பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - இலக்கணம் - பொது - வழு , வழாநிலை , வழுவமைதி / 10th TAMIL - KARKANDU - POTHU

 

பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 4

முன்னுரிமைப் பாடம் 

கற்கண்டு - இலக்கணம் - பொது 

வழு - வழாநிலை - வழுவமைதி 

**************   **************   ***********

         வணக்கம் நண்பர்களே ! நாம் கடந்த வகுப்பில் இருதிணை , ஐம்பால் , மூவிடங்கள் பற்றி விரிவாகக் கண்டோம். இன்றைய வகுப்பில் அதன் தொடர்ச்சியாக உள்ள வழு - வழாநிலை - வழுவமைதி பற்றிக் காண்போம்.

    முதலில் நமது பெரும்புலவர். திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் கூறும் விளக்கத்தைக் காட்சிப் பதிவில் காண்போம்.



நண்பர்களே ! இனிய விளக்கத்தைக் கண்டோம். இதை எழுத்து வடிவில் காண்போம்.

    இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.

    இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.

                    இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவையும் வழு எனப்படும். அவ்வாறு இலக்கணப்பிழைகள் இல்லாதிருப்பின் அவை வழாநிலை   எனப்படும்.                                 

வழு - திணை  - செழியன் வந்தது

வழா நிலை - செழியன் வந்தான்

பால்  - கண்ணகி உண்டான்

             கண்ணகி உண்டாள்

இடம்  -   நீ வந்தேன்  -    நீ வந்தாய்

காலம்  - நேற்று வருவான் -   நேற்று வந்தான்

வினா - ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ ? பெரியதோ என்று கேட்டல்.

  இரு விரல்களைக் காட்டி 'எது சிறியது? எது பெரியதோ?' என்று கேட்டல்

விடை - 'கண்ணன் எங்கே இருக்கிறார்?'  என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல்.

கண்ணன் எங்கே இருக்கிறார் என்ற வினாவிற்குக் கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல்

மரபு

தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல் 

 தென்னை மரங்கள் உள்ள பகுதியைத்

 தென்னந்தோப்பு என்று கூறுதல்


வழுவமைதி

        இலக்கணமுறைப்படி பிழையுடையது
எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என   ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.

1. திணை வழுவமைதி

    "என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப்
பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.

2. பால் வழுவமைதி

"வாடா இராசா, வாடா கண்ணா" என்று
தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது
பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின்
காரணமாக, பெண்பால் ஆண்பாலாகக்
கொள்ளப்பட்டது.

3. இட வழுவமைதி

மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது,"இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்" என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.

4. கால வழுவமைதி

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம்
வருகிறார்.

இத்தொடர், குடியரசுத் தலைவர்
நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில்
அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம்.

5. மரபு வழுவமைதி

"கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும்"- பாரதியார்.
குயில் கூவும் என்பதே மரபு, குயில்
கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக்
கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

*****************   *************  ************

வாழ்த்துகள் நண்பர்களே !

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************   ***************  **********

Post a Comment

0 Comments