ஆறாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
வினாக்களும் விடைகளும்
செயல்பாடு - 2
எதிர்ச்சொல் எழுதுதல்
கற்றல் விளைவுகள்:
ஒருவர் மொழியின் நுட்பமான கூறுகளை மனத்தில்கொண்டு தங்களுக்கான சொந்த மொழியைக் கட்டமைத்தல்.
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம் :
எதிர்ச்சொல் என்பது ஒரு சொல்லுக்கு நேரெதிரான / மாறுபட்ட பொருளைக் கொண்டுள்ள சொல்லாகும்.
எடுத்துக்காட்டு :
இரவு X பகல்
இன்பம் X துன்பம்
மேல் X கீழ்
உண்டு X இல்லை
முன் X பின்
சரி X தவறு
இச்சொற்கள் ஒவ்வொன்றும் எதிர்மாறான பண்புகளைக் குறிக்கின்றன.
கற்பித்தல் செயல்பாடு
விளக்கம் :1
வெள்ளியூர் என்னும் கிராமத்தில் அழகான குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளத்தில் இரவும், பகலும் தவளைகள் தாவிக் கொண்டிருக்கும். இதைக் கேள்விப்பட்ட பச்சைப்பாம்பு ஒன்று வெளிப்படையாகத் தெரியாமலிருக்க வெள்ளை நிற அல்லிமலர் மேல் மறைவாகப் படுத்திருந்தது.
"மகளே... அதோ அந்த மேடான பகுதிக்குச் செல்லாதே, அல்லிமலர் அசைவதைப் பார்த்தால் அந்தப் பள்ளத்தில் பாம்பு இருக்கும்போலத் தெரிகிறது" என்று தவளை
அம்மா கூறியது. அதைக் கேட்காத குட்டித்தவளை ஒன்று தாமரை மலர் மேல்ஏறி, அல்லி இலையின் கீழ் இறங்கிப் பச்சைப்பாம்பின் வாலில் தாவி அமர்ந்தது.
'உஸ்' என்ற சத்தத்தைக் கேட்டு அதிர்ந்த குட்டித்தவளை பயங்கொண்டு நடுநடுங்கி, குள்ளவாத்தின் முதுகில் குதித்துத் துணிவுடன் தப்பிச்சென்றது. 'இனிமேல் அம்மாவின் பேச்சை மீறக் கூடாது' என உறுதிபூண்டது.
அன்பு மாணவர்களே! கதையைப் புரிந்து கொண்டீர்கள்தானே? இக்கதையில் அடிக்கோடிட்ட சொற்களிலிருந்து ஏதாவது ஊகிக்க முடிகிறதா?
இச்சொற்களைப் படித்துப் பாருங்கள்.
இரவு X பகல்
வெளிப்படை X மறைவு
மேடான X பள்ளமான
ஏறி × இறங்கி
மேல் X கீழ்
பயம் X துணிவு
இச்சொற்கள் ஒன்றுக்கொன்று நேரெதிர்ப் பொருளைக் கொண்டுள்ளன.
இவற்றை எதிர்ச்சொற்கள் என்பர்.
விளக்கம் : 2
"இயற்கையைப் பேணுவது இன்பமே
செயற்கையை வளர்ப்பது துன்பமே
மரங்களின் பெருக்கம் நன்மையே
மலைகளின் மறைவு தீமையே
பறவையை அழிப்பது வீழ்ச்சியே
பல்லுயிர் மதிப்பது எழுச்சியே
வனங்களைப் படைத்தால் சோலையே
வளங்களை அழித்தால் பாலையே
பாரினைப் போற்றிப் புகழ்ந்திடு
சுயநலப் போக்கினை இகழ்ந்திடு"
இப்பாடல் உங்களுக்கு நன்றாகப் புரிந்ததல்லவா?
மாணவர்களே! இப்பாடலில் பொருளும், எதிர்ப்பொருளும் உள்ள சொற்களைத்
தொகுப்போமா?
இன்பமே X துன்பமே
நன்மையே X தீமையே
வீழ்ச்சியே X எழுச்சியே
சோலையே X பாலையே
புகழ்ந்திடு x இகழ்ந்திடு
குறிப்பு :
சோலை _ மரங்கள் நிறைந்த பகுதி
பாலை - மரங்களற்ற மணல் நிறைந்த பகுதி
மதிப்பீட்டுச் செயல்பாடு:
அ) எதிர்ச்சொற்களைப் பொருத்துக.
1. நன்மை X தீமை
2. புகழ் X இகழ்
3. வெற்றி X .தோல்வி
4 . வெளிச்சம் X இருள்
5. தோன்றும் X மறையும்
ஆ) வண்ணமிட்ட சொல்லின் எதிர்ச்சொல்லைக் கொண்டு தொடரை நிறைவு செய்க
1. இளமையில் சிறப்பாகப் பயின்றால்
முதுமையில் மகிழ்ச்சி கொள்ளலாம்.
2. பறவைகள் வெளிச்சம் வந்தவுடன் இரை தேடும். இருள் சூழ்ந்தவுடன் தத்தம்
கூடுகளுக்குச் செல்லும்.
இ ) படங்களுக்கு ஏற்ற எதிர்ச்சொற்களை அட்டவணையிலிருந்து எடுத்தெழுதிப் பொருத்துக.
சூடான × குளிர்ந்த
பெரியது × சிறியது
மகிழ்ச்சி × வருத்தம்
நீளமான × குறுகிய
மூடு × திற
பாடலில் உள்ள எதிர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
அருவி
மலையின் மேலே பிறந்து வந்தேன்!
மலையின் கீழே தவழ வந்தேன்!
மேட்டில் இருந்தே இறங்குகிறேன்!
பள்ளத்தில் வந்தே விழுகின்றேன்!
கோடையில் நானே வாடி நிற்பேன்!
குளிரில் தானே மலர்ந்து செல்வேன்!
எட்டும் மரங்களை அணைக்கின்றேன்!
எட்டாக் கனிகளைத் தருகின்றேன்!
கொட்டும் அருவியாய்க் குதிக்கின்றேன்!
குழந்தைகள் என்னிடம் வாருங்கள்!
குளித்து மகிழ்ந்து செல்லுங்கள்!
விடைகள்
மேலே × கீழே
மேட்டில் × பள்ளத்தில்
கோடையில் × குளிரில்
எட்டும் × எட்டாது
************** *************** ***********
0 Comments