ஏழாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 5 மரபுச் சொற்கள் - வினா & விடை / 7th TAMIL - ACTIVITY 5 - QUESTION & ANSWER

 

ஏழாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 5

வினாக்களும் விடைகளும்ச

5 .பல்வேறு வகையான மரபுச் சொற்களை அறிந்து பயன்படுத்துதல்****************    **********   *************

கற்றல் விளைவு:

         மொழியின் இலக்கணக் கூறுகளைப் புரிந்துகொண்டு அவற்றைத்தம் எழுத்துகளில் கவனமாகப் பயன்படுத்துதல்

கற்பித்தல் செயல்பாடு :

அறிமுகம் - விலங்குகள், பறவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக   ஒலியெழுப்பும். அவ்வொலிகளைக் குறிப்பிடுவதற்கு ஒவ்வொரு தனிச்சொல் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

விலங்குகள் மற்றும் பறவைகள் ஒலி எழுப்பக்கூடிய விதத்தை ஒலி மரபுச்சொற்கள் எனக் கூறுவோம்.

விளக்கம்:

நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ அப்பொருளை அவ்வாறு வழங்குவது "மரபு" ஆகும். இதேபோன்று உயிரினங்களின் இருப்பிட மரபுச்சொற்கள், வினை மரபுச்சொற்கள், தாவரங்களின் இளமைப் பெயர் மற்றும் தாவரங்களின் உறுப்புப்பெயர்கள் ஆகியவற்றை அறிவோம்.

எடுத்துக்காட்டு:

ஒலிமரபு - விலங்கு

நாய் குரைக்கும்

சிங்கம் முழங்கும்

புலி உறுமும்

நரி ஊளையிடும்

யானை பிளிறும்

குதிரை கனைக்கும்

கழுதை கத்தும்

எலி கீச்சிடும்

ஒலிமரபு

காகம் கரையும்

மயில் அகவும்

குயில் கூவும்

புறா குனுகும்

ஆந்தை அலறும்

கோழி கொக்கரிக்கும்

சேவல் கூவும்

பறவை இருப்பிட மரபு

எலி வளை
குதிரைக் கொட்டில்
சிலந்தி வலை
குருவிக் கூடு
மாட்டுத் தொழுவம்
கரையான் புற்று
ஆட்டுப் பட்டி
யானைக்கூடம்
நண்டு வளை
பாம்புப்புற்று

வினைமரபு
நீர் குடித்தான்
மாத்திரை விழுங்கினாள்
முறுக்குத் தின்றார்
பால் பருகினார்
சோறு உண்டாள்
பூப்பறித்தாள்
ஆடை நெய்தான்
கூடை முடைந்தாள்
பானை வனைந்தான்
ஓவியம் வரைந்தார்
சுவர் எழுப்பினான்
மாலை தொடுத்தாள்

தாவர உறுப்புப் பெயர் மரபு

மாவிலை
பனையோலை
தென்னங் கீற்று
முருங்கைக் கீரை
வேப்பந்தழை
சோளத் தட்டை
நெற்றாள்
வாழைத்தார்
முருங்கைப் பிஞ்சு
வெள்ளரிப் பிஞ்சு
கத்தரி நாற்று
தென்னம் பிள்ளை
வாழைக்குலை

****************   *************   **********

மாணவர் செயல்பாடு:

படத்திலுள்ள பறவை மற்றும் விலங்குகளின் ஒலிமரபுச் சொற்களை எழுதுக.

பறவைகள்

மயில் அகவும்

காகம் கரையும்

புறா குனுகும்

கிளி பேசும்

விலங்குகள்

குதிரை கனைக்கும்

நாய் குரைக்கும்

****************   ************   *************

மதிப்பீட்டுச் செயல்பாடு:

1. ஒலி மரபுச்சொல்லை வட்டமிடுக:

அ. பால் பருகினான்
ஆ. மாவிலை
இ. சிலந்தி வலை
ஈ. காகம் கரையும்

விடை : ஈ ) காகம் கரையும்

2. பொருந்தாததைத் தெரிவு செய்க:

அ. ஆடு கத்தும்
ஆ, பாம்பு சீறும்
இ. மயில் கொக்கரிக்கும்
ஈ. யானை பிளிறும்

விடை : இ ) மயில் அகவும்

3. தவறான ஒன்றைக் கண்டறிந்து வட்டமிடுக:

அ. மா இலை
ஆ. தென்னை இலை
இ. பலா இலை
ஈ.வாழை இலை

விடை : ஆ ) தென்னை இலை

4. சரியா? தவறா? என எழுதுக.

அ. கூடை முடைந்தார். - சரி 

ஆ. சோறு தின்றான்.  - சரி

இ. மாத்திரை குடித்தான். - தவறு

ஈ. பால் பருகினான். - சரி 

5. படங்களுக்குப் பொருத்தமான வினைமரபுச் சொற்களை எழுது

* பூப்பறித்தான்

* பால் பருகினர்

* கூடை முடைந்தார்

* ஆடை நெய்தார்.

* பூத்தொடுத்தார்

* ஓவியம் வரைந்தனர்.

6. மரபுச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ. சிலந்தி வலை - சிலந்தி வலையில் ஈ சிக்கிக்கொண்டது.

ஆ. கத்தரி நாற்று - வயலில் கத்தரி நாற்று பசுமையாக இருந்தது.

இ. பால் பருகினார் - தினமும் காலையில் அப்பா பால் பருகினார்.

ஈ. ஆடை நெய்தான் - திருவிழாவிற்கு நெசவாளன் ஆடை நெய்தான்.

****************   ************   *************

Post a Comment

0 Comments