஆகும். - நன்னூல்: 414.

3. கொண்டு கூட்டுப் பொருள்கோள்

                   ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு
ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாகும்.

எ.கா.
ஆலத்து மேல குவளை குளத்துள
வாலின் நெடிய குரங்கு.

                   - மயிலைநாதர் உரை

         மேற்கண்ட பாடலில் ஆலத்து மேல் குவளை என்றும் குளத்தில் வாலின் நெடிய குரங்கு என்றும் பொருள் கொண்டால் பொருத்தமற்றதாகிவிடும். இதில் ஆலத்து மேல குரங்கு, குளத்துள குவளை  என்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் கொண்டு பொருள்கோள் அமைந்திருப்பதால் இது கொண்டு கூட்டுப் பொருள்கோள் எனப்படும்.

யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை
ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே
 
-நன்னூல்: 417

****************   ****************   *********

வாழ்த்துகள் நண்பர்களே !

6 முதல் 12 ஆம் வகுப்பு  வரையிலான தமிழ்ப்பாடம் மற்றும் TNPSC , TRB , NEET போட்டித் தேர்வுகளுக்கான மெட்டீரியல் மற்றும் தினமும் நடைபெறும் ஆன்லைன் தேர்வு இணைப்பு , வினா விடைகள்  தேவையெனில் 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு தங்களது , பெயர் , படிப்பு , மாவட்டம் அனுப்பவும். உங்களைத் தேடி பாடங்கள் வரும். வெற்றி நமக்கே !

பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************   **************  *********

Post a Comment

0 Comments