ஏழாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
4. செய்யுளைப் பிழையின்றிச் சரியான
ஒலிப்புடன் படித்தலும் நயம் பாராட்டுதலும்
கற்றல் விளைவு.
பல்வேறு நோக்கங்கள் மற்றும் சூழல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதும்போது அதற்கேற்ற சொற்கள் (பா நயங்கள் எதுகை, மோனை, இயைபு), தொடர்கள், நிறுத்தக்குறிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தல்.
கற்பித்தல் செயல்பாடு :
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் தமிழ்மொழியைப் போற்றும்ஓசைநயமிக்க பாடலைப் படித்துப் பார்க்கலாம்.
பாடல்
"தமிழுக்கும் அமுதென்று பேர் -அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்- இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!"
மேற்கண்ட பாடலில் ஒரே ஓசையுடைய சொற்கள் குறித்து அறிவோம்.
* முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடை.
எ.கா - தமிழுக்கும்- தமிழ் இன்ப; அமுதென்று - அசதிக்கு.
* இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத்தொடை.
எ.கா. நிலவென்று - புலவர்க்கு; உயர்வுக்கு - வயிரத்தின்.
* இறுதி எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது இயைபுத்தொடை.
எ.கா. நேர்- நீர்; அமுதென்று - மணமென்று.
மாணவர் செயல்பாடு :
தோட்டம் நல்ல தோட்டம் - நம்மைச்
சொக்க வைக்கும் தோட்டம்
கூட்டமாக நாமும் - ஒன்றாய்க்
கூடி ஆடும் தோட்டம்
இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபுச் சொற்களைக் கண்டறிக.
************* ************* *************
மதிப்பீட்டுச் செயல்பாடு:
1. பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிர் இளநீரும்
- இப்பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள எதுகையை எழுதுக.
எதுகை - பனிமலர் - நனிபசு
2. தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபு நயங்களை எடுத்து
எழுதுக.
எதுகை - தமிழுக்கும் - தமிழின்பத்
மோனை - தமிழுக்கும் - தமிழின்பத்
இயைபு - பேர் - நேர்
*********** *************** ************
மதிப்பீட்டுச் செயல்பாடு - 3
பின்வரும் காப்பிய வரிகளைச் சரியான ஒலிப்புடன் படித்துக் காட்டுக.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று இவ்
அங்கண் உலகு அளித்த லான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல் நின்று தான் சுரத்தலான்
-இளங்கோவடிகள்
0 Comments