பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 , வினா , விடை வகைகள் / 10th TAMIL - EYAL 5 - KARKANDU - VINA , VIDAI VAKAIKAL

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

முன்னுரிமைப் பாடம் 

இயல் - 5 , கற்கண்டு 

வினா , விடை வகைகள் 

***************   **************   ***********

வணக்கம் அன்பு நண்பர்களே ! இன்று நாம் பார்க்க உள்ள பாடம் கல்வி என்னும் பெருந்தலைப்பின் கீழ் அமைந்துள்ள ' வினா விடைவகைகள் '  ஆகும்.

முதலில் பாடலிற்கான பொருளை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவு விளக்கத்தில் காண்போம்.




இனி , பாடப்பகுதியை விரிவாகக் காண்போம் !

  பல்வேறு சூழல்களில் வினாக்கள் வினவ்கிறோம். விடைகள் கூறுகிறோம் . மொழியின் வளர்ச்சி என்பது வினவுவதிலும் , விடையளிப்பதிலும் கூட இருக்கிறது. அவற்றைப் பற்றி நன்னூலார் விளக்குகிறார்.

வினா வகை 

1 ) அறிவினா 

2 ) அறியா வினா 

3 ) ஐயவினா 

4 ) கொளல்வினா 

5 ) கொடை வினா 

6 ) ஏவல் வினா 

 அறிவினா 

             தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது.

மாணவரிடம் ' இந்தக்கவிதையின் பொருள் யாது ? ' என்று ஆசிரியர் கேட்டல்.

அறியா வினா

         தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது வினா.

ஆசிரியரிடம் இந்தக் கவிதையின் பொருள் யாது ? என மாணவர் கேட்டல்.

ஐய வினா 

    ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது.

இச்செயலைச் செய்தது மங்கையா ? மணிமேகலையா ? என வினவுதல்.

கொளல்வினா

                  தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது.

' ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா ?' ்என்று நூலகரிடம் வினவுதல்.

கொடை வினா 

       பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது வினா.

' என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன.உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா ? ' என்று கொடுப்பதற்காக வினவுதல்.

ஏவல் வினா

            ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது.

   " வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா ? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்.


விடைவகை

       சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை என்று விடை எட்டு வகைப்படும்.

                முதல் மூன்று வகையும் நேரடி விடைகளாக இருப்பதால் வெளிப்படை விடைகள் எனவும் அடுத்த ஐந்து விடைகளும் குறிப்பாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனவும் கொள்ளலாம்.

சுட்டு விடை -  சுட்டிக் கூறும் விடை

 ('கடைத்தெரு எங்குள்ளது?' என்ற வினாவிற்கு, 'வலப்பக்கத்தில் உள்ளது' எனக் கூறல்.

மறை விடை  - மறுத்துக் கூறும் விடை

 'கடைக்குப் போவாயா?' என்ற கேள்விக்குப் 'போகமாட்டேன்' என மறுத்துக் கூறல்.

நேர் விடை  - உடன்பட்டுக் கூறும் விடை

 'கடைக்குப் போவாயா?' என்ற கேள்விக்குப் ' போவேன்' என்று உடன்பட்டுக் கூறல்.

ஏவல் விடை  - மாட்டேன் என்றுமறுப்பதை  ஏவுதலாகக்  கூறும் விடை.


 இது செய்வாயா?" என்று வினவியபோது, "நீயே செய் "  என்று ஏவிக்கூறுவது.

வினா எதிர்  வினாதல் விடை - 

 வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது. 

 'என்னுடன் ஊருக்கு வருவாயா?' என்ற வினாவிற்கு 'வராமல் இருப்பேனா?' என்று கூறுவது.

உற்றது உரைத்தல் விடை 

வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறல் 

'நீ விளையாடவில்லையா?' என்ற வினாவிற்குக்  'கால் வலிக்கிறது' என்று உற்றதை உரைப்பது.

உறுவது கூறல் விடை 

 வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல் 

'நீ விளையாடவில்லையா?' என்ற வினாவிற்குக் ' கால் வலிக்கும்' என்று உறுவதை உரைப்பது.

இனமொழி விடை 

வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல் 

 "உனக்குக் கதை எழுதத் தெரியுமா?" என்ற வினாவிற்குக் "கட்டுரை எழுதத் தெரியும்" என்று விடையாகக் கூறல்.


****************   ****************   *********

வாழ்த்துகள் நண்பர்களே !

6 முதல் 12 ஆம் வகுப்பு  வரையிலான தமிழ்ப்பாடம் மற்றும் TNPSC , TRB , NEET போட்டித் தேர்வுகளுக்கான மெட்டீரியல் மற்றும் தினமும் நடைபெறும் ஆன்லைன் தேர்வு இணைப்பு , வினா விடைகள்  தேவையெனில் 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு தங்களது , பெயர் , படிப்பு , மாவட்டம் அனுப்பவும். உங்களைத் தேடி பாடங்கள் வரும். வெற்றி நமக்கே !

பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************   **************  *********

Post a Comment

0 Comments