ஆறாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
வினாக்களும் விடைகளும்
1,பாடலை நிறைவு செய்தல்
கற்றல் விளைவு :
கற்பனையின் அடிப்படையில் கதைகள், கவிதைகள், கடிதங்கள் எழுத அனுமதித்தல், அவற்றை ஊக்குவித்தல்,
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம்:
மாணவர்களே! நீங்கள் பறவைகளையோ, விலங்குகளையோ, பூக்களையோ பார்த்திருப்பீர்கள். அவை குறித்து நீங்கள் விரும்பும் வண்ணம் உங்கள் கற்பனைக்கு ஏற்ப அழகுடன் நீங்களே பாடலாக எழுதமுடியும். அவ்வாறான பாடலை எவ்வாறு நிறைவு செய்ய வேண்டும் அல்லது முழுமையாக எழுத வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோமா?
மாணவர்களே
நாம், பொருள் / பறவை / விலங்கு ஆகியவற்றின் தோற்றம், நிறம், வடிவம், அழகு, செயல்கள் போன்றவற்றைப் பற்றி எழுதலாம். எடுத்துக்காட்டாக நமது தேசியப் பறவையான மயிலின் அழகை வருணித்து எவ்வாறு பாடலை எழுதலாம், நிறைவு செய்யலாம் என்பதை உற்றுக் கவனியுங்கள்.
அழகுக் கொண்டை மயில்
அகவும் வண்ண மயில்
நீண்ட கழுத்து மயில்
நீளத் தோகை மயில்
தத்தி நடக்கும் மயில்
தாவிப் பறக்கும் மயில்
கொத்தி உண்ணும் மயில்
கொஞ்சி மகிழும் மயில்.
இப்பாடலில், அழகு - அகவும், நீண்ட-நீள, தத்தி-தாவி,கொத்தி-கொஞ்சி ஆகிய
சொற்களைப் பாருங்கள். ஒத்த ஓசையுடைய சொற்களாகவே உள்ளன. ஆம்தானே குழந்தைகளே!
எல்லா வரியிலும் மயில் என்னும் சொல் இடம்பெற்றிருப்பதைக் கவனியுங்கள். அச்சொல் நாம் சொல்ல வந்த மயில் என்னும் பொருளை ஒவ்வொரு முறையும் நினைவூட்டுகிறது அல்லவா?
பாடலைப் படிக்கும்போதும் பாடும்போதும் இவை போன்ற சொற்கள் இனிய ஓசையைத் தரும்.
************** ************* *************
மதிப்பீட்டுச் செயல்பாடு:1
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பின்வரும் பாடலை நிறைவுசெய்க.
(பிடிக்குமே, நாய்க்குட்டி, உண்ணுமே, செல்லமே, ஆட்டுமே, காவல்)
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றியுள்ள நாய்க்குட்டி
வாலை வாலை ஆட்டுமே
வீட்டை காவல் காக்குமே
பாலும் சோறும் உண்ணுமே
திருடன் வந்தால் பிடிக்குமே
எங்களுக்குச் செல்லமே
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றியுள்ள நாய்க்குட்டி.
மதிப்பீட்டுச் செயல்பாடு : 2
வண்ணங்களின் பெயரால் பாடலை நிறைவு செய்க. நீட்டித்து எழுதுக.
கொட்டும் பனித்துளி வெள்ளை
கொதிக்கும் சோறும் வெள்ளை
கரையும் காக்கை கருப்பு
கண்ணின் மணியும் கருப்பு
வெண்டைப் பிஞ்சு பச்சை
வெட்டுக்கிளியும் பச்சை
அசையா வானம் நீலம்
ஆர்க்கும் கடலும் நீலம்
மாலை வெயில் மஞ்சள்
வளரும் மதியும் மஞ்சள்
மதிப்பீட்டுச் செயல்பாடு:2
அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை முறைப்படுத்திப் பாடலை நிறைவு செய்க
அழகிய தோட்டம்
தோட்டம் நல்ல தோட்டமே
பசுமை நிறைந்த தோட்டமே
பச்சைக் காய்கறிகள் காய்க்குமே
(காய்க்குமே - காய்கறிகள்- பச்சைக்)
இனிக்கும் பழங்கள் பழுக்குமே
இனிக்கும்- பழுக்குமே- பழங்கள்)
வண்ணப் பூக்கள் பூக்குமே
பூக்குமே -பூக்கள்- வண்ண)
வாசம் நன்கு வீசுமே
வாசம்- வீசுமே-நன்கு)
செயற்கை உரங்கள் தவிர்ப்போமே
(தவிர்ப்போமே- செயற்கை-உரங்கள் )
இயற்கை உரங்கள் சேர்ப்போமே
(இயற்கை-சேர்ப்போமே-உரங்கள் )
நம் உடல்நலத்தைக் காப்போமே
(காப்போமே-நம்-உடல் நலத்தைக்)
தோட்டம் நல்ல தோட்டமே
எங்கள் வீட்டுத் தோட்டமே.
0 Comments